அரசுப் பள்ளி மாணவர்கள்  எளிதாக ஆங்கிலம் படிக்க கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் 

By செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு எளிதாக ஆங்கிலம் படிக்க, பேச, புரிந்து கொள்ள ஏதுவாக "Google Read Along" என்ற செயலியை பயன்படுத்துவதற்கென பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு இடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வித் துறை சார்பில் நபார்டு திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம், மாவட்ட கனிமவள நிதி ஆகியவற்றின் வாயிலாக 181 கோடியே 3 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 208 அரசு பள்ளிக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறைகள், சுற்றுச்சுவர் மற்றும் மாவட்ட ஆசிரியர் மற்றும் கல்வி நிறுவனக் கட்டடம் ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 5) திறந்து வைத்தார். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக பள்ளிகளின் வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள், மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், இணைய வசதிகளைப் பள்ளிகளில் ஏற்படுத்துதல், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, தமிழகத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட "இல்லம் தேடி கல்வி", "நம் பள்ளி நம் பெருமை" பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், நபார்டு திட்டத்தின் கீழ் அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, நீலகிரி, தூத்துக்குடி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவாரூர், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 66 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 110 கோடியே 3 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடங்கள், சுற்றுச்சுவர், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள்;

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், அரியலூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 140 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 68 கோடியே 88 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள்; மாவட்ட கனிமவள நிதியின் கீழ், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 1 கோடியே 70 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைக் கட்டடம்;

மாவட்ட ஆசிரியர் மற்றும் கல்வி நிறுவன நிதியின் கீழ், கரூர் மாவட்டம், மாயனூரில் 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் ஓய்வு அறை மற்றும் சுற்றுச்சுவர்; என மொத்தம் 181 கோடியே 3 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட முத்தமிழறிஞர் மொழி பெயர்ப்புத் திட்டம், திசைதோறும் திராவிடம், இளந்தளிர் இலக்கியத் திட்டம் ஆகிய மூன்றுத் திட்டங்களின் கீழ் இதுவரை 9 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக "திசைதோறும் திராவிடம்" திட்டத்தின் கீழ் 5 நூல்கள் மற்றும் இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் 23 சிறார் நூல்கள்;அமரர் கல்கி எழுதிய மகத்தான நாவலான "பொன்னியின் செல்வன்" ஐந்து பாகங்களாக முதல் முறையாக மலையாள மொழியில் ஜி.சுப்பிரமணியனால் மொழிபெயர்க்கப்பட்டு DC Books நிறுவனத்தின் கூட்டு வெளியீடாகவும்;

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் புகழ்பெற்ற குறுநாவலான "வாடிவாசல்" செல்வி மினிபிரியா மொழிபெயர்ப்பில் மலையாளத்தில் அதே தலைப்பில் வி.சி.தாமஸ் பதிப்பகத்தின் கூட்டு வெளியீடாகவும்; திராவிடச் சிந்தனையில் பெண்ணுரிமையின் வெளிப்பாடாக தமிழில் இதுவரை எழுதியுள்ள பெண் படைப்பாளிகளின் எழுத்துகளில் 30 சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து கவிஞர் அ. வெண்ணிலா தொகுத்த "மீதமிருக்கும் சொற்கள்" எனும் சிறுகதைத் தொகுப்பு "தமிழ்ப் பெண் கதைகள்" என்ற தலைப்பில் வெங்கிடாசலத்தால், மலையாள மொழியாக்கம் செய்யப்பட்டு மாத்ருபூமி பதிப்பகத்தின் கூட்டு வெளியீடாகவும்; எடமான் ராஜன் மொழிபெயர்ப்பில் பூமணியின் "வெக்கை" என்ற நாவல், மலையாளத்தில் "உஷ்ணம்" என்ற தலைப்பில் லோகோபுக்ஸ் நிறுவனத்துடனும், "இமயம் கதைகள்" ஆலிவ் பதிப்பகத்தோடும் கூட்டு வெளியீடாகவும்;ஆகிய நூல்களை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் வெளியிட்டார்.

குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும் நன்னெறிக் கல்வியைக் கற்பிக்கவும் ‘இளந்தளிர் இலக்கியத்திட்டம்’ அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தின் சிறந்த சிறார் படைப்பாளிகளான இளங்கோ, ஞா.கலையரசி, வெற்றிச்செழியன், உமாமகேஸ்வரி, கிரீஷ், சரிதாஜோ, பொற்கொடி, உதயசங்கர், சாலை செல்வம் மற்றும் ஆதி வள்ளியப்பன் ஆகிய 10 எழுத்தாளர்களின் அழகிய ஓவியங்களுடன் கூடிய 23 சிறார் படைப்புகளை தமிழக முதல்வர் வெளியிட்டார்.

குழந்தைகளின் எழுத்தார்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் 18 வயதிற்குட்பட்ட மூன்று இளம் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கவிமணி விருதும், விருதுடன் ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும், கேடயமும், சான்றிதழும் வழங்கப்படுகிறது. அதன்படி, கவிமணி விருதிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள செல்வி ர.சக்தி, செல்வி ந.சுபிஷா, செல்வன் ம. ருத்ரவேல் ஆகியோருக்கு தமிழக முதல்வர் பரிசுத்தொகையையும், சான்றிதழையும், கேடயத்தையும் வழங்கினார்.

அரசுப் பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு எளிதாக ஆங்கிலம் படிக்க, பேச, புரிந்து கொள்ள ஏதுவாக "Google Read Along" என்ற செயலியை பயன்படுத்துவதற்கென பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு இடையே தமிழக முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வி ஆணையர் க. நந்தகுமார்,இல்லம் தேடி கல்வி சிறப்புப் பணி அலுவலர் க. இளம்பகவத், கூகுள் நிறுவனத்தின் அலுவலர்கள் நிதின் காஷ்யாப், ஹேமந்த், அபிநவ் உன்னி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்