சிந்துவின் கனவை சிதைத்த விபத்து | ‘என் மகள் மீண்டும் நடக்கணும், அரசு உதவணும்’ - டீ விற்கும் தந்தை உருக்கம்

By இந்து குணசேகர்

சென்னை: "என் மகளை அரசுதான் மீட்டுத் தரவேண்டும். அவள் பழையபடி நடக்க வேண்டும். பழையபடி சிரிக்க வேண்டும்” என்று உடைந்துபோன குரலில் பேசுகிறார் சிந்துவின் தந்தை சக்தி.

தேசிய அளவில் வாலிபால் ப்ளேயராக வேண்டும் என்ற கனவில் ஒவ்வொரு நாளும் பயிற்சி மேற்கொண்டிருந்த சிந்துவின் கனவை 2020-ஆம் ஆண்டு டிசம்பர் நடுங்கச் செய்தது. கேன்சர் நோயாளிகளுக்காக தனது முடியை அளித்த சில நாட்களிலே சிந்து மிகப் பெரிய விபத்தை சந்திக்க நேர்ந்தது. சென்னையில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிந்து, தோழி வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து தவறுதலாக விழ, அவருடைய இரண்டு கால் எலும்புகளும் உடைந்தனை. தாடையின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. முன்வரிசையில் இருந்த பற்கள் முழுமையாகக் கொட்டிவிட்டன.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிந்து. அதனைத் தொடர்ந்து சுமார் 10 அறுவை சிகிச்சைகளுக்கு சிந்து உள்ளாக்கப்பட்டார். அவருக்கு அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையினால் தற்போது அவரது உயிர் காப்பாற்றப்பட்டு, தன் கால்களால் எழுந்து நிற்கும் நிலைக்கு நகர்ந்திருக்கிறார் சிந்து. எனினும் சிந்து முழுமையாக குணமாகவில்லை. சிந்துவால் தற்போதுவரை நடக்க முடியவில்லை. அவரால் நீண்ட நேரம் ஓர் இடத்தில் அமர்ந்திருக்கக் முடியாது. படுக்கையுடனே பல நேரங்களை கழித்து வருகிறார் சிந்து. இந்தச் சூழலிலும் உத்வேகத்துடன் நாளை ப்ளஸ் 2 தேர்வை எழுதுகிறார் சிந்து.

இந்த நிலையில்தான் தமிழக அரசுக்கு சிந்துவின் தந்தை சக்தி கோரிக்கை ஒன்றை கனத்த இதயத்துடன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து சிந்துவின் தந்தை சக்தி 'இந்து தமிழ் திசை' செய்தித் தளத்திடம் கூறும்போது, "என் மகளுக்கு அந்த பெருவிபத்து ஏற்பட்டவுடனேயே நாங்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். உடம்பில் பல பகுதிகள் சேதமடைந்து இருந்ததால் முதலில் அவளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு சிக்கலாக இருந்தது. இதனால், முதல் மூன்று நாட்களுக்கு ஆபரேஷனே செய்யப்படவில்லை. அதன்பிறகு முகம் மற்றும் காலுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. முக அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தது.

காலில் செய்த அறுவை சிகிச்சைக்கு உரிய பலன் கிடைக்கவில்லை. இதனால் காலில் தையல் பிரிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் தையல் போட வேண்டியிருந்தது. மேலும், தையல் போட்ட இடத்திலிருந்து சீழ் வடிந்தது. புது சதை, சிமென்ட் எல்லாம் வைக்கப்பட்டது. கிட்டதட்ட இது தொடர்பாக என் மகளுக்கு 10-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடந்தன.

என் மகளை நான் மருத்துவமனையில் சேர்த்த அன்றே அவளுக்கு அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டிருந்தால் இந்த நிலை நிச்சயம் என் மகளுக்கு வந்திருக்காது. நான் அரசு மருத்துவமனையோ, மருத்துவர்களையோ குறைகூறவில்லை. என் வேதனை இது. இன்னும் அவர்கள் என் மகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்திருக்கலாம். தற்போதுகூட என் மகளின் காலிலிருந்து சீழ் வடிகிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை.

இந்தச் சூழலில் தற்போது என் மகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத இருக்கிறாள். 12-ம் வகுப்பு படிப்புக்கான செலவை அவள் படிக்கும் பள்ளியே ஏற்றது. மருத்துவ சிகிச்சைக்கும் உதவினார்கள். எனது மகளால் நீண்ட நேரம் அமர்ந்து தேர்வெழுத முடியாது. இந்த நிலையில் அவள் பொதுத் தேர்வை எதிர் நோக்கியிருக்கிறாள்.

டீ விற்கும் தொழில் செய்யும் நான் முடிந்த அளவு கடன் வாங்கி, நகைகளை விற்று என் மகளுக்கான சிகிச்சையை செய்திருக்கிறேன். வாக்கிங் ஸ்டிக், நாற்காலி என வாங்கி, வாங்கி நான் முழுவதும் கடனாளிக்கிவிட்டேன். எப்படியாவது என் மகளை நடக்க வைத்துவிட வேண்டும் என்று எண்ணுகிறேன். கடன் வாங்கி அதனை நான் அடைத்துவிடும் நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால், என் மகள் இன்னமும் குணமாகமல் இருப்பது மிகுந்த மன அழுத்தத்தை அளிக்கிறது.

என் மகள் நடப்பாளா என்ற கேள்விக்கு இதுவரை மருத்துவர்கள் பதிலளிக்கவில்லை. என் மகள் எழுந்து நிற்பதே பெரிய விஷயம் என்று கூறுகிறார்கள். என் மகளுக்கு தேசிய அளவில் வாலிபால் ப்ளேயராக வேண்டும் என்ற கனவும் இருந்தது. அவள் இந்திய ராணுவத்தில் சேர நினைத்தாள். ஆனால் நடப்பதே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. அவளுக்கு மேலும் சிகிச்சை அளிக்க என்னிடம் போதிய பணம் இல்லை. என் மகள் நடக்க வேண்டும். அதற்கான மருத்துவ செலவுக்கு அரசு உதவி புரிய வேண்டும். அரசு உதவும் என்று நம்புகிறேன்” என்று உடைந்த குரலில் தெரிவித்தார்.

பெருங்கனவுகளோடு ஓடிக் கொண்டிருந்த சிந்துவை இந்த விபத்து இரண்டு ஆண்டுகளாக கட்டிப் போட்டிருக்கிறது. எப்படியாவது நடந்துவிட வேண்டும் என்ற ஆவலில் சுவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சிந்துவின் கனவு நிச்சயம் நனவாகும். விரைவில் சிந்து நடப்பார்... தனது கனவுக்கான அடுத்த அடியை வைப்பார் என்ற நம்பிக்கை மட்டுமே தொக்கி நிற்கிறது.

இந்த நிலையில் மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

செய்தி: 'மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும்' - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்