சென்னை / தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள ஓட்டலில் ‘சிக்கன் ஷவர்மா' சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ‘சிக்கன் ஷவர்மா’ கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.
அண்மையில் கேரளாவில் ‘சிக்கன் ஷவர்மா’ சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார். அவர் சாப்பிட்ட உணவை அம்மாநில சுகாதாரத் துறையினர் பரிசோதித்ததில் ‘ஷிகெல்லா’ என்ற பாக்டீரியா இருந்ததும், அப்பெண் உயிரிழப்புக்கு அந்த பாக்டீரியா காரணமாக இருக்கலாம் என்றும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரவீன்(22), புதுக்கோட்டையைச் சேர்ந்த பரிமளேஸ்வரன்(21), தருமபுரியைச் சேர்ந்த மணிகண்டன்(22) ஆகிய மாணவர்கள் நேற்று முன்தினம் இரவு ஒரத்தநாடு பிரிவு சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் ‘சிக்கன் ஷவர்மா' சாப்பிட்டுள்ளனர். சிறிதுநேரத்தில் மூவரும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.உடனடியாக அவர்களுக்கு ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்த மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சித்ரா தலைமையிலான அலுவலர்கள் சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு செய்து, அங்கிருந்த உணவுப் பொருட்களை பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கோழி இறைச்சிக் கடைகள் மற்றும் ‘சிக்கன் ஷவர்மா’ கடைகளில் நேற்று தீவிர சோதனை நடத்தினர். சென்னையில் சுமார் 60-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் சந்தேகத்துக்கிடமான 15-க்கும் மேற்பட்ட கடைகளில் இறைச்சி உணவு மாதிரிகள் சேகரித்து, கிண்டியில் உள்ள கிங் ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
சில கடைகளில் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால், அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீ ஸும் வழங்கியுள்ளனர். மாநிலம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட ‘சிக்கன் ஷவர்மா’ கடைகளில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அதிகாரிகளின் ஆய்வுக்கு பயந்து ஏராளமான ‘ஷவர்மா’ கடைகள் நேற்று மூடப்பட்டிருந்தன.
நாகப்பட்டினம் வண்டிப் பேட்டை பகுதியில் உள்ள கோழி இறைச்சி மொத்த விற்பனை கடையில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையிலான அலுவலர்கள் நடத்திய ஆய்வில், அங்கு விற்பனைக்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த 250 கிலோ கோழி இறைச்சி கெட்டுப்போயிருந்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல, திருக்குவளையில் 60 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டது. திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ‘சிக்கன் ஷவர்மா’ விற்பனை செய்யும் 21 கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, 12 கிலோ கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ‘சிக்கன் ஷவர்மா’ கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில், உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் கடந்த 3 நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை 60-க்கும் மேற்பட்ட கடைகளில் மேற்கொள்ளப்பட் டுள்ள ஆய்வில், 10 கடைகளில் தரமற்ற 25 கிலோ கோழி இறைச்சி மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அக்கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
‘கிரில் சிக்கனு’க்கும் சிக்கல்!
‘சிக்கன் ஷவர்மா’ கடைகளில், சிக்கன் அதிக அளவில் சூடுபடுத்தப்படுவதால், அவற்றில் உள்ள பாக்டீரியாக்கள் இறந்துவிடும். அந்த சிக்கனை துண்டு துண்டாக வெட்டி, ‘மையோனைஸ்’ எனப்படும் வெண்ணை போன்ற பொருளுடன் சேர்த்து விற்பனை செய்கிறார்கள். இந்தப் பொருள் பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பச்சை முட்டையில் ஏராளமான பாக்டீரியாக்கள் இருக்கும். அதை வேக வைத்தே சாப்பிட வேண்டும். பச்சையாகச் சாப்பிட்டால் டைஃபாய்டு போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
இந்நிலையில் ‘ஷவர்மா’ உணவை உண்ணும்போது அதில் பாக்டீரியாக்கள் அதிகரிக்க ‘மையோனைஸ்’ முக்கிய காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. இதைத் தயாரித்து வைக்கப்படும் பாத்திரங்களை பெரும்பாலான கடைகளில் தினமும் கழுவுவதும் இல்லை. இந்த ‘மையோனைஸ்’-ஐ ‘கிரில் சிக்கன்’ வாங்கும்போதும் கொடுக்கிறார்கள்.
அதனால் ‘ஷவர்மா’ கடைகளை நோக்கி மட்டும் ஆய்வை நடத்தாமல், ‘கிரில் சிக்கன்’ தயாரிக்கும் கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago