‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘உங்கள் குரல் - தெருவிழா’ நிகழ்ச்சி: பொதுமக்களின் குறைகளை தீர்க்க புதிய செயலி தொடங்கப்படும்

By பெ.ஜேம்ஸ்குமார்

நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தனியாக புதிய செயலி தொடங்கப்படும் என ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் நடந்த ‘உங்கள் குரல் - தெரு விழா’ நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தெரிவித்தார்.

பொதுமக்கள் தங்கள் வாழும் பகுதியில் நிலவும் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக, அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘உங்கள் குரல் - தெரு விழா’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் ‘உங்கள் குரல் - தெருவிழா’ நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் நகராட்சித் தலைவர் எம்.கே.டி.கார்த்திக், துணைத் தலைவர் ஜி.கே.லோகநாதன், ஆணையர் இளம்பரிதி மற்றும் கவுன்சிலர்கள், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் நகராட்சித்தலைவர் எம்.கே.டி.கார்த்திக் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோர், ‘குடிநீர் சரியாக கிடைக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குழாய்களை மாற்றாததால் குடிநீர் விநியோகம் சீராக இல்லை. அவற்றை சீரமைக்க வேண்டும். சிறுவர்கள் விளையாடவும், முதியோர் நடைபயிற்சி மேற்கொள்ளவும் பூங்காக்கள் உருவாக்க வேண்டும். நூலகங்கள் தொடங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.

மேலும்,திருட்டு தொல்லை அதிகமாக இருப்பதால் முக்கியப் பகுதிகளில் சிசிடிவிகேமரா பொருத்த வேண்டும். போலீஸ் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும். தெருவிளக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும். முக்கிய சந்திப்புகளில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். குறைந்த மின் அழுத்தம், அடிக்கடி ஏற்படும் மின்தடை குறித்தும் புகார் தெரிவித்தனர்.

அனைவரின் கோரிக்கைகளை பொறுமையுடன் கேட்ட நகராட்சித் தலைவர் எம்.கே.டி.கார்த்திக், அவற்றுக்கு பதிலளித்து கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சிகளில் மக்கள் பிரச்சினைகள்தீர்க்கப்படவில்லை. புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நாங்கள், மக்களின் நம்பிக்கையைபெறும் வகையில் அனைத்து பணிகளையும்நிறைவேற்றுவோம். மக்கள் தெரிவிக்கும்புகார்கள் குறித்து நேரில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண்கிறோம்.

நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியை சிறந்த நகராட்சியாக மாற்றுவதை லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறேன். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். கூட்டு முயற்சி இருந்தால் மட்டுமே அனைத்திலும் வெற்றி பெற முடியும். நகரின் வளர்ச்சிக்கு பொதுமக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர். படங்கள்: எம்.முத்துகணேஷ்

நகராட்சியில் மக்களின் குறைகளை தீர்க்கவும், ஆலோசனை பெறவும் ‘நம்ம நந்திவரம் - கூடுவாஞ்சேரி’ என்ற புதிய செயலியை (app) உருவாக்க உள்ளோம். அத்துடன், வாட்ஸ்அப் குழுக்களும் உருவாக்கப்பட உள்ளன. நகராட்சி தொடர்பான அனைத்து விவரங்களும் இவற்றில் இடம்பெறும். பொதுமக்களும் புகார் தெரிவிக்கலாம். அவற்றுக்கு உடனுக்குடன் தீர்வுகாணப்படும். தீர்வுகாண முடியாத பிரச்சினைகள் இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து, எவ்வளவு நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படும்.

தற்போது நகர வளர்ச்சிக்காக சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இங்கு பேசியவர்கள் ஏராளமான புகார்கள், குறைகளை தெரிவித்துள்ளீர்கள். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு அரசின் விதிகளுக்கு உட்பட்டு அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும்.

குறைந்த மின் அழுத்தம் பிரச்சினையை போக்க கூடுதல் டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். ரயில்வே சுரங்கப்பாதையை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நகராட்சி முழுவதும் ஏற்கெனவே உள்ள தெரு விளக்குகளை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்துவருகிறது. ‘உங்கள் குரல்’ மூலம் ஏராளமானோர் புகார் அளித்துள்ளனர். புகார் அளித்தமக்களிடம் நேரடியாக பேசி, அவர்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

முன்னதாக நகராட்சி ஆணையர் இளம்பரிதி பேசியதாவது: ‘தி இந்து’ ஆங்கிலநாளிதழ் மிக பழமைவாய்ந்த நாளிதழ். அக்குழுமத்தின் மற்றொரு பதிப்பாக கடந்த 2013-ம் ஆண்டு ‘இந்து தமிழ்’ தொடங்கப்பட்டு மிக குறுகிய நாட்களில் தமிழகத்தின் முன்னணி நாளிதழாக விளங்குகிறது. பொதுமக்களின் அடிப்படை குறைகளை கண்டறிந்து, அது தொடர்பாக செய்தி வெளியிட்டு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணும் பணிகளை சிறப்பாக செய்து வருகிறது.

மாணவர்களுக்கான ‘வெற்றிக்கொடி’ உட்பட பல்வேறு துணை பதிப்புகளை வெளியிட்டு அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறது. ‘உங்கள் குரல் - தெருவிழா’ மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார் மற்றும் கோரிக்கைகளை ஆய்வு செய்து, ஆலோசனை கூட்டங்களை நடத்தி உரிய தீர்வு காண்போம் என உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நந்திவரம் - கூடுவாஞ்சேரி மகாராஜா ஃபேன்ஸி ஷாப் உரிமையாளர் ஆர்.ராகுல் இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்கினார்.

சத்யநாராயணன், மீனாட்சி நகர்

மீனாட்சி நகரில் கடந்த ஓராண்டு காலமாக குடிநீர் வரவில்லை. குழாய்கள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. கழிவுநீர் கால்வாய் இருந்தும், முறையாக பராமரிக்கப்படாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறன. இதனால் கொசு உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்கள் பரவுகின்றன. காலி மனைகளில் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்த் தொற்றும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

ரகுபதி, கே.கே. நகர்

கே.கே.நகரில் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும். அனைத்து கால்வாயிலும் கழிவுநீர் தேங்கியுள்ளதால் கொசு உற்பத்தி அதிகரித்து நோய் தொற்றுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்குவதால் மிகுந்த அவதிப்படுகிறோம். பூங்காவை சீரமைத்துத் தர வேண்டும்.

வரதன், மகாலட்சுமி நகர்

மகாலட்சுமி நகரில் வசிப்போர், மழையின்போது கடுமையாக பாதிக்கப்படுகிறோம். வீட்டை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு உள்ளேயும் வெளியேயும் தண்ணீர் சூழ்ந்துவிடுகிறது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. போதிய குடிநீர் வசதி இல்லாததால் நீண்ட தூரம் சென்று வாகனத்தின் மூலம் தண்ணீர் கொண்டு வரவேண்டிய நிலை உள்ளது. மகாலட்சுமி நகரில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்தன. எனவே, ரோந்துப் பணியில் கூடுதல் போலீஸாரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சதீஷ்குமார், 7-வது வார்டு

கடந்த 3 ஆண்டுகளாக எங்களுக்கு குடிநீர் சரியாக வருவதில்லை. இதுதொடர்பாக புகார் அளித்திருந்தேன். நேற்று காலை முதல் குடிநீர் சீராக வருகிறது. அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் பகுதியில் தெரு விளக்குகள் சரியாக எரியவில்லை. கூடுவாஞ்சேரி துணை மின் நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையை கடப்பது மிகவும் பிரச்சினையாக உள்ளது. அங்கு போக்குவரத்து போலீஸாரை நியமிக்க வேண்டும். எங்கள் பகுதியில் பூங்கா வசதி ஏற்படுத்த வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்