ஆர்.ஏ.புரம் குடியிருப்புகள் அகற்றம், தீக்குளிப்பு | “இது கடைசி சம்பவமாக இருக்க வேண்டும்” - ஸ்டாலின் விருப்பம்

By செய்திப்பிரிவு

சென்னை: "இனி வரக்கூடிய காலக்கட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடிய பணியை மேற்கொள்கிற நேரத்தில், முன்கூட்டியே அந்தப் பகுதி மக்களிடம் மறுகுடியமர்வு செய்யக்கூடிய இடம் குறித்து, கருத்துகள் கேட்கப்படும். மேலும், அந்தப் பகுதி மக்கள் பிரதிநிதிகளோடு கலந்துபேசி, ஓர் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துவோம். புதிய இடத்தில், அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட பின்னரே மறுகுடியமர்வு செய்யப்படுவார்கள்" என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை - ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகர், இளங்கோ தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது தொடர்பான விவாதத்தின்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியது: "மயிலாப்பூரில் நேற்று நடைபெற்ற ஒரு சம்பவத்தைக் குறித்தும், அதில் கண்ணையா என்பவர் தீக்குளித்து இன்று காலையிலே உயிரிழந்திருக்கிறார் என்பது குறித்தும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள். அதற்குரிய விளக்கத்தை வருவாய்த் துறை அமைச்சர் இங்கே விளக்கமாகக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

மயிலாப்பூரில் ஒரு விரும்பத்தகாத நிகழ்வு நடந்திருக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இனி வரக்கூடிய காலக்கட்டத்திலே இதுபோன்று ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடிய பணியை மேற்கொள்கிற நேரத்தில், முன்கூட்டியே அந்தப் பகுதி மக்களுக்கு மறுகுடியமர்வு செய்யக்கூடிய இடம் குறித்து, அவர்களுடைய கருத்துகள் கேட்கப்படும்.

மேலும், அந்தப் பகுதி மக்கள் பிரதிநிதிகளோடு இதுகுறித்து கலந்துபேசி, ஓர் இணக்கமான சூழ்நிலையை வரக்கூடிய காலக்கட்டத்தில் நிச்சயமாக நாங்கள் ஏற்படுத்துவோம். அவர்களுக்கான புதிய இடத்தில், தேவைப்படும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் மறுகுடியமர்வு செய்யப்படுவார்கள். இதற்காக மறுகுடியமர்வு கொள்கை ஒன்று, அனைத்து மக்கள் நலன் சார்ந்த அம்சங்களைக் கொண்டு விரைவிலே அதற்குரிய விதிமுறைகளோடு வகுக்கப்படும்.

இன்றைக்கு நீங்கள் தெரிவித்த அனைத்துக் கருத்துகளோடு, அதைவிட கூடுதல் மனச் சுமையுடனுடம், ஆழ்ந்த துயரத்துடனும் நானும் இதிலே பங்கேற்கிறேன். இந்தச் சம்பவம் கடைசி சம்பவமாக இருக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய விருப்பம்.

இங்கே அமைச்சர் சொல்கிறபோது, அருகிலேயே, அந்தப் பகுதியிலேயே, அவர்களுக்கு மறுகுடியமர்வு இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று அந்தப் பகுதி மக்கள் கருதுகிறார்கள் என்ற ஒரு நிலையை எடுத்துச் சொன்னார். ஏற்கெனவே, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்மூலம் மந்தைவெளி, மயிலாப்பூர் பகுதிகளிலே கட்டப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய வீடுகளில், அவர்களுக்கு நிச்சயமாக வீடுகள் ஒதுக்கித் தரப்படும் என்று அரசு முடிவெடுத்திருக்கிறது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

முன்னதாக, சென்னை மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகர், இளங்கோ தெருவில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்க உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து கடந்த 29-ம் தேதி வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர்.

இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டு வந்தது. பொதுமக்களின் எதிர்ப்பை மீறி படிப்படியாக தற்போது வரை 150-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.

அந்த பகுதியில் வசித்து வந்த பழக்கடை வியாபாரியான கண்ணையா (55) என்பவர், நேற்று அதிகாரிகள் வீடுகளை இடிக்கவந்தபோது திடீரென மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்து ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சென்னை ஆர்.ஏ.புரம் குடியிருப்பு அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE