ஷவர்மா உணவகங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன?

By செய்திப்பிரிவு

கோவை: விதிகளை மீறி ஷவர்மா தயாரித்து விற்றால் கடைகள் மூடப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கேரளாவில் உள்ள உணவகத்தில் கெட்டுப்போன ‘ஷவர்மா’ சாப்பிட்டு சமீபத்தில் ஒரு மாணவி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உணவுப் பாதுகாப்புத்துறையின் நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையிலான அலுவலர்கள் கோவையில் போத்தனூர், சுந்தராபுரம், குனியமுத்தூர், காந்திபுரம், பீளமேடு, சரவணம்பட்டி, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கூறியதாவது: கோவையில் ஷவர்மா விற்பனை செய்யப்படும் கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 73 கடைகளில் 57.45 கிலோ பழைய ஷவர்மா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், அங்கு 3 உணவுகளின் மாதிரிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளது. தவிர, இதுதொடர்பாக 35 கடைகளுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 3 கடைகளுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஷவர்மா தயாரிப்பாளர்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற்றவரிடத்தில் மட்டும் தான் சிக்கன் போன்ற மூல உணவுப்பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். உணவகங்களில் ஷவர்மா தயாரிக்கும் பணியாளரும், இதர பணியாளர்களும் டைபாய்டு போன்ற உணவு தொடர்பான தொற்று நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி மருத்துவரிடம் இருந்து நோய் தாக்கமற்றவர் என்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

ஷவர்மா அடுப்பானது தூசிகள் படியுமாறு சாலையோரத்திலோ அல்லது உணவகத்தின் வெளியிலோ வைக்கக்கூடாது. பாதுகாப்பான இடத்தில் தான் வைத்து விற்க வேண்டும். ஷவர்மா நன்கு வேக வைத்த பின்னர்தான் நுகர்வோர்களுக்கு வழங்க வேண்டும். ஷவர்மா வேக வைக்கும் அடுப்பு தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்க வேண்டும். அடுப்பை அனைத்து பயன்படுத்தக்கூடாது. அடுப்பில் வைத்து வெந்த 2 மணி நேரத்துக்குள் ஷவர்மாவை பரிமாறிவிட வேண்டும். அதுவரை அடுப்பு மிதமான வெப்பநிலையில் இயங்க வேண்டும். மீதம் உள்ள ஷவர்மாவை பரிமாறாமல் கழிவாக அகற்ற வேண்டும். ஷவர்மாவை குறைந்தபட்சம் 70 டிகிரி செல்சியஸில் வேக வைக்க வேண்டும். சமைப்பவரின் கைகள் படாமல் தயாரித்து நுகர்வோருக்கு வழங்க வேண்டும்.

மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றாமல் ஷவர்மா தயாரித்து விற்பனை செய்தால் அவர்களது கடை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்படும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஷவர்மா வாங்குவதற்கு முன்னர் அது சுகாதாரமாக தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து வாங்கி உண்ண வேண்டும். ஷவர்மா தயாரிப்பில் ஏதேனும் குறைகள் இருந்தால் 94440-42322 என்ற உணவுப் பாதுகாப்புத்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு புகாராக தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்