திருச்சி: தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக சின்ன வெங்காயத்தின் விலை உயரவில்லை. இதனால், விவசாயிகள், வியாபாரிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாகி தவித்து வருகின்றன்றனர்.
தமிழகத்தில் அதிக அளவில் வெங்காயம் விற்பனை செய்யும் சந்தைகளில் திருச்சி வெங்காய சந்தை முக்கியமான இடத்தை வகிக்கிறது. இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சின்ன வெங்காயம் மற்றும் மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பெல்லாரி (பெரிய) வெங்காயம் ஆகியவை நாள்தோறும் ஏறத்தாழ 500 டன் அளவுக்கு விற்பனைக்கு வருகின்றன. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
2 மாதங்களாக உயராத விலை
இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் முதல் ரக சின்ன வெங்காயம் மொத்த விலையில் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், பிப்ரவரி மாத இறுதி வாரத்தில் கிலோ ரூ.25-ஆக குறைந்தது. இந்த விலை கொஞ்சம் கொஞ்சமாக உயரும் என நினைத்திருந்த நேரத்தில் இருமாதங்களை கடந்தும் விலை உயராமல், மேலும் குறைந்துள்ளது.
இதனால் வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாகி தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தகர் சங்கச் செயலாளர் ஏ.தங்கராஜூ ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது:
முன்னெப்போதும் இல்லாத வகையில் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த இரு மாதங்களுக்கு மேலாக குறைந்து கொண்டே வருகிறது. நேற்றைய நிலவரப்படி மொத்த விற்பனை விலையில் முதல்தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.15-க்கும், இரண்டாம் தரம் கிலோ ரூ.10-க்கும், மூன்றாம் தரம் கிலோ ரூ.7-க்கும் விற்பனையாகிறது.
தற்போது தினந்தோறும் ஏறத்தாழ சின்ன வெங்காயம் 200 டன் அளவுக்கு திருச்சி வெங்காய சந்தைக்கு வருகிறது. ஆனால் தினந்தோறும் 50 முதல் 100 டன் அளவுக்கு விற்பனையாகாமல் தங்கி விடுகிறது. தினந்தோறும் 5 டன் அளவுக்கு வெங்காயம் அழுகி குப்பையில் கொட்டப்படுகிறது. இது விவசாயிகளுக்கு மட்டுமில்லாது வியாபாரிகளுக்கும் நஷ்டத்தை தான் ஏற்படுத்துகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்று தொடர்ந்து 2 மாதங்களுக்கு மேலாக விலை உயராமல் இருந்ததில்லை என்றார்.
இதுகுறித்து சின்ன வெங்காய சாகுபடி விவசாயி ராஜேந்திரன் கூறியது:
சின்ன வெங்காயம் 60 நாள் பயிர், பாசன வசதியுள்ள பகுதியில் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை பயிர் செய்வோம். தற்போது அதிக விளைச்சல் காரணமாக விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதனால், விலை உயரும் என பட்டறை போட்டு வைத்திருந்த வெங்காயத்தை கூட சில விவசாயிகள் வயலிலேயே குழிதோண்டி புதைத்து விட்டனர். பல விவசாயிகள் அறுவடை செய்யும் கூலிக்கு கூட விற்பனை செய்ய முடியாது என்பதால், வயலிலேயே வெங்காய பயிரை டிராக்டர் வைத்து உழவு செய்துவிட்டனர்.
இதனால், வெங்காய சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு வெங்காய விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கி அவர்களை கைதூக்கி விட வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago