மழைநீர் வடிகாலில் கழிவுநீரை விட்ட 217 இணைப்புகள் துண்டிப்பு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: மழைநீர் வடிகாலில் கழிவுநீரை விட்ட 217 இணைப்புகளைத் துண்டித்து சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையில் 387 கி.மீ. நீளத்திற்கு பேருந்து சாலைகள் மற்றும் 5,524 கி.மீ. நீளத்திற்கு உட்புற சாலைகள் உள்ளன. இவற்றில், 2,071 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் உள்ளது. சென்னையில் 17 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இதில், சில வீடுகள் மற்றும் வணிக வளாகம், உணவு விடுதிகள் கழிவுநீர் இணைப்பு பெறாமல், முறையற்ற வகையில் சட்டத்திற்குப் புறம்பாக மழைநீர் செல்லக்கூடிய வடிகாலில், கழிவு நீர் இணைப்புகளைக் கொடுத்துள்ளனர்.

இந்த கழிவுநீர் இணைப்பை கண்டறிந்து துண்டிக்க, வார்டு வாரியாக குழு அமைத்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. மேலும் இந்த குழு தினமும் ஒரு மணி நேரம் மழைநீர் வடிகால்களில் ஏதேனும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து, முறையற்ற கழிவுநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க உத்தரவிடப்பட்டது.

இதன்படி கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 217 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மழை நீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றியவர்களிடம் இருந்து ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.1.10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறிய 217 கழிவுநீர் இணைப்புகளைத் துண்டித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE