டெல்லி ஜாமா மசூதியின் அடியில் இந்துக் கடவுள்களின் சிலைகள் உள்ளன: மீட்டெடுக்கக் கோரி பிரதமருக்கு இந்து மகா சபா கடிதம்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: டெல்லியின் ஜாமா மசூதியின் அடியில் இந்துக் கடவுள்களின் சிலைகள் இருப்பதாக இந்து மகா சபா புகார் கூறியுள்ளது. இவற்றை மீட்டெடுக்கும்படி வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு அச்சபையின் தலைவர் சுவாமி சக்ரபாணி கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லியை ஆண்ட முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் 1656-இல் கட்டப்பட்டது ஜாமா மசூதி. பழம்பெருமை வாய்ந்த இது, நாட்டின் பெரிய மசூதிகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்த மசூதியும் தற்போது இந்துத்துவாவினரின் குறியில் சிக்கத் தொடங்கி உள்ளது. இதற்கு முன்பாக கியான்வாபி, மதுரா ஷாயி ஈத்கா, குதுப் மினார் மற்றும் தாஜ்மகால் சிக்கியுள்ளன.

இது குறித்து இந்து மகா சபாவின் தலைவர் சுவாமி சக்ரபாணி இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், 'இதன் முன்பாக உள்ள பெரிய தரைக்கு அடியில் இந்து கடவுள்களின் சிலைகள் புதையுண்டுள்ளன. மசூதியின் படிகளுக்கு அடியிலும் இந்து கடவுள்களின் சிலைகள் புதைக்கப்பட்டுள்ளன.

எனவே, ஜாமா மசூதியின் அடியில் தொல்பொருள் ஆய்வு நடத்தப்பட வேண்டும். இதில் என்ன கிடைக்கிறது என்பது பொதுமக்களின் முன்பாக தெரிந்து விடும். இதை உடனடியாகச் செய்யப்பட வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோல், டெல்லி மீது இந்து மகா சபா புகார் கூறுவது முதன்முறையல்ல. இதற்கு முன் சுவாமி சக்ரபாணி, டெல்லியின் பெயரை இந்திரபிரஸ்தா எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார். அப்போது தான் டெல்லியில் நல்ல மழை பெய்யும் எனவும், இதனால் தலைநகர் குளிர்ந்து நாடு முழுவதும் சுபம் உண்டாகும் எனவும் கூறியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE