உங்கள் குரல் - தெருவிழா @ கருங்குழி | கருங்குழிக்கு பாலாற்று குடிநீரை கொண்டுவர நடவடிக்கை

By செய்திப்பிரிவு

பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் நிலவும் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக, அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகளின்கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக ‘இந்துதமிழ் திசை’ நாளிதழ் ‘உங்கள் குரல் - தெரு விழா'என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சியில் இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் கோ.தசரதன், துணைத் தலைவர் சங்கீதா சங்கர், பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன், பேரூராட்சி உறுப்பினர்கள், பல்வேறு சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர்கோ.தசரதனுடன் பொதுமக்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் குடிநீர், சாலை, மின் விளக்கு வசதிகள், கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு, நவீன எரிவாயு தகன மேடைக்கான இடத்தை மாற்றுதல், சிறுவர்பூங்காக்களை அமைத்தல், குரங்கு, நாய்மற்றும் பன்றித் தொல்லைகளைக் கட்டுப்படுத்துதல், விபத்தைத் தவிர்க்க மேம்பாலம் அமைத்தல், குப்பையை அகற்றி சுகாதாரமான முறையில் மறுசுழற்சி செய்தல், கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்துதல், புதிய ரேஷன் கடை தொடங்குதல், கருங்குழியில் ரயில் நிற்கஏற்பாடு செய்தல், போக்குவரத்து காவலர்களை நியமித்தல், பட்டா வழங்குதல், கஞ்சா விற்பனையைத் தடுத்தல், போலீஸ் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இந்தப் புகார்களைக் கேட்ட பேரூராட்சி தலைவர் கோ.தசரதன் பொதுமக்களுக்கு பதில் அளித்துப் பேசியது:

பொதுமக்கள் பல்வேறு தேவைகளைத் தெரிவித்துள்ளனர். இவற்றில் பேரூராட்சி நிதி நிர்வாகத்துக்கு உட்பட்டு தீர்க்க முடிந்த பணிகள் உடனடியாக தீர்க்கப்படும். அரசிடமிருந்து நிதியைப் பெற்றுத் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கருங்குழி பேரூராட்சி வளர்ந்து வரும் பேரூராட்சியாக உள்ளது. இந்தப் பேரூராட்சியில் ‘அம்ருத் 2.0' திட்டத்தின்கீழ் பூதூர் பகுதியிலிருந்து பாலாற்றுக் குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

ஞானகிரி ஈஸ்வரன் பேட்டை பகுதியில் உள்ள இடுகாட்டுப் பகுதியில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டாம் என்று பலர்கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக வருவாய்க் கோட்டாட்சியரிடமும் மனு அளித்துள்ளீர்கள். இது தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வந்து ஆய்வு செய்யும்போது உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.அவர்களிடமும், பேரூராட்சி அலுவலர்களிடமும் கலந்துபேசி மக்களுக்கு பாதிப்பு இல்லாதவகையில் இந்த நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

செயல் அலுவலர் மா.கேசவன் பேசியதாவது:

இந்தப் பேரூராட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை வசதி, மின் விளக்கு வசதி, கழிவுநீர் வடிகால் உள்ளிட்டதேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றப்படும். சுகாதாரமான முறையில் பேரூராட்சியை நடத்துவதற்கும் நடவடிக்கைமேற்கொள்ளப்படும். பேரூராட்சி தலைவர்,உறுப்பினர்கள் பொறுப்பேற்று 3 மாதங்கள்தான் ஆகின்றன. இந்த குறுகிய காலத்தில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன.

கிராம சபைக் கூட்டங்களைப் போல் பேரூராட்சிகளில் வார்டு சபை, ஏரியா சபை உள்ளிட்ட கூட்டங்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாக ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் சார்பில் பேரூராட்சியில் கிராம சபை போன்ற ஒரு கூட்டம் நடத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் பேரூராட்சி அலுவலகத்துக்கு வரலாம். தங்களின் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம். அதற்கு உரியத் தீர்வு காணப்படும். நாங்கள்எப்போதும் மக்களைச் சந்திக்கத் தயங்குவதில்லை. அதன் அடிப்படையில் இந்த விழாவையும் நடத்த ஒப்புதல் அளித்தோம்.

'அம்ருத் 2.0' திட்டத்தில் பாலாற்று குடிநீரை கருங்குழி பேரூராட்சிக்குக் கொண்டு வர திட்ட மதிப்பீட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. மத்திய அரசு திட்டத்தின் மூலம் இந்தப் பணிகளைச் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். ஓராண்டுக்குள் இதைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கருங்குழியில் குடிநீர் பிரச்சினையே இருக்காது.

இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் தெரிவித்துள்ள பல்வேறு தேவைகளைப் பற்றி பேரூராட்சி தலைவருடன் ஆலோசித்து அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

கருங்குழி பேரூராட்சியில் பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிலும் பொதுமக்கள் ஏராளமான புகார்களை அளித்து வருகின்றனர். அவற்றுக்கும் தீர்வு கண்டு வருகிறோம். மக்கள் தங்கள் புகார்களைத் தொடர்ந்து அதில் தெரிவிக்கலாம். பேரூராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம் என்றார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சா.அரங்கநாதன், அன்பாசிரியர் கஜபதி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை தமிழாசிரியர் இரா.ஹேமலதா தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியை மதுராந்தகம், வி.எம்.வித்யகேந்திர மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் பதுத்தர், ஆசன் அரிசி அங்காடி உரிமையாளர் ராஜ்குமார், டி.ஜெ.ஏ. ஜூவல்லரி உரிமையாளர் ரவிநாராயணன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

கே முருகன், மேலவளம்

எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் மின்விளக்கு இல்லாததால் விபத்துகளும் சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. குற்றங்கள் தினம் தினம் அதிகரிப்பதால் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும்.

எஸ்.குமார், ஞானகிரி ஈஸ்வரன் பேட்டை

எங்கள் பகுதியில் இடுகாடும், 8 இடங்களில் சுடுகாடுகளும் உள்ளன. எங்கள் பகுதி இடுகாட்டில் எரிவாயு தகன மேடை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனைக் கைவிட வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் எங்கள் பகுதியில் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படும். ஏற்கெனவே உள்ள ஏதாவது ஒரு சுடுகாட்டில் இந்த திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றார். இதே கோரிக்கையை ஏராளமானோர் வலியுறுத்தினர்.

ஜனார்த்தனன், 8-வது வார்டு

கருங்குழி ஏரியிலிருந்து கோட்டக்கரை வரை செல்லும் பாசன கால்வாய் தூர்ந்துள்ளது. ஏரியின் உபரிநீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் கால்வாயைச் சீரமைக்க வேண்டும். அதில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளும் வெளியூர்களிலிருந்து சென்னை செல்லும் பேருந்துகளும் கருங்குழியில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

குப்புசாமி, 6-வது வார்டு

எங்கள் பகுதியில் உள்ள கிணறு அசுத்தமாக உள்ளது. அதைச் சீரமைக்க வேண்டும். மேலும் கழிவுநீர் கால்வாய் வழியாகச் செல்லாமல் கிணற்றைச் சுற்றித் தேங்கி கிணற்று நீருடன் கலக்கிறது. எங்களுக்கு விநியோகம் செய்யப்படும் தண்ணீரில் கடும் துர்நாற்றம் வீசுகிறது; அதை சரி செய்ய வேண்டும்.

- இரா.ஜெயபிரகாஷ், பெ.ஜேம்ஸ்குமார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்