அனைத்து துறை குரூப்-1 அதிகாரிகளுக்கும் ஐஏஎஸ் பதவி உயர்வு - தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: அனைத்து துறை குரூப்-1 அதிகாரிகளுக்கும் ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்கும் வகையில், தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்குவது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்வில் தேர்ச்சிபெற்று, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து துறையில் உதவி இயக்குநர், இணை இயக்குநர், கூடுதல் இயக்குநர்களாக பதவி வகிக்கும் பி.ஆனந்தராஜ், பி.பொன்னையா, எப்.அப்துல் ரசாக், எம்.பரமேஸ்வரன் உள்ளிட்ட 98 பேர், தங்களை மாநில அரசின் சிவில் சர்வீசஸ் பணிக்கான வரம்புக்குள் கொண்டுவந்து, ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012-ல் வழக்கு தொடர்ந்தனர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:

இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) விதிப்படி, 66.66 சதவீதம் பேருக்கு மத்திய தேர்வாணையம் நடத்தும் நேரடி போட்டித் தேர்வு மூலமாகவும், 28.33 சதவீதம் பேருக்கு மாநில அரசின் சிவில் சர்வீசஸ் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டும், மாநில அரசின் பிற பணிகளில் உள்ள 5 சதவீதம் பேருக்கு தேர்ந்தெடுப்பு முறையிலும் ஐஏஎஸ் பதவி உயர்வு மற்றும் அந்தஸ்து வழங்கப்படுகிறது.

அதன்படி, வருவாய் மற்றும் பொது நிர்வாகத்தில் உயர் பதவி வகிப்பவர்களுக்கு மட்டுமே தற்போது ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து போன்ற இதர துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுகிறது.

குறிப்பாக, தமிழ்நாடு சிவில் சர்வீசஸ் பணிகள் சிறப்பு விதிகளின்படி, மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் துணை ஆட்சியராகப் பதவி வகிப்பவர்களுக்கு மட்டுமே ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 தேர்வில் கூட்டுறவு, வணிக வரி, பதிவு, வேலைவாய்ப்பு, காவல் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுகிறது.

குரூப்-1 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்திருந்தாலும், இடஒதுக்கீடு, காலி இடங்களின் அடிப்படையில் துணை ஆட்சியர் பணியிடங்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

எனவே, ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றுபவர்களையும் மாநில அரசின் சிவில் சர்வீசஸ் பணிக்கான வரம்புக்குள் கொண்டுவந்து, ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் முறையிட்டிருந்தனர்.

நீதிபதி எம்.கோவிந்தராஜ் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், ‘தமிழ்நாடு அரசின் சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான சிறப்பு விதிகளில், துணை ஆட்சியர் பதவி மட்டுமே ஐஏஎஸ் அந்தஸ்துக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த சிறப்பு விதிகளை திருத்தம் செய்யாமலும், மத்திய அரசின் ஒப்புதல் பெறாமலும் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து துறையில் உதவி, இணை, கூடுதல் இயக்குநர்களாக பணிபுரிபவர்களை மாநில சிவில் சர்வீசஸ் பணிகளில் சேர்ப்பது சாத்தியமற்றது’ என்று தெரிவிக்கப்பட்டது.

பாகுபாடு, பாரபட்சம்

இதன்மூலம், குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இடையே பாகுபாடு பார்க்கப்படுவதாகவும், பாரபட்சம் காட்டப்படுவதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.கோவிந்தராஜ் பிறப்பித்துள்ள உத்தரவு:

குரூப்-1 தேர்வு மூலமாக வருவாய் துறையில் நியமிக்கப்படும் துணை ஆட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோருக்கு இணையாக, அதே குரூப்-1 தேர்வின் மூலமாக நியமிக்கப்படும் உதவி, இணை, கூடுதல் இயக்குநர்கள் சமமாக கருதப்படாதது வருத்தத்துக்கு உரியது. வருவாய் துறையில் பணியாற்றுபவர்களுக்கு 7 அல்லது 8 ஆண்டுகளில் ஐஏஎஸ் அந்தஸ்து கிடைத்துவிடுகிறது. ஆனால், பிற துறைகளில் உயர் பதவி வகித்தாலும், ஐஏஎஸ் அந்தஸ்து கிடைக்க 30 ஆண்டுக்கு மேல் ஆகிவிடுகிறது.

திறமையான அதிகாரிகளை மாநில வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில், கேரளாவில் உள்ளதுபோல தமிழகத்திலும் அனைத்துதுறைகளின் குரூப்-1 அதிகாரிகளையும் ஒன்றிணைத்து, தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

அதற்கு ஏதுவாக ஒரு கமிட்டி அமைத்து, எந்தெந்த துறை அதிகாரிகளை இந்த வரையறைக்குள் கொண்டுவர முடியும் என்பதை அரசு 6 மாதங்களில் கண்டறிய வேண்டும்.

மனுதாரர்களை மாநில சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான வரம்புக்குள் கொண்டுவர முடியாது என்று கூறி, அவர்களது கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது ஏற்புடையது அல்ல.

இவ்வாறு கூறி, வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்