'ஒரு தாய்க்கு கொடுத்த வாக்கு அன்னையர் தினத்தில் நிறைவேற்றப்பட்டது' - தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா

By செய்திப்பிரிவு

கோவை: 1 ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும் கோவை வடிவேலம்பாளைத்தைச் சேர்ந்த கமலாத்தாள் பாட்டிக்கு வீடு கட்டி கொடுப்பதாக கொடுத்த வாக்கை அன்னையர் தினமான இன்று (மே 8) நிறைவேற்றி வீடு வழங்கி சிறப்பித்துள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.

கோவை கமலாத்தாள் பாட்டி குறித்து சமூக ஊடகங்களில் பரவிய செய்திகளையடுத்து, அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பாட்டி குறித்த தகவல்களை பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும், கமலாத்தாள் பாட்டிக்கு ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதியின்படி அன்னையர் தினமான இன்று அவருக்காக கட்டி முடிக்கப்பட்ட வீட்டைப் பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்க தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவர்க்கு, சிறிது சந்தோஷம் கொடுக்கும் முயற்சியைவிட வேறு ஒரு பெரிய சந்தோஷம் இல்லை" என்ற செய்தியுடன் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

ஒரு தாய்க்கு கொடுத்த வாக்கு அன்னையர் தினத்தில் நிறைவேற்றப்பட்டது என்ற வாசகத்துடன் தொடங்கும் அந்த வீடியோவில் பேசும், கமலாத்தாள் பாட்டி, " மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து புகழ் வந்தாருங்க என் குடிசைக்கு, குடிசை ரொம்ப இடைஞ்சலாக இருக்கிறது. ஏதோ ஒரு வீடு கட்டிக்கொடுங்க என்று கெஞ்சினேன். அதற்கு அவர் ஆனந்த் மஹிந்திராவிடம் பேசிவிட்டு வந்து சொல்கிறேன் என்று சொன்னார்" என்று கூறுகிறார்.

அதன்பின்னர், கமலாத்தாள் பெயரில் முதலில் நிலம் பதிவு செய்யப்படுகிறது. தொடர்ந்து வீடு கட்டும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு, பூமி பூஜையுடன் பணிகள் தொடங்குகிறது. வீடு தயாரான நிலையில், அன்னையர் தினமான இன்று கமலாத்தாள் பாட்டியிடம் அவருக்கான பிரத்யேக சமையல் கூடத்துடன் கட்டப்பட்ட வீடு ஒப்படைக்கப்படுகிறது. இறுதியாக இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக நன்றி இட்லி அம்மா, பசித்தோருக்கு உணவளிக்கும் உன்னத பணி தொடரட்டும் என்ற வாசகத்துடன் அந்த வீடியோ முடிகிறது. கோவை கமலாத்தாள் பாட்டிக்கு வீடுக்கட்டி தந்துள்ள தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு சமூக ஊடகங்களில் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த கமலாத்தாள் பாட்டி: கோவை ஆலந்துறையை அடுத்த வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த 85 வயதானவர் கமலாத்தாள் பாட்டி. கடந்த 30 ஆண்டுகளாக தனி ஆளாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார். வடிவேலம்பாளையம் பகுதியில் ஒரு ரூபாய் இட்லி பாட்டி என்றால் மிகவும் பிரபலம். 25 பைசாவுக்கு இட்லி விற்பனை செய்யத் தொடங்கிய கமலாத்தாள் பாட்டி விலைவாசி உயர்வு காரணமாக இன்று ஒரு இட்லியை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.

வெளியிடங்களில் உள்ள ஹோட்டல்களில் ஒரு இட்லி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில் எளிய மக்கள் பசியாற வேண்டும் என்ற நோக்கில் கமலாத்தாள் பாட்டி ஒரு ரூபாய்க்கு இட்லியும், சாம்பார், சட்னி ஆகியவற்றை தனது கையால் சமைத்து விற்பனை செய்து வருகிறார். அதிகாலை 4 மணிக்கு எழும் கமலாத்தாள் பாட்டி தள்ளாத வயதிலும் வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு இட்லி, சாம்பார், சட்னி வைக்கும் பணியையும் செய்கிறார். நாள் ஒன்றுக்கு கமலாத்தாள் பாட்டி குறைந்தபட்சம் 600 இட்லிகள் வரை விற்பனை செய்து வருகிறார்.

இட்லிக்கு மாவு அரைக்க மட்டுமே கிரைண்டர் பயன்படுத்தும் கமலாத்தாள் பாட்டி, சட்னி அரைப்பதற்கு இன்னும் கல் உரலையே பயன்படுத்தி வருகிறார். கமலாத்தாள் பாட்டியின் கைப்பக்குவத்தில் சமைக்கப்படும் சாம்பார், சட்னிக்காகவே காலை முதலே ஏராளமானோர் வந்துவிடுகின்றனர்.மாணவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள், அரசு அலுவலகத்தில் பணி செய்வோர், தனியார் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் என பலரும் கமலாத்தாள் பாட்டியின் கைப்பக்குவத்தில் செய்யப்படும் இட்லி, சட்னி, சாம்பாருக்காக காலை முதலே காத்திருக்கிறார்கள்.

தள்ளாத வயதிலும் தனி ஆளாக உழைத்து பிழைப்பு நடத்தி வரும் கமலாத்தாள் பாட்டி குறித்த செய்தி தொலைக்காட்சிகளிலும், நாளேடுகளிலும் வந்தது. சமூக ஊடகங்களிலும் கமலாத்தாள் பாட்டி செய்தி வைரலானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்