கோவை: தமிழகத்தின் பொருளாதாரம் பல்முனைப் பொருளாதாரமாக மாற வேண்டும், அதுதான் எனது இலக்கு என தொழில் துறையினரிடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் துறையினரை முதல்வர் ஸ்டாலின் கோவையில் நேற்று நேரில் சந்தித்து கலந்துரையாடினார். கூட்டத்தில், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வரவேற்றார். தொடர்ந்து 3 மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் துறையினரிடையே முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்புக்கு வந்து, இதுவரை 5 முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்தும் அரசினுடைய லட்சியத்தை அடைய, கோவையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைய வேண்டும்.
தமிழகத்தில் திறன்மிக்க மனிதவளத்தை மேலும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஓர் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது என்ற தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையை செயலாக்கும் விதமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (டான்சிட்கோ) போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்தில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் தங்களின் வளாகங்களில் ஆராய்ச்சிப் பூங்காக்களை நிறுவ ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தோம். அதன்படி, அறிவுசார் ஆராய்ச்சிப் பூங்கா ஒன்று கோவை பாரதியார் பல் கலைக்கழகத்தில் அமைக்கப்படும்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, இதுவரை ரூ.69,375 கோடிஅளவுக்கு முதலீடுகளும், 2 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகம் தொடர்ந்து தொழில் வளர்ச்சிப் பெற்று அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழ வேண்டும்.
தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புத்தொழில் வளர்ச்சிக்கு வழிகோலும் விதமாக 3 மண்டல அளவிலான புத்தொழில் மையங்கள் அமைக்கப்படும். ஈரோட்டில் மண்டல புத்தொழில் மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்கு மண்டல மாவட்டங்களில் இயற்கை இழைகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரியமான ஜவுளிகளின் ஏற்றுமதி அதிகளவில் உள்ள போதிலும், உலகளவில் பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப ஜவுளிகளுக்கான தேவை மிக வேகமாகவும், சீராகவும் அதிகரித்து வருகிறது. எனவே,இவ்வாறான மதிப்புக்கூட்டு ஜவுளிகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய மேம்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ள தொழில் துறையினர் முன்வர வேண்டும்.
உலகம் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டில் மூழ்கி உள்ளது. ‘சிப்' என அழைக்கப்படும் செமி-கண்டக்டர் இல்லாத மைக்ரோ எலெக்ட்ரானிக் சாதனமே இல்லை என்று சொல்லலாம். உலகளவில் மிகப்பெரிய மின்னணு உற்பத்தி நிறுவனங்களும் தங்களது ‘சிப்' தேவைக்காக சீனா, தைவான் போன்ற ஒருசில நாடுகளை நம்பியிருக்க வேண்டிய நிலைஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்தச்சூழலை நன்கு பயன்படுத்தி தமிழகத்தில் சிப் உற்பத்திக்கான முயற்சிகளை மேற்கொண்டு, மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு தொழில் துறையினர் பங்களிப்பினை மேலும் அதிகரிக்க வேண்டும்.
தமிழகத்தின் பொருளாதாரம் பல்முனைப் பொருளாதாரமாக மாற வேண்டும் என்பதுதான் என் இலக்கு. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை தொழில் துறையினர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வர்த்தகத்தில் ஏற்படும் மாற்றங்களை உள்வாங்கி செயல்பட வேண்டும்.
உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சி இவை மூன்றும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. இவை மேம்பட்டால், ஒரு மாநிலத்துக்கு ஒட்டுமொத்தமான வளர்ச்சி தானாக வந்து சேரும். இவை மூன்றையும் வலுப்படுத்துவதற்கான வழிகளை இது போன்ற சந்திப்புகளின் மூலமாகத்தான் பெற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago