சென்னை - மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதி பெயர்: நெடுஞ்சாலைத்துறை பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: திருச்சி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில்ரூ.2,124 கோடியில் 255 கி.மீ.இருவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை முதல் மாமல்லபுரம் வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலை, ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை’ என அழைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

தமிழக நெடுஞ்சாலைத்துறையின் 75-வது ஆண்டு பவளவிழா, சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பவளவிழா நினைவுத்தூணை திறந்துவைத்து, விழா மலரையும், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்ட இலச்சினையையும் வெளியிட்டார்.

சென்னை மத்திய கைலாஷ்பகுதியில் ரூ.46.54 கோடியில் மேம்பாலம், மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.199.12 கோடியில் மேம்பாலம், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி இழை நடை மேம்பாலம் ஆகியவற்றுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். திருச்சி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ரூ.2,124 கோடியில் 255 கி.மீ. இருவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் 32 சாலைப் பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

விழாவில் முதல்வர் பேசியதாவது: "மக்களின் வாழ்க்கையில் அன்றாடம் பலனளிப்பது நெடுஞ்சாலைத்துறை. சரியான, அழகான, தரமான சாலைகள் அமைத்தாலே மக்களிடம் நல்ல பெயரை வாங்கிவிட முடியும். சாலை சரியில்லை என்றால் முதலில் அரசைத்தான் திட்டுவார்கள்.

தமிழகம் உள்கட்டமைப்பில் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றதற்கு முழுமுதல் காரணம் நெடுஞ்சாலைத்துறை தான். நாட்டிலேயே முதல் ஆராய்ச்சி நிலையமான தமிழக நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தை உலகத்தரத்தில் மாற்ற வேண்டும். போக்குவரத்து பிரச்சினையை தீர்க்க சென்னையில் பிரம்மாண்டமான அண்ணா மேம்பாலத்தை அமைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இந்த பாலத்தை முன்னோடியாக வைத்து கோவை, திருநெல்வேலியில் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டன.

திமுக ஆட்சியில்தான் ஒரேகட்டமாக 106 பாலங்கள் ரூ.307 கோடியில், 2 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டது. திமுக ஆட்சியில்தான் 10 ஆயிரம் சாலைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். சாலைகள் அமைப்பதில் நிலம் கையகப்படுத்துவதுதான் சிக்கலாக உள்ளது. இதற்காக, 5 சிறப்பு டிஆர்ஓக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இனி நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படாது.

முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வரும் 2026-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை தரைப்பாலங்களே இல்லாத மாநிலமாக உருவாக்க உள்ளோம். சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை’ என்று பெயர் சூட்டப்படும். 59 நகராட்சிகளில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படும். புறவழிச்சாலை பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர் வேலு 18 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இவை எல்லாவற்றையும் உருவாக்கினால், தமிழகத்தின் உள்கட்டமைப்பு இன்னும் சிறப்பாக அமையும்" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, “1971-ல் திமுக ஆட்சியில்தான் நெடுஞ்சாலைத்துறை வெள்ளி விழா நடந்தது. 1997-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் பொன்விழா நடந்தது. தற்போது 2022-ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பவளவிழா நடக்கிறது. நூற்றாண்டு விழாவும் இவர் தலைமையில்தான் நடக்கும்” என்றார்.

விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சா.மு.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நெடுஞ்சாலைத்துறை செயலர் தீரஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்