புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்தி திணிக்கப்படவில்லை. நிர்வாக ரீதியாக வெளியான சுற்றறிக்கை தவறாக திரிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் அறிக்கை, மருத்துவச் சேவை, குறிப்பு தமிழில்தான் வழங்கப்படும். இதற்கான போராட்டங்கள் தேவையற்றது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத் துறை நிதியளிப்பில், தன்னாட்சி அந்தஸ்து பெற்று இயங்கி வருகிறது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம். இங்குள்ள மருத்துவமனையை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தமிழ் பேசும் பெரும்பான்மையானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றில், ‘அலுவல் மொழி சட்டம் 1976-ன்படி, மத்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கோப்புகள், பதிவேடுகள், தலைப்புகள் ஆகியவற்றில் இந்தி, ஆங்கிலம் மொழி மட்டுமே இருக்க வேண்டும். ஜிப்மரில் பயன்படுத்தப்படும் பதிவுகள், சேவை புத்தகங்கள், சேவை கணக்குகள் ஆகிய அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்படும். எதிர்காலத்தில் முடிந்தவரை அனைத்தும் இந்தியில் எழுத வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
ஜிப்மர் மருத்துவ வளாகத்தில் இவ்வாறு இந்தி திணிக்கப்படுவதை கண்டித்து புதுச்சேரியில் நேற்று திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், துணைநிலை ஆளுநர் தமிழிசை நேற்று காலை சென்னையில் இருந்து நேரடியாக புதுவை ஜிப்மருக்கு வந்தார். அங்கு நிர்வாக பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் ராகேஷ் அகர்வால் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
பின்னர் ஜிப்மரில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை கூறியதாவது:
ஜிப்மரில், நிர்வாக ரீதியாக அளிக்கப்பட்ட சுற்றறிக்கை தவறாக திரிக்கப்பட்டு, இந்தி திணிக்கப்படுவதாக செய்தி வந்துள்ளது. ஜிப்மரில் மொழி திணிப்பு இல்லை. உள்கட்டமைப்புக்காக, நிர்வாக ரீதியாக கொடுக்கப்பட்ட சுற்றறிக்கை தவறாக திரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4 சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் முதல் 2 சுற்றறிக்கைகள் மட்டும் வெளியில் வந்துள்ளன. இதர சுற்றறிக்கைகளில் பொதுமக்கள் தொடர்பான கருத்துகள், துறை ரீதியானவை தமிழில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர் மொழியான தமிழை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஜிப்மர் மத்திய அரசின் நிறுவனம். இங்கு இந்தி மட்டுமே தெரிந்தவர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்காக இந்தியை பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள சட்ட விதிகளை நினைவுபடுத்தி உறுதிப்படுத்தும் வகையில்தான் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது. ஜிப்மரில் தமிழிலேயே பெயர் பலகைகள் இருக்கின்றன. இயக்குநர் அலுவலகத்தில்கூட அவரின் பெயர் தமிழில்தான் முதலில் எழுதப்பட்டுள்ளது. அடுத்தபடியாக ஆங்கிலம், 3-வதாக இந்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தி மட்டும் தெரிந்த பணியாளர் சேவை புத்தகத்தில் இந்தியை பயன்படுத்தும்படி கூறியுள்ளனர்.
அதேநேரத்தில் நோயாளிகளுக்கான மருத்துவச்சேவை, நோயாளிக்கான அறிக்கை, குறிப்புகள் தமிழில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜிப்மரில் இந்தி திணிப்போ, வெறியோ இல்லை. ஜிப்மரின் மருத்துவ சேவைகள் தொடர நாம் அனுமதிக்க வேண்டும். அதற்கு எந்த இடையூறும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். எனவே, போராட்டம் என்பது தேவையற்றது. ஜிப்மரில் தமிழ் முதன்மைப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பதிவு சீட்டில் தமிழ் இல்லை
ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ள நிலையில், நோயாளிகளுக்கான பதிவு அட்டையில் முதலில் இந்தி, பின்னர் ஆங்கிலம் மட்டுமே உள்ளது. தமிழ் இல்லை. இதுகுறித்து ஜிப்மருக்கு வந்த நோயாளிகள் கூறும்போது, “எங்களுக்கு தமிழ் மட்டும்தான் தெரியும் ஆனால், பதிவு அட்டை தொடங்கி இங்கு பல இடங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே உள்ளது. தமிழ் இல்லை” என்றனர்.
ஜிப்மர் நிர்வாகம் தரப்பில் இதுபற்றி விசாரித்தபோது, “புறநோயாளிகளுக்கான பதிவுச் சீட்டில் நீண்டகாலமாக இந்தி, மற்றும் ஆங்கிலம் மட்டுமே உள்ளது” என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago