தூத்துக்குடி: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை தூத்துக்குடியில் இருந்து தோணிகள் மூலம் அனுப்பி, நலிவடைந்து வரும் பாரம்பரிய தொழிலுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என, தோணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்தியா சார்பில் இலங்கைக்கு பல்வேறு உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், 137 வகையான மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்படும் என,முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித் துள்ளார். வரும் 22-ம் தேதிக்கு பின்னர் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இந்நிலையில், இலங்கைக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை தூத்துக்குடியில் இருந்து தோணிகள் மூலம் அனுப்பி, நலிவடைந்து வரும் பாரம்பரிய தோணித் தொழிலுக்கு புத்துயிர் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தோணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முடங்கிக் கிடக்கின்றன
இதுகுறித்து தூத்துக்குடி கோஸ்டல் தோணி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரின்ஸ்டன், செயலாளர் எஸ்.லசிங்டன் ஆகியோர் கூறியதாவது: தோணிகள் கடல் வாணிபத்தில் 20-ம் நூற்றாண்டின் இறுதி வரை மிக முக்கிய பங்காற்றி வந்தன. தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவு, மேற்கு கடற்கரை துறைமுகங்கள் மற்றும் அரபு நாடுகளுக்கு உணவு பொருட்கள், கட்டுமான பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் தோணிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. குறிப்பாக இலங்கைக்கு அதிகமான தோணி போக்குவரத்து நடைபெற்று வந்தது.
ஆனால், காலப்போக்கில் சரக்கு பெட்டகங்களின் வருகையால் தோணி தொழில் நலிவடைந்து வருகிறது. தற்போது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் 25 தோணிகள் இருந்தபோதிலும், போதுமான சரக்குகள் கிடைக்காமல் பெரும்பாலான நாட்கள் தோணிகள் முடங்கியே கிடக்கின்றன.
இந்த சூழ்நிலையில் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரண பொருட்களை தூத்துக்குடியில் இருந்து தோணிகள் மூலம் அனுப்பினால் பாரம்பரிய தோணித் தொழில் புத்துயிர் பெறும்.
மேலும், குறைந்த செலவில் பொருட்களை விரைவாக பாதுகாப்பாக கொண்டு சேர்க்க முடியும். தற்போது அனைத்து தோணிகளிலும் அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளோம். தூத்துக்குடியில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு தோணிகள் மூலம் 18 மணி நேரத்தில் சரக்குகளை கொண்டு சேர்க்க முடியும். ஒரு தோணியில் 250 முதல் 400 டன் வரை சரக்குகளை ஏற்றிச் செல்லலாம். மேலும், சரக்கு பெட்டக கப்பல்களில் சரக்குகளை அனுப்புவதை விட தோணிகளில் கட்டணம் மிகவும் குறைவாகும்.
ஏற்கெனவே கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தூத்துக்குடியில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு தோணிகள் மூலம் சுமார் 6,800 டன் எடையுள்ள அரிசி, வெங்காயம், சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்றுள்ளோம்.
தற்போது பருவநிலை வரையறை காரணமாக இந்திய கடல் வாணிப இயக்குநரகத்தின் உத்தரவின் பேரில் மே 1-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ம்தேதி வரை தோணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் பயனடைவர்
கடந்த 2008-ம் ஆண்டு அந்தமான் நிக்கோபர் தீவுகளில் நடைபெற்ற ஒரு விபத்தை அடிப்படையாக வைத்து இந்த பருவநிலை வரையறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தற்போதுள்ள பருவநிலை சூழ்நிலையில் தூத்துக்குடி- கொழும்பு இடையேயான பாரம்பரிய வழித்தடத்தில் தோணி போக்குவரத்துக்கு எந்தவித பங்கமும் இல்லை. சாதகமான நிலையே இருக்கிறது. மேலும், அத்தியாவசிய, அவசர பணிக்கு விதிவிலக்கு பெறலாம்.
தமிழக முதல்வர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி நிவாரண பொருட்களை தோணிகள் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நலிவடைந்து வரும் பாரம்பரிய தோணித் தொழில் புத்துயிர் பெறும். இத்தொழிலை நம்பியுள்ள 20 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வு வளம் பெறும் என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago