ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரிய வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை இன்று (மே 18) விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, "ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு. ஆளுநர் முடிவை தாமதப்படுத்தினால், அதனை நீதிமன்றம் பரிசீலனை செய்யலாம். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ஆவது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்கிறது" என்று தீர்ப்பளித்தது.

வழக்கு கடந்து வந்த பாதை.. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கவும் விடுதலை செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த 2018-ல் நிறைவேற்றிய தீர்மானம் மீது ஆளுநர் நீண்டகாலமாக எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும்,‘ஆளுநர், மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவரே. அவர் தனித்த கண்ணோட்டத்துடன் செயல்பட முடியாது’ என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தரப்பில் மேற்கொண்டு எந்தவொரு சட்டபூர்வ வாதங்களையும் முன்வைப்பதற்கு இல்லை என்றால் பேரறிவாளனை விடுவிக்கும் விஷயத்தில் நாங்களே முடிவு எடுப்போம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்தவழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த நீதிபதிகள், இறுதிவாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும், மனுதாரர் தரப்புக்கும் உத்தரவிட்டனர்.

அதன்படி மத்திய அரசு தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான வாதத்தில், ‘இந்த வழக்கை விசாரித்தது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு என்பதால் மத்திய அரசுக்குத்தான் முழு அதிகாரமும் உள்ளது. ஆளுநர் இதுதொடர்பாக பரிந்துரை செய்துள்ளதால் தற்போது குடியரசுத் தலைவர் மட்டுமே முடிவு எடுக்கமுடியும்’ எனக் கோரப்பட்டிருந்தது.

பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ வாதத்தில், ‘தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய முடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது அரசியல் சாசனத்துக்கு முரணானது. எனவே, உச்ச நீதிமன்றம் தனக்குரிய பிரத்யேக அதிகாரமான 142-ஐ பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலைசெய்ய வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ்,பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (மே 18) பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தனக்குரிய பிரத்யேக அதிகாரமான 142-ஐ பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்