நான் ஜெயித்துவிட்டால் சும்மா உட்காந்துவிட மாட்டேன். மக்களிடம் இருந்து இப்போதே பல கேள்விகள் இருக்கிறது. அந்த மக்களுக்காக இறங்கி வேலை செய்தே ஆகவேண்டும் என்று திருச்சி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் திமுக சார்பில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிடுகிறார். பிரச்சாரத்துக்கு இடையில் அவர் தி இந்து (தமிழ்) இணையதளத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி.
உங்கள் தொகுதியில் பிரச்சாரம் எப்படி இருக்கிறது?
திமுகவின் சாதனைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறேன். இங்கு போடப்பட்டு இருக்கும் சாலைகள் எல்லாமே திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்டவை தான். மக்களிடமே நாங்கள் போட்ட ரோட்டில் உரிமையோடு ஓட்டு கேட்க வருகிறோம். இதே ரோட்டில் தான் மற்ற கட்சி வேட்பாளர்களும் வாக்கு கேட்டு வருகிறார்கள். இதையெல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறேன். இரவு 9:30 மணிக்கு மேல் பிரச்சாரத்திற்கு சென்றால் இவ்வளவு கூட்டம் கூடாது, இவ்வளவு கூட்டம் வருகிறது என்றால் மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என என்னோடு வரும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தார்கள். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
திருவெறும்பூர் தொகுதிக்காக நீங்கள் முன்வைக்கும் பிரத்யேக திட்டங்கள் என்ன?
சாலை வசதி, சாக்கடை வசதி, குடிநீர் பிரச்சினை, காவேரி பிரச்சினை இவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறது. கிராமங்களில் எல்லாம் பெண்களுக்கான டாய்லெட் பிரச்சினை இருக்கிறது. இவற்றை எல்லாம் சரிசெய்து கொடுப்பேன் என சொல்கிறேன். அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்போம். அதனைத் தொடர்ந்து சர்வீஸ் ரோடு பிரச்சினை இருக்கிறது. பால்பண்ணை - துவ்வாக்குடி வரை நிறைய சாலை விபத்துகள் நடக்கிறது. அதை சரி செய்து கொடுப்போம் என்று நாங்கள் தேர்தல் அறிக்கையிலேயே சொல்லியிருப்பதால் அங்குள்ள மக்கள் இன்னும் சந்தோஷமாக இருக்கிறார்கள். திமுக ஆட்சிக் காலத்தில் 12 ஐ.டி நிறுவனங்கள் இங்கு வரும் என்று சொன்னோம். 2 நிறுவனங்கள் வந்தன. அதற்குள் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. இன்றைக்கு யாரும் அதை கண்டுகொள்வதில்லை. அந்தப் பக்கம் போகும் போது ஐ.டி நிறுவனங்கள் என்றால் அதைச் சுற்றி உள்ள இடங்கள் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் மோசமாக இருப்பதால் அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பேன்.
முக்கியமாக இங்கு தொழிலாளர்கள் பிரச்சினை நிறைய இருக்கிறது. உடன்குடி திட்டத்தை அப்படியே அதிமுக ஆட்சியில் நிறுத்திவிட்டார்கள். அதை நம்பி பலர் ஏமாற்றமடைந்துவிட்டார்கள். அந்த தொழிலாளர்கள் பிரச்சினையை நிலைக்குழு அமைத்து சரிசெய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் கருணாநிதி சொல்லியிருக்கிறார்.
முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறீர்கள். எப்படி இருக்கிறது அரசியல் களம்?
89-ல் அப்பாவுடன் போய் வேடிக்கை பார்ப்பேன். அப்பா இறந்தவுடன் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பொருளாளர் ஸ்டாலினுடன் அனைத்து இடங்களுக்கும் செல்வேன். அவர் நிர்வாகிகளுக்கு என்ன திட்டமெல்லாம் சொல்கிறார் என்று தெரியும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தகுந்தாற் போல் அந்த திட்டம் மாறும். எனக்கு அதெல்லாம் இன்று பயன்படுகிறது.
இப்போது சமூகவலைதள இளைஞர்களும் எனக்கு ஆதரவாக, நம்ம வயசு பையன் ஒருவன் நிற்கிறான் என்று துணை நிற்கிறார்கள். "அனைவருடன் நேர்க்கோட்டில் பழகக் கூடிய ஆள் இவர். எங்களுடன் பழகும் போது இவருக்கு பின்னால் இவ்வளவு பெரிய பாரம்பரியம் இருக்கும் என தெரியாது" என்று எந்த ஒரு கட்சி சார்பாகவும் இல்லாமல் பிரசுரங்கள் தயார் செய்து ஐ.டி இளைஞர்கள் எனக்காக கொடுக்கிறார்கள். நம்ம பையனாக இருக்கிறான், என்ன பிரச்சினை என்றாலும் இவனிடம் உரிமையோடு போய் கேட்கலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
வெளியூர்காரர் ஜெயித்தால் ஒன்றும் செய்ய மாட்டார் என்று எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் இருக்கிறதே..
அப்படித் தான் எதிர்க்கட்சியினர் பிரச்சாரம் செய்கிறார்கள். நான் அதை "ஜெயித்தால் சென்னைக்கு போய்விடுவேன் என்று நீங்களே உறுதிப்படுத்திவிட்டீர்கள். முதலில் அதற்கு நன்றி. இதே பாலாஜி நகர் 6-வது குறுக்கு தெருவில் தான் குடும்பத்தோடு குடியிருக்கிறேன். ஜெயித்தவுடன் கண்டிப்பாக சென்னைக்குத் தானே போவேன். சட்டசபையில் போய் வாதாடி உங்களுக்காக திட்டங்கள் கொண்டுவருவதற்காக தான் இருக்கும்" என்று சொன்னேன். இப்படி பேசியதால் மக்களும் என் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு வந்துவிட்டார்கள். உள்ளூர்க்காரன் நீங்கள் என்ன பண்ணினீர்கள் என்று மக்கள் கேட்கிறார்கள்.
ஸ்டாலின் பிரச்சாரம் பண்ணும் போது கூட "என்னோட பையனை இந்த தொகுதியில் நிறுத்தியிருக்கிறேன்" என்று சொன்னார். அது இங்குள்ள நிர்வாகிகளிடமும், மக்களிடமும் ரீச்சாகி இருக்கிறது. நான் ஜெயித்துவிட்டால் சும்மா உட்காந்துவிட மாட்டேன். மக்களிடம் இருந்து இப்போதே பல கேள்விகள் இருக்கிறது. அந்த மக்களுக்காக இறங்கி வேலை செய்தே ஆகவேண்டும்.
அதிமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி, பாமக ஆகியோரது பிரச்சார வியூகங்களை எப்படி சமாளிக்கிறீர்கள்?
இது திமுகவின் கோட்டை மாதிரி தான். கடைசி தேர்தலில் கூட 4800 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் தோற்றிருக்கிறார். தேமுதிக எம்எல்ஏவாக இருப்பவரும் இங்கு ஒன்றும் பண்ணவில்லை. ஏனென்றால் ஜெயித்த சிலநாட்களிலேயே கூட்டணி பிரிந்துவிட்டது. நான் யாரையும் எதிர்த்து பிரச்சாரத்தில் பேசுவதில்லை. ஆனால், எம்.எல்.ஏவாக இருப்பவர் நல்லவராக மட்டுமன்றி வல்லவனாகவும் இருக்கவேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் போய் சாதித்துவிட்டு வர வேண்டும். அதை என்னால் பண்ண முடியும். அதிமுகவினரால் முதல்வரின் வீட்டு வாசல் வரைக்காவது போய் வர முடியுமா என்பது சந்தேகம் தான். மந்திரியைக் கூட ஜெயலலிதா நினைத்தால் மட்டுமே பார்க்க முடியும். இங்கு நிற்பவர்கள் அனைவருக்குமே முடிவு என்ன என்பது தெரியும். ஆனால் தங்களுடைய வாக்கு வங்கியை நிரூபிக்க மட்டுமே நிற்கிறார்கள். அவர்களால் எனக்கு ஒன்றும் பாதிப்பு வராது.
இவ்வாறு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago