சென்னை: மயிலாப்பூரில் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் உள்ளிட்ட இருவரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து சுமார் 1000 சவரன் தங்க நகைகள், 50 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்த ஶ்ரீகாந்த் (60) மற்றும் அவரது மனைவி அனுராதா (55), கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வசிக்கும் தங்களது மகள் சுனந்தா மற்றும் மகன் சஸ்வத்தை பார்க்கச் சென்றுள்ளனர். நேற்று (மே 7) அதிகாலை ஶ்ரீகாந்த் தனது மனைவியுடன் அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். ஶ்ரீகாந்துக்கு சொந்தமான மகாபலிபுரம், நெமிலிச்சேரியில் உள்ள பண்ணை வீட்டில் தோட்டக்காரராக வேலை செய்யும் சர்மா என்பவரின் மகன் கிருஷ்ணா , சென்னை விமான நிலையத்திலிருந்து ஶ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியை காரில் அழைத்து வரச் சென்றார். இந்நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் சஸ்வத் தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்ட போது, ஶ்ரீகாந்த் சென்னை விமான நிலையம் வந்து விட்டதாகவும், தங்களை அழைத்துச் செல்ல கார் ஓட்டுநர் கிருஷ்ணா வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சஸ்வத் மீண்டும் காலை 8.30 மணியளவில் தனது பெற்றோரை தொடர்பு கொண்டபோது செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர் உடனே கார் ஓட்டுநர் கிருஷ்ணாவை தொடர்பு கொண்டபோது, இருவரும் வீட்டில் தூங்குவதாகவும் அவர்கள் எழுந்த பிறகு தகவல் தெரிவிப்பதாகவும் கிருஷ்ணா கூறியுள்ளார். சஸ்வத் சிறிது நேரம் கழித்து மீண்டும் கிருஷ்ணாவை தொடர்பு கொண்ட போது கிருஷ்ணா முன்னுக்குப்பின் முரணான பதிலளித்துள்ளார்.
சந்தேகமடைந்த சஸ்வத் தனது உறவினர் ரமேஷ் பரமேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்து மயிலாப்பூரில் உள்ள வீட்டிற்கு சென்று தனது பெற்றோரைப் பார்க்குமாறு கூறியுள்ளார். உடனே ரமேஷ் பரமேஸ்வரன் தனது நண்பர் ஶ்ரீநாத் என்பவருடன் சேர்ந்து மயிலாப்பூரில் உள்ள ஶ்ரீகாந்த் வீட்டிற்குச் சென்று பார்த்த போது, கதவை யாரும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் சூட்கேஸ் திறக்கப்பட்ட நிலையில் லாக்கரிலிருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
மேலும் வீடு சந்தேகத்திற்கிடமாக டெட்டாலால் சுத்தப்படுத்தப்பட்ட நிலையில் இருந்துள்ளது. வீட்டிற்கு வெளியே இருந்த இன்னோவா காரும் காணாமல் போயிருப்பதும் தெரியவர சந்தேகமடைந்த ரமேஷ் பரமேஸ்வரன், கார் ஓட்டுநர் கிருஷ்ணா மீது சந்தேகமடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து, மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மயிலாப்பூர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்தனர். மேலும் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கிருஷ்ணா மற்றும் காணாமல் போன காரை தேடிவந்தனர்.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவிட்டதன் பேரில், மயிலாப்பூர் துணை ஆணையாளர் திஷாமிட்டல், தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்தனர். போலீஸாருக்கு கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில் குற்றவாளி தமிழகத்தை விட்டு நேபாளத்துக்கு தப்பிச்செல்வது தெரியவந்தது.
இதையடுத்து காவல் உயரதிகாரிகள், ஆந்திர மாநில போலீஸாரை தொடர்பு கொண்டு குற்றவாளிகளின் இருப்பிடத்தை தெரிவித்ததன் பேரில் ஆந்திரா மாநிலம், ஒங்கோல் போலீஸார் கார் ஓட்டுநர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவி ஆகிய இருவரை இன்னோவா காருடன் மடக்கிப்பிடித்து சென்னை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.தீவிர குற்றத்தடுப்பு பிரிவு உதவி ஆணையர் குமரகுருபரன் தலைமையிலான காவல்துறையினர் ஒங்கோலுக்கு விரைந்து சென்று பிடிபட்ட கிருஷ்ணா மற்றும் ரவியை சென்னை அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
இதையடுத்து நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணா (45), மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ரவி (39) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்ததில் இருவரும் தங்க நகைகளுக்கு ஆசைபட்டு ஶ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகிய இருவரையும் மயிலாப்பூர் வீட்டில் வைத்து கொலை செய்து, வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துள்ளதும், பின்னர் இருவரது உடல்களையும் காரில் ஏற்றி இறந்து போன ஶ்ரீகாந்துக்கு சொந்தமான செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரம் அருகில் நெமிலிச்சேரி பண்ணை வீட்டில் புதைத்து விட்டு காரில் தப்பியதாகவும் தெரிவித்தனர்.
கைதானவர்களிடமிருந்து, திருடப்பட்ட சுமார் 1,000 சவரன் தங்க நகைகள், சுமார் 50 கிலோ வெள்ளிப்பொருட்கள், 2 செல்போன்கள் மற்றும் இன்னவோ கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தல் மற்றும் திருட்டு வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கினை ஆதாய கொலை வழக்காகப் பதிவு செய்து மயிலாப்பூர் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago