புதுச்சேரியில் காவி நிறத்தில் தெருக்களின் பெயர் பலகைகள்: விசிக கொந்தளிப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரி: "தெருக்களின் பெயர் பலகையில் காவி நிறத்தை திணிப்பது ஜனநாயக விரோதமானது" என புதுச்சேரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் பொழிலன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரி நகரின் பிரதான சாலைகளான செஞ்சி சாலை, ஆம்பூர் சாலை ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 10 பெயர் பலகைகள் புதிதாக வைக்கப்பட்டுள்ளன.

சாலைகளை அடையாளப்படுத்தும் பெயர் பலகைகள் பொதுவாக நீல நிறத்தில் வைக்கப்படுவது புதுவை அரசு பின்பற்றும் மரபு. இந்த நிலையில் சுற்றுலாத் துறையின் சார்பில் அம்பலத்தாடையார் மடம் வீதி, மரைன் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி உள்ளிட்ட ஐந்து சந்திப்புகளில் காவி நிறத்திலான தெருக்களின் பெயர் பலகைகள் வைக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.

வழக்கத்துக்கு மாறாக காவி நிறத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகைகளுக்கு புதுச்சேரி மக்கள் மற்றும் சமூக ஜனநாயக இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசு பின்பற்றும் வழக்கத்துக்கு மாறாக காவி நிறத்தில் மட்டுமே பெயர் பலகைகள் வைப்பது காவியை திணிக்கும் உள்நோக்கம் கொண்டதாகும்.

ஜிப்மரில் இந்தி திணிப்பு விவகாரம் இன்னும் ஓயாத நிலையில், காவி நிறத்தை புதுச்சேரி மக்களின் மீது திணிப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்று இந்தியாவின் பன்மைத்துவத்தை சிதைக்கும் மத்திய பாஜக அரசின் சர்வாதிகாரத்துக்கு துணை போகும் வகையில் ஒரே நிறத்தை புதுச்சேரி அரசு பயன்படுத்த முனைவது அதிர்ச்சி அளிக்கிறது.

சுற்றுலாத் துறை அமைச்சர் மற்றும் முதல்வர் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் இப்பணிகள் செய்யப்படுகின்றனவா அல்லது துணைநிலை ஆளுநர் உத்தரவின் பெயரில் இப்பணிகள் செய்யப்படுகின்றனவா என்பதை புதுச்சேரி அரசும் சுற்றுலாத் துறையும் தெளிவுபடுத்த வேண்டும்.

மத்திய அரசின் காவி சர்வாதிகாரத்துக்கு துணை போகாமல் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இந்த விவகாரத்தில் தலையிட்டு தெருக்களின் பெயர் பலகைகள் பழைய முறைப்படி நீல வண்ணத்தில் அமைக்க உத்தரவிட வேண்டும். நீல வண்ணத்தில் தெருக்களின் பெயர் பலகைகள் மீண்டும் அமைக்காவிட்டால் புதுச்சேரி அரசுக்கு எதிராகவும், சுற்றுலாத் துறைக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்படும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று பொழிலன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE