பேரறிவாளன் விடுதலை | “மற்ற 6 பேரையும் விடுதலை செய்யும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபடும்” - முதல்வர் ஸ்டாலின் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் மற்ற 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுநர்கள், வழக்கறிஞர்களோடு கலந்துபேசி, அவர்களையும் விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபடும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று (மே 18) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "32 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை இன்றைக்கு உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. இது வரலாற்றில் இடம்பெறக்கூடிய தீர்ப்பாக அமைந்திருக்கிறது. தமிழக அரசினுடைய மூத்த வழக்கறிஞர்கள் வைத்த வாதங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

எழுவர் விடுதலையில், திமுக அரசு முனைப்போடு செயல்படும் என்பது திமுகவினுடைய தேர்தல் அறிக்கையில் 494-வது வாக்குறுதியாக இந்த வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கிறது. மனிதாபிமான, மனித உரிமை அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை என்பது வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கும் அதே நிலையில், மாநிலத்தினுடைய உரிமையானது இந்தத் தீர்ப்பின் மூலமாக மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

மாநில அரசினுடைய கொள்கையில், அதனுடைய முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்று நீதிபதிகள் மிகத் தெளிவாக சொல்லியிருக்கின்றனர். இது மிக மிக முக்கியமான ஒன்று. ஆளுநர் செயல்படாத நேரத்தில், நீதிமன்றம் தலையிடும் என்றும் நீதிபதிகள் சொல்லியிருக்கின்றனர். இந்த விவகாரத்தில், மத்திய அரசிடம் கேட்கத் தேவை இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கின்றனர்.

இதன் மூலமாக, மாநில அரசினுடைய அரசியல், கொள்கை முடிவுகளில் தன்னுடைய அதிகார எல்லைகளைத் தாண்டி ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்பது மேலும் மேலும் உறுதியாகி இருக்கிறது. மாநில சுயாட்சி, கூட்டாட்சித் தத்துவத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய மாபெரும் வெற்றியாக அமைந்திருக்கிறது.

32 ஆண்டுகால வாழ்வை சிறைக் கம்பிகளுக்கு இடையே தொலைத்திருக்கக்கூடிய அந்த இளைஞர் இன்று விடுதலைக் காற்றை சுவாசிக்க இருக்கிறார். அந்த பேரறிவாளனுக்கு என்னுடைய வாழ்த்துகளையும், வரவேற்பையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தன்னுடைய மகனுக்கு இழைக்கப்பட்டிருக்கக்கூடிய அநீதியைக் களைந்திட எந்த எல்லை வரை செல்ல முடியுமோ, அந்த எல்லை வரை சென்று போராடத் தயங்காத அற்புதம்மாள், தாய்மையினுடைய இலக்கணமாக விளங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைச் சொல்ல விரும்புகிறேன்.

தாமதமாக கிடைத்திருந்தாலும், ஒரு மிக முக்கியமான வரலாற்றை பெறக்கூடிய வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. மனித உரிமைகள் மட்டுமல்ல, மாநில உரிமைகளும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக அமைந்திருக்கிறது" என்றார்.

இதே வழக்கில் சிறையில் உள்ள மற்ற 6 பேர் விடுதலை குறித்து தமிழக அரசின் நிலைபாடு என்ன? என்பது குறித்த கேள்விக்கு, "நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரம் இதுவரையில் வரவில்லை. இன்று மாலையோ அல்லது நாளை காலையோ வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அது வந்ததற்குப் பிறகு, சட்ட வல்லுநர்களோடு நாங்கள் கலந்துபேசி, வழக்கறிஞர்களோடு கலந்துபேசி அதற்குப் பிறகு அவர்களையும் விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபடும்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்