உங்கள் குரல் - தெருவிழா @ காங்கயம் | காங்கயம் நகராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகத்துக்கு ரூ.35 கோடி மதிப்பில் புதிய திட்டம்

By இரா.கார்த்திகேயன்

பொதுமக்கள் தாங்கள் வாழும் பகுதியில் நிலவும் பொதுப்பிரச்சினைகள் தொடர்பாக, அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘உங்கள் குரல் - தெரு விழா’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள அய்யன் வள்ளுவன் மாளிகையில், ‘உங்கள் குரல்- தெருவிழா’ நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் நகராட்சி தலைவர் ந.சூரிய பிரகாஷ், துணைத் தலைவர் ர.கமலவேணி, நகராட்சி பொறியாளர் திலீப்குமார் மற்றும் கவுன்சிலர்கள், வாசகர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். ‘இந்து தமிழ் திசை' நாளிதழின் பொது மேலாளர் து.ராஜ்குமார் வரவேற்றார்.

பொதுமக்களுடன் நகராட்சி தலைவர் ந.சூரியபிரகாஷ் கலந்துரையாடினார். நிகழ்வில் பங்கேற்ற பெரும்பாலானோர், “சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்கயம் நகரில் மாட்டுச் சந்தை நடத்த வேண்டும். தெரு விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். ஆழ்குழாய் நீர் மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். சீரான குடிநீர் விநியோகத்துக்கு வழி வகை செய்ய வேண்டும், தாமதமின்றி கட்டிட அனுமதி வழங்க வேண்டும். சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும், கட்டிமுடிக்கப்பட்ட நூலகத்தை விரைவில் திறப்பதுடன், அதில் குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும். காங்கயம் நகரில் ‘காளை’ சிலை அமைப்பதுடன், திருவள்ளுவர் சிலையையும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

தொடர்ந்து நகராட்சித் தலைவர் ந.சூரியபிரகாஷ், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து பேசியதா வது: சாக்கடை தூர்வாரவும், ஆழப்படுத்தி புதுப்பிக்கவும் நிதி கோரப்பட்டுள்ளது. நிதி கிடைத்ததும், சாக்கடை தூர்வாரப்படும். காங்கயம் நகரில் மாட்டுச்சந்தை நடத்த இரண்டரை முதல் மூன்றரை ஏக்கர் இடம் வேண்டும். ஆனால் நகராட்சியில் அந்தளவு இடம் இல்லை.

நகரை ஒட்டிய ஒன்றிய பகுதியில் இடம் ஒதுக்கித்தர கேட்டுள்ளோம். இடம் கிடைத்ததும், சந்தை நடத்தப்படும்.

காங்கயம் நகராட்சியில் புதிதாக 200 தெருவிளக்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒரு வார்டுக்கு 10 முதல் 15 தெருவிளக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கயம் புறநகர் பகுதிகளில் கூடுதலாக தெருவிளக்குகள் கோரியிருப்பதால், அங்கு கூடுதலாக ஒதுக்கீடுசெய்யப்படும்.

நிகழ்வில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள்.

காங்கயம் நகராட்சியில் பேட்டரி வாகனங்கள் மூலமாக வீடு, வீடாககுப்பை சேரிக்கப்படுகிறது. மக்கும் குப்பையை நுண் உரக்கிடங்கு மையத்துக்கு அனுப்பி, அதனை உரமாக்கி விவசாயத்துக்கு பயன்படுத்துகிறோம். மக்காத குப்பையான பாலித்தீன் கழிவுகள் சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகின்றன. மின்னணுக் கழிவுகளை முறையாக கையாள நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காங்கயத்தில் சீரான குடிநீர் விநியோகம் தொடர்பாக ரூ.35 கோடி மதிப்பில் புதியதிட்டம் தயாராகி வருகிறது. அது நிறைவேறும் பட்சத்தில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. காங்கயம் ரவுண்டானா பகுதியில் காளை சிலை அமைக்க நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். ரூ.6.5 கோடி மதிப்பில், சாக்கடை கால்வாய் இல்லாத பகுதிகளில் சாக்கடை கால்வாய் வசதி செய்து தரப்படும். நகரில் உள்ள 8 பள்ளிகளும், ஊராட்சி ஒன்றியபள்ளிகளாக உள்ளதை நகராட்சி பள்ளிகளாக மாற்றப்படும், என்றார்.

தொடர்ந்து அவர் பேசும்போது,“இந்து தமிழ் திசை நாளிதழ் முன்னெடுத்துள்ள, இந்த நிகழ்வு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இனி மாதந்தோறும் 2-வது ஞாயிற்றுக்கிழமைகளில் இதுபோன்ற குறை கேட்பு கூட்டத்தை நகராட்சி அலுவலகத்தில் நாங்கள் நடத்துவோம்” என்றார்.

இதனைநகராட்சி கவுன் சிலர்கள் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர்.

நகராட்சி பொறியாளர் திலீப்குமார் கூறியதாவது: குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்காக, ரூ. 35 கோடிக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 குடிநீர் தொட்டிகள் உள்ளன.

புதிதாக 4 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படும். மொத்தம் 11 குடிநீர் தொட்டிகள் மூலம் ஒரே நேரத்தில் நிரப்பப்பட்டு, தினசரி குடிநீர் விநியோகம் முறைப்படுத்தப்படும். விரைவில் காங்கயம் நகரில் நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்படும், என்றார்.

அன்பாசிரியர் மா.விஜயலட்சுமி நிகழ்வை தொகுத்து வழங்கினார். ஆசிரியர் சு.மூர்த்தி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் குறித்து பேசும்போது,‘‘ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் கூட கேள்வி கேட்க தயங்கும் இன்றைய சூழலில், நகராட்சி தலைவரிடமே கேள்வி எழுப்பும், மக்களாட்சியை அமல்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு உள்ளது” என நெகிழ்ந்தார்.

நிகழ்வில் காங்கயம் நகராட்சி பாரதியார் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் அனு கீர்த்தனா, கீர்த்த வர்ஷினி, அபிநயா மற்றும் சபர்னிகா ஆகியோர் பங்கேற்று, தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண் பாடினர். இவர்களுக்கு, புத்தகங்கள் வழங்கி ஊக்கமளிக்கப்பட்டது. ‘உங்கள் குரல்- தெருவிழா’ நிகழ்ச்சியை அவிநாசிபாளையம் ஏ.ஜி. கலை அறிவியல் கல்லூரி இணைந்து வழங்கியது.

தியாகராஜன், 5-வது வார்டு

புதுநகரில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. சாக்கடையை தூர்வாரினாலும், மது பாட்டில்கள் மற்றும் பாலித்தீன் கழிவுகளால் கழிவு நீர் செல்ல முடிவதில்லை. எங்கள் பகுதியில் தரைப்பாலத்தின் உயரத்தை உயர்த்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரெங்கநாயகி, 10-வது வார்டு

எனது கணவர் உயிரிழந்த நிலையில், விதவை உதவித்தொகை கோரியிருந்தேன். இதுவரை கிடைக்கவில்லை. வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறோம். எனது மகன் மற்றும் மகள்கள், என்னை நம்பி உள்ளனர். உதவித்தொகை கிடைக்கபெறாத நிலையில் வாழ்வின் ஜீவனத்துக்கு சிரமப்படுகிறோம். யாரை அணுக வேண்டும் என்றும் தெரியவில்லை. நகராட்சித் தலைவர் உதவித்தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெங்கடாச்சலம், 17-வது வார்டு

குடிநீர் குழாய் உடைந்தது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் தெருவிளக்கு வசதியை நகரில் ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் அந்தந்த பகுதியில் ஆழ்குழாய்களை தன்னிச்சையாக இயக்குவதால், குடிநீர் வீணாகிறது. நகராட்சி அதிகாரிகள் பொறுப்பேற்று இயக்க வேண்டும்.

ஈஸ்வரி, 13-வது வார்டு

6-வது வீதியில் அய்யாசாமி காலனியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. ஒரேயொரு தெருவிளக்கு தான் உள்ளது. ஆழ்குழாய் தண்ணீரும் கிடைப்பதில்லை. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஆகவே, பள்ளி செல்லும் நேரங்களில் ஆழ்குழாய் நீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அபிநயா, பள்ளி மாணவி

காங்கயம் நகராட்சி பாரதியார் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சுற்றுச்சுவர் வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும். பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்