சென்னை: கனவாகவே தொடரும் அரசு மருத்துவர்களின் சம ஊதிய கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டுமென அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழக அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்ற அரசு மருத்துவர்களின் கோரிக்கை மீண்டும் ஒருமுறை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த தங்களின் எதிர்பார்ப்பு மருத்துவத்துறை மானியக் கோரிக்கையில் நிறைவேற்றப்படும் என்று அரசு மருத்துவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதுகுறித்த அறிவிப்பு வெளியாகாதது ஏமாற்றமளிக்கிறது.
தமிழக அரசு மருத்துவர்களின் சம ஊதியக் கோரிக்கை என்பது மிக எளிமையானது; நியாயமானது. மத்திய அரசிலும், மாநில அரசிலும் பணியில் சேரும் மருத்துவர்களுக்கு ஒரே மாதிரியாக ரூ.56,000 ஊதியம் வழங்கப்படும் நிலையில், பணி ஓய்வின்போது மத்திய அரசு மருத்துவர்களை விட மாநில அரசு மருத்துவர்களுக்கு ரூ.45,000 குறைவாக வழங்கப்படுகிறது; இது சரி செய்யப்பட வேண்டும் என்பது தான் மாநில அரசு மருத்துவர்களின் கோரிக்கை ஆகும். இதை சரி செய்வது மிகவும் எளிதானதாகும்.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு முறையே 4, 9, 13, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் மாநில அரசு மருத்துவர்களுக்கு 8, 15, 17, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படுவதுதான் ஊதிய முரண்பாட்டுக்கு காரணம். 13-வது ஆண்டு பணிக்காலத்தின் இறுதியில் மத்திய அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ரூ.1.23 லட்சம் அடிப்படை ஊதியத்தை மாநில அரசு மருத்துவர்களுக்கும் வழங்குவதன் மூலம் இந்த அநீதிக்குத் தீர்வு காண முடியும். அரசாணை எண் 354இல் உள்ள எதிர்கால சரத்துகளைப் பயன்படுத்தி இதை செய்ய முடியும். ஆனால், இதை முந்தைய அரசும் செய்யவில்லை; புதிய அரசு பதவியேற்று ஓராண்டாகியும் செய்யவில்லை.
» உறுதிமொழி விவகாரத்தில் தவறிழைக்காத மருத்துவக் கல்லூரி முதல்வரை தண்டிப்பது நியாயமற்ற செயல்: ஓபிஎஸ்
» இனி பகலிலும் பூங்காக்களை திறந்து வைக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி உத்தரவு
தமிழக அரசு மருத்துவர்களின் இந்த கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று பாமக கடந்த இரண்டரை ஆண்டுகளில் 5 முறை வலியுறுத்தியுள்ளது. திமுக அரசு பதவியேற்ற பிறகும் கூட கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார். மருத்துவர்களின் கோரிக்கையை ஆய்வு செய்து நிறைவேற்ற உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஆணையிட்டிருந்தது. தமிழக அரசு அமைத்தக் குழுவும் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றலாம் என்று பரிந்துரைத்தது.
ஆனாலும், இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஆகஸ்ட் மாதம் மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட போது, போராட்டத்தை கைவிட்டால் கோரிக்கையை பரிசீலிப்பதாக அப்போதைய அரசு அறிவித்தது. அதையேற்று மருத்துவர்களும் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், போராடிய மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்து அப்போதைய அரசு பழி வாங்கியதே தவிர கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. கோரிக்கைகள் கோரிக்கைகளாகவே இருந்தன.
திமுக ஆட்சியில் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசு மருத்துவர்கள் நம்பினர். அதற்கு காரணம், 2019-ஆம் ஆண்டு மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று ஆதரவளித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இப்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின், திமுக ஆட்சியில் மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். ஆனால், அவரது தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், கோரிக்கைகள் மட்டும் நிறைவேறவில்லை.
மருத்துவத் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதற்குக் காரணம் அரசு மருத்துவர்கள் தான். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிக செலவும் ஆகாது. ஆண்டுக்கு ரூ.300 கோடி மட்டும் தான் தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
எனவே, தமிழக அரசு எந்தத் தயக்கமும் இல்லாமல், தமிழக அரசு மருத்துவர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தின் 5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவத் துறை மானியக் கோரிக்கையில் வெளியிடத் தவறிய இதுகுறித்த அறிவிப்பை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்திலேயே வெளியிடுவதற்கு முதல்வர் முன்வர வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago