சென்னை: முதன்முதலாக பேருந்து இயக்கப்பட்ட காலம் முதல் நடத்துநர் - பயணிகள் இடையேயான மோதல்போக்கு தொடர் கதையாகவே இருந்து வருகிறது. அண்மையில் பயணி ஒருவர் தாக்கியதில் நடத்துநர் உயிரிழந்த சம்பவம், இந்த மோதலைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான அவசியத்தை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட தகவலின்படி, தமிழகத்தில் 10,417 வரையறுக்கப்பட்ட வழித்தடங்களில் 20,304 அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் நாள் ஒன்றுக்குசுமார் 1.55 கோடி பேர் பயணிக்கின்றனர்.
நடத்துநர் பணியில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஓட்டுநர், பயணச்சீ்ட்டு பரிசோதகர் என மற்ற ஊழியர்களை ஒப்பிடும்போது பயணிகளுடன் அதிகளவு தொடர்பில் இருப்பவர்கள் நடத்துநர்களே.
எனினும், இந்த அதிக தொடர்பே ஒரு நடத்துநரின் உயிருக்கு ஆபத்தாக முடிந்துள்ளது. கடந்த 14-ம் தேதி சென்னையில் இருந்து விழுப்புரம் சென்ற அரசு பேருந்தில், மது போதையில் இருந்த பயணி தாக்கியதில் நடத்துநர் பெருமாள் என்பவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மட்டுமின்றி கடந்த சில நாட்களாக சில்லரை பிரச்சினை, மாணவர்கள் தகராறு என நடத்துநர்கள் பல்வேறு சம்பவங்களில் தாக்கப்பட்ட நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் பரவலாக நடந்ததைக் காண முடிகிறது.
இவ்வாறான சிக்கல்களுக்குத் தீர்வு என்ன என்பது பற்றி சிஐடியு சங்கங்களுடன் இணைந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் அ.சவுந்தரராசன் கூறியதாவது:
பேருந்து தினம், ‘ரூட்டு தல’
குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டுமே தகராறு நடக்கிறது. பேருந்து தினம், ‘ரூட்டு தல’ என பல்வேறு வழிகளில் பேருந்து எனும் பொதுச் சொத்தை தங்களுக்கான ஒரு களமாக்க பயணிகள் முயற்சிக்கின்றனர். இதுவே மோதலுக்கு காரணமாகிறது. நடத்துநர், பயணிகள் என இரு தரப்பினரும் பொறுப்புடன் விதிகளைப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும்.
தொலைநோக்குப் பார்வையுடன் போக்குவரத்து நெரிசலை ஆராய்ந்து அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும், திட்டம் மற்றும் மேம்பாட்டுப் பிரிவை மேலும் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்துதெரிவித்த நடத்துநர்கள் சிலர், ‘‘பயணிகளின் எண்ணிக்கை வரம்பு, சரியான நேரத்தில் பணிமனைக்குச் செல்லுதல் போன்ற விதிகளைப் பின்பற்றினால் மட்டுமே பணியில் தொடர்ந்து நீடிக்க முடியும். அரசும், காவல்துறையும் மாணவர்களையும், மக்களையும் பகைத்துக் கொள்ளாது. இதனாலேயே பழி, எங்கள் மீது சுமத்தப்படும். எங்களிலும் சிலர் மோதலுக்கு காரணமாகவும் இருந்துள்ளனர் என்பது மறுப்பதற்கில்லை. முடிந்தளவு நாங்களும் பயணிகளின் செயல்களுக்கு எதிர்வினையாற்றுவதில்லை. முடியாத பட்சத்தில், ஏன்? என நாங்கள் கேட்பதைக்கூட அவர்களால் சகித்துக் கொள்ள முடிவதில்லை’’ என்றனர்.
பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘ஒருவித அதிகார தோரணையில் நடத்துநர் எங்களை அணுகுவதே கோபத்தை ஏற்படுத்துகிறது. இருதரப்பினருமே ஒருவரை ஒருவர் அணுகும் முறையில் சற்று மென்மையான போக்கைக் கடைபிடிக்க வேண்டும்’’ என்றனர்.
ஒருவர் மீது ஒருவர் அதிகாரம்
மனநல நிபுணரும் தேசிய குற்றப்புலனாய்வுத் துறை இணை இயக்குநருமான டாக்டர் ஹேமபிரியா ஜெயபால் கூறும்போது, ‘‘பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் மக்கள், பேருந்துகளில் நெரிசலில் ஒருவித பதற்றத்துடனே பயணிக்கின்றனர். ஆனால் பேருந்துகளிலோ அதே மன அழுத்தத்துடன் பணிச்சுமையுடனும் காணப்படுகிறார் நடத்துநர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் அதிகாரத்தை செலுத்த முயற்சிப்பதே மோதலுக்கு காரணமாகிறது.
மேலும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு தரமான பேருந்துகளை இயக்குவது மக்களின் மனநிலையில் சிறிது மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மதுபோதையில் இருப்பவர்களை பேருந்துகளில் அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட வேண்டும். நடத்துநர்களுக்கு போதிய ஓய்வும், பயணிகளைக் கையாளும் பயிற்சியும் வழங்கப்பட வேண்டும்’’ என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஒரு திட்டம் அமல்படுத்தப்படும் பட்சத்தில் முதல்கட்டமாக ஓட்டுநர், நடத்துநர்களுக்குத் தான் அது தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. அதை அவர்களும் பின்பற்றி நடக்கின்றனர். அதேநேரம், நடத்துநர்கள் தாக்கப்பட்டால் அவர்களுக்கு உறுதுணையாக துறை உடன் நிற்கும். பணிச்சுமை, மன அழுத்தம் உள்ளிட்டவற்றை சீர் செய்ய ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
இனி இதுபோன்ற துரதிருஷ்டமான சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். தேவையான வழித்தடங்களில் அதிக பேருந்துகளை இயக்குவது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago