இந்தியா சிக்கலான புவி அரசியல் சூழலில் சவால்களை எதிர்கொள்கிறது: குடியரசு துணைத் தலைவர்

By ஆர்.டி.சிவசங்கர்

குன்னூர்: "இந்தியா மிகவும் சிக்கலான மற்றும் கணிக்க முடியாத புவி அரசியல் சூழலில் பல பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது" என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்க நேற்று நீலகிரி மாவட்டம் வந்தார். நீலகிரி வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் அவரை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், கல்லூரி முதல்வர் லெப்டினென்ட் ஜெனரல் மோகன் வரவேற்றனர். கல்லூரியில், பயிற்சி அதிகாரிகளுடன் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று கலந்துரையாடினார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்யா நாயுடு கூறியது: "இந்தியா மற்றும் நட்பு நாடுகளின் ஆயுதப் படைகளின் எதிர்காலத் தலைவர்கள் மற்றும் குடிமைப்பணி அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பதில் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியின் பங்களிப்பு போற்றத்தக்கது. நீலகிரியின் ஆரோக்கியமான சூழலும் வெலிங்டனுக்கு ராணுவத்துடனான உறவும் இந்த இடத்தை முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விருப்பமான ஓய்வு இடமாக மாற்றியுள்ளது. மறைந்த பீல்ட் மார்ஷல் சாம் மானெக்‌ஷாவும் தனது கடைசி நாட்களை இங்கேயே கழித்தார். தேசத்தை உருவாக்குவதற்கு உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்.

இன்று, இந்தியா மிகவும் சிக்கலான மற்றும் கணிக்க முடியாத புவி-அரசியல் சூழலில் பல பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது. வெளியிலும் உள்ளேயும் இருந்து சமச்சீர் மற்றும் சமச்சீரற்ற அச்சுறுத்தல்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். எனவே, எந்தவொரு சவாலையும் சமாளிக்கவும், எந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தலையும் உறுதியாக முறியடிக்கவும் நமது படைகள் முழுமையாக தயாராக இருக்க வேண்டும். வரலாற்று ரீதியாக, இந்தியா ஒருபோதும் விரிவாக்கவாதமாக இருந்ததில்லை.

நமது அணுகுமுறை எப்போதும் அமைதியான மற்றும் பயங்கரவாதமற்ற சூழலை உருவாக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது. விரோத சக்திகளால் இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் எந்தவொரு முயற்சியும் நமது பாதுகாப்புப் படைகளால் கடுமையாக எதிர்கொள்ளப்படும் என்று தேசம் நம்புகிறது. இன்று போர்கள் போர்க்களங்களில் மட்டும் நடத்தப்படுவதில்லை. மோதல்களின் கலப்பினத்தன்மையானது, இந்நிலை போரில் வெற்றியாளர் அல்லது தோல்வியாளர்களைத் தீர்மானிப்பதை கடினமாக்குகிறது. தகவல் மற்றும் இணையப் போர், ட்ரோன்கள் மற்றும் ரோபோட்டிக்ஸ் மற்றும் விண்வெளி அடிப்படையிலான போர் முறைகள் அதிகரித்து வரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன.

எனவே, நமது பாதுகாப்புத் துறை இந்த புதிய மற்றும் வளர்ந்து வரும் மோதல் பகுதிகளில் கவனம் செலுத்தி திறன்களை மேம்படுத்த வேண்டும். இந்திய ராணுவத்தை 'எதிர்கால சக்தியாக' வளர்ப்பதே நமது எண்ணமாகவும் திட்டமாகவும் இருக்க வேண்டும். நாம் எதிர்காலத்தில் அடியெடுத்து வைக்கும் போது, தனித்து செயல்படும் முறையிலிருந்து ஒருங்கிணைந்து செயல்படும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மதிப்புமிக்க நிறுவனத்தில் பயிற்சியாளர்களாக, நீங்கள் மாற்றமாக இருக்க வேண்டும். சமர்த் மற்றும் சக்‌ஷம் பாரதத்தை உருவாக்கும் நமது முயற்சியில், பாதுகாப்பு மற்றும் விமானப்படை தொழில்நுட்பத்தில் தன்னிறைவு மிக முக்கியமானது.

பாதுகாப்பு உற்பத்தியில் உள்நாட்டுமயமாக்கல் மற்றும் ‘ஆத்மநிர்பர்’ ஆகியவற்றை ஊக்குவிக்க அரசாங்கம் பல கொள்கை முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்களை எடுத்துள்ளது பாராட்டத்தக்கது. ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை (OFB) ஏழு புதிய பாதுகாப்பு நிறுவனங்களாக மாற்றுவதும் பாராட்டுக்குரியது, இது செயல்திறனை மேம்படுத்தும் அதே வேளையில், தன்னாட்சியை வழங்கும். இன்று, அரசியல் நிர்ப்பந்தங்கள், பயங்கரவாதம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை பாதுகாப்புச் சூழலின் சிக்கல்களை அதிகப்படுத்தியுள்ளன. எனவே, பிரச்சினைகளை ஆழமாகப் புரிந்து கொள்வது அவசியம்.

ஒரு தேசமாக, மாறிவரும் உலக சூழ்நிலையில் நமது தேசிய நலன்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் பாதுகாப்புச் சவால்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். காலப்போக்கில், பாதுகாப்புத் துறையில் மாற்றம் என்பது யதார்த்தமான ஒன்றாகும். இந்தச் சவால்களைச் சமாளிப்பதற்கு வலுவடைய வேண்டும். சோதனையான கரோனா காலத்தில், அப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி வெற்றி கரமாக பயிற்சியை நிறுத்தாமல் தொடர்ந்தது என்பதை அறிந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நம் நாட்டின் ஆயுதப் படைகள் நமது கர்வத்துக்குரிய அமைப்புகளில் ஒன்றாகும். படை வீரர்கள் தங்கள் அயராத முயற்சி மற்றும் தியாகங்கள் மூலம் தங்கள் சக குடிமக்களின் மதிப்பைப் பெற்றுள்ளனர்.

வெளிப்புற ஆக்கிரமிப்பு அல்லது கிளர்ச்சிகளை எதிர்த்துப் போராடுவது அல்லது இயற்கை பேரிடர்களின்போது சிவில் நிர்வாகத்திற்கு உதவுவது, சீருடையில் உள்ள ஆண்களும் பெண்களும் எப்போதும் தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். நமது எல்லைகள் மற்றும் கரோனா தொற்றுநோயைக் கையாள்வதில் ஆயுதப் படைகளின் ஆண்களும் பெண்களும் வெளிப்படுத்திய சிறந்த மன உறுதிக்கு எனது பாராட்டுகள். வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். சமீபத்தில், நான் ஹரித்வாரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் படங்கள் மற்றும் விளக்கங்களால் அலங்கரிக்கப்பட்ட ‘வீரர்களின் சுவர்’ கட்டியுள்ளனர்.

நமது இளைய தலைமுறையினரிடம் தேசபக்தியையும், நமது ராணுவத்தின் மீதான மரியாதையையும் ஊட்டுவதற்கு இதுபோன்ற நினைவுச் சின்னங்கள் மற்ற கல்வி நிறுவனங்களிலும் அமைக்கப்பட வேண்டும். இந்தியா வரலாற்றில் பெண் வீரர்களின் புகழ்பெற்ற பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. மகாராஜாவான சந்திரகுப்த மௌரியர் போர்க் கலையில் சிறப்புப் பயிற்சி பெற்ற பெண் போர்வீரர்களின் குழுவால் பாதுகாக்கப் பட்டதாக கிரேக்க வரலாற்றாசிரியர் மெகஸ்தனிஸ் கூறுகிறார். இடைக்காலம் மற்றும் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் போது, இந்தியப் பெண்கள் மிகுந்த தைரியத்தையும், பின்னடைவையும், போராடும் குணத்தையும் வெளிப்படுத்தினர்.

கோண்ட்வானாவின் ராணி துர்காவதி, துளுவ ராணி ராணி அப்பாக்கா, ருத்ரமா தேவி, கிட்டூர் சென்னமா, ராணி வேலு நாச்சியார், லக்ஷ்மிபாய் மற்றும் பேகம் ஹஸ்ரத் மஹால் ஆகியோர் தங்கள் எதிரிகளிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்ற சிறந்த ராணுவத் தளபதிகளின் எடுத்துக்காட்டுகள். பெண் அதிகாரிகளின் நிரந்தர ஆணையம் செயல்படுத்தப்பட்டு, அனைத்து சைனிக் பள்ளிகளும், புகழ்பெற்ற தேசிய பாதுகாப்பு அகாடமியும் இப்போது பெண்களுக்காக திறக்கப்பட்டுள்ளன. விமானப் படையின் போர் விமானங்கள், கடற்படைக் கப்பல்கள், ராணுவக் காவல் படை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் பெண் அதிகாரிகள் பணியமர்த்தப்படுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

இவை வரவேற்கத்தக்க அறிகுறிகள் ஆகும். வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு சம வாய்ப்புகளை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்பது எனது உறுதியான நம்பிக்கை. நமது ஆயுதப் படைகளின் எதிர்காலத் தலைமை மற்றும் வீரர்களை வடிவமைப்பதில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் மற்றும் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி மற்றும் அதன் ஆசிரியர்களின் முயற்சிகளை வாழ்த்துகிறேன்" என்று வெங்கய்யா நாயுடு பேசினார்.

உதகை லவ்டேலில் உள்ள லாரன்ஸ் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்று, வரும் 20ம் தேதி காலை உதகையிலிருந்து டெல்லி திரும்பவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்