தஞ்சாவூர் | முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சசிகலா அஞ்சலி

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளையொட்டி தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வி.கே.சசிகலா இன்று காலை மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே 17,18,19 ஆகிய மூன்று தினங்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சுமார் 1.50 லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இவர்களின் நினைவாக தஞ்சாவூரில் உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் 2013-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த முற்றத்தில் இலங்கையில் நிகழ்ந்த போரை நினைவுகூரும் வகையில் போர்க்காட்சிகள், கற்சிலைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை தமிழர்களுக்காக போராடிய தமிழ் ஈழத் தலைவர்களின் புகைப்படங்கள், உலகம் முழுவதும் வாழ்ந்த தமிழ் அறிஞர்கள், இலக்கியவாதிகளின் புகைப்படங்கள், தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள், தமிழ் அன்னையின் கற்சிலை, இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட மண் ஆகியவை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

படங்கள்: ஆர்.வெங்கடேஷ்.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் நிகழ்ந்த படுகொலையை நினைவுகூரும் விதமாக ஈழத் தமிழர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் உலகம் முழுவதும் மே 17 முதல் 19 வரை முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி, இன்று முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தையொட்டி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்துக்குச் சென்றார். அங்கு ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்காக உயிர் நீத்தவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள கற்சிலைகளுக்கும், தமிழ் அன்னை சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், முற்றத்தில் உள்ள தமிழ் அறிஞர்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களை பார்வையிட்டு, அவர்களின் வரலாற்றைப் படித்து பார்த்தார். அவருக்கு உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் ஒவ்வொரு படங்களையும் சுட்டிக்காட்டு அவர்களின் வாழ்க்கை வரலாறு, தியாகம் ஆகிவற்றை எடுத்துக் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE