மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு- காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கான 4 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போதைய திமுக மாநிலங்களவை உறுப்பினர்களான டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரின் பதவிக் காலம் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைகிறது. இதையொட்டி, இந்த பதவியிடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழகத்தில் திமுக எம்பிக்களான டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கேஆர்என் ராஜேஷ்குமார் ஆகியோரது பதவிக் காலமும், அதிமுக எம்.பி.க்களான ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரது பதவிக் காலமும் வரும் ஜூன் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த 6 இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனு தாக்கல் மே 24-ம் தேதி தொடங்கி, 31-ம் தேதியுடன் முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2022 ஜூன் 10-ம் தேதி நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணிக்கான 4 இடங்களில், இந்திய தேசிய காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

3 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் மற்றும் இரா.கிராராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல் என்பது சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குகள் அடிப்படையில் நடைபெறும். தமிழகத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடிப்படையில் ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கு 34 சட்டப்பேரவை உறுப்பினர் வாக்களிக்க முடியும். இதன்படி, 4 இடங்கள் ஆளுங்கட்சியான திமுகவுக்கும், எஞ்சிய 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE