மதுரை: மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’ ரெத்தினவேலு, மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவில் நடந்த சமஸ்கிருத மொழி உறுதிமொழி ஏற்பு விவகாரத்தால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சென்னை அரசு மருத்துவமனைக்கு அடுத்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த அரசு ராாஜாஜி மருத்துவமனை ‘டீன்’னாக ரெத்தினவேலு இருந்தார். இவர், கரோனா தொற்று பரவ ஆரம்பித்த போது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி ‘டீன்’னாக பணிபுரிந்து வந்தார். அப்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா சிகிச்சையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் அவசரம் அவசரமாக ரெத்தினவேலு மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’னாக நியமிக்கப்பட்டார். அவர், தன்னை மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’னாக நியமித்தது சரியானது தான் என்பதை நிரூபிக்கும் வகையில் தினமும் காலையும், மாலையும் கவச உடைகள் அணிந்து ‘கரோனா’ வார்டுகளுக்கு சென்று நோயாளிகளுக்கு ஆறுதல் கூறியதோடு, அவர்கள் குறைகளை கேட்டரிந்து அந்த வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை உற்சாகப்படுத்தியும் வந்தார்.
டீனே கரோனா வார்டுகளுக்கு தினமும் வந்து சென்றததால் மருத்துவக்குழுவினரும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து நோயாளிகளுக்கு தடையில்லாமல் சிகிச்சைகளை வழங்கினர். உள்ளூர் அமைச்சர்கள், ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளருடன் இணைந்து அரசு மருத்துவமனைக்கு தேவையான ஆக்ஸிஜன், மருத்துவ உபகரணங்களை உடனுக்குடன் பெற்ற ஒரே நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ‘கரோனா’ நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க ‘டீன்’ ரெத்தினவேலு பம்பரமாக சுழன்று பணிபுரிந்து அனைவர் பாராட்டையும் பெற்றார்.
பிறகு ‘கரோனா’தொற்று அடங்கியப் பின்னர் மதுரை அரசு மருத்துவனைகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளில் தொடங்கி நோயாளிகள், பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நலனுக்காகவும் பல்வேறு பணிகளை மேற்கொண்டார். கிடப்பில் கிடந்த கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து அதனை திறக்கவும் ஏற்பாடு செய்தார். யாரையும் அதிகார தோரணையுடன் பார்க்காமல் அவர்கள் கோரிக்கைகள், புகார்களை கனிவுடன் காதுகொடுத்து கேட்டு நடவடிக்கை எடுத்து வந்தார். அதனால், மருத்துவமனையின் அடித்தட்டு பணியாளர்கள், நோயாளிகள் பாராட்டையும் பெற்றார். அதுபோல் நீண்ட காலமாக மருத்துவமனை கட்டுமானப்பணி, பராமரிப்பில் நடந்து வந்த பொதுப்பணித்துறையினரின் பல்வேறு முறைகேடுகளையும் கண்டறிந்து அவற்றை தொடர்ந்து நடக்காமல் பார்த்து கொண்டார்.
எந்த அரசியல் சார்பும் இல்லாமல் மருத்துவத்துறை இயக்குனரகம், உள்ளூர் அமைச்சர்கள், ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் கூறிய அனைத்து ஆலோசனைகளை செயல்படுத்தி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையையும், மருத்துவக்கல்லூரியையும் பல்வேறு வகைகளில் மேம்படுத்தினார். அவரது இந்த நேர்மையால் ஒரு தரப்பினரின் எதிர்ப்பையும் அவர் சம்பாதிக்க வேண்டிய இருந்தது.
» விலை குறைவால் பயிரிட்ட வெங்காயத்தை இலவசமாக எடுத்துச்செல்லுங்கள்: வேதனை வீடியோ வெளியிட்ட விவசாயி
» சாலை விபத்தில் வாணியம்பாடி இளைஞர் மூளைச்சாவு: ஒன்றரை மணி நேரத்தில் சென்னைக்கு பறந்த இளைஞரின் இதயம்
இந்நிலையில், நேற்று மதுரை அரசு மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மேயர், எம்எல்ஏ-க்கள் கலந்து கொண்டனர். மருத்துவப்படிப்பதில் புதிதாக சேரும் மாணவர்களும், பட்டப்படிப்பு முடித்து மருத்துவப் பயிற்சியில் சேரும் மாணவர்களும் `இப்போகிரெடிக் உறுதிமொழி' எடுத்துகொள்வது மரபாக இருந்து வருகிறது. ஆனால், நிகழ்ச்சியை நடத்திய மருத்துவ மாணவர் பேரவை செயலாளர் இந்திய மருத்துவ கவுன்சில் வெப்சைட்டில் உள்ள 'மகிரிஷ் சரக் சப்த்' என்ற சம்ஸ்கிருத உறுதிமொழியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஏற்றுள்ளனர்.
மருத்துவமனை ‘டீன்’ ரெத்தினவேலு இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ததால் இதனை கவனிக்காமல் இருந்துவிட்டார். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்தான் ஆட்சியர் அலுவலகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டுவிட்டு நேரடியாக டீன் இந்த நிகழ்ச்சிக்கு வந்தாலே கடைசி நேரத்தில் இந்த உறுதிமொழி மொழிபெயர்ப்பைக் கவனிக்காமல் இருந்துவிட்டார்.
அதனை மாணவர் பேரவை செயலாளர் படிக்க ஆரம்பித்ததும் தான் டீன் அதிர்ச்சியடைந்துள்ளார். நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் ராஜனும், இப்போகிரெடிக் உறுதிமொழியை எடுக்காமல் 'மகிரிஷ் சரக் சப்த்' உறுதிமொழியை எடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். டீன், என் கவனத்திற்கு வராமல் தவறு நடந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
அதன்பிறகே மருத்துவமனையில் பணிபுரியும் ‘டீன்’ ரெத்தினவேலுக்கு எதிரான தரப்பினர் இதனை மற்ற மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அதனால், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக ‘டீன்’ ரெத்தினவேலு உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘‘முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த உறுதிமொழியே எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘டீன்’ கவனத்திற்கு வராமல் இந்த தவறு நடந்து விட்டது. தவறு தவறுதான். அதற்காக நீண்ட காலத்திற்கு மதுரை அரசு மருத்துவனைக்கு கிடைத்த நல்ல ‘டீன்’னை இடமாற்றம் செய்வதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும், ’’ என்றனர்.
மதுரையை சேர்ந்த சுகாதார செயற்பாட்டாளர் ஆனந்த்ராஜ் கூறுகையில், ‘‘சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அதிக நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள். ஒரு நாளைக்கு பல நூறு கோப்புகளையும் ‘டீன்’ பார்க்க வேண்டிய இருக்கும். அதற்காக அவருக்கு உதவும் வகையில் அலுவலக நிர்வாகப்பணி, நோயாளிகளுக்கான சிகிச்சைப்பணிகளில் தவறு நடக்காமல் இருக்கவே டீனுக்கு கீழே ஒரு மருத்துவ கண்காணிப்பாளர், 2 நிலைய மருத்துவர்கள், 3 உதவி நிலைய மருத்துவர்கள், மூத்த அனுபவமிக்க உதவியாளர்கள் பணிபுரிகிறார்கள். மருத்துவக்கல்லூரி விவகாரங்களை கவனிக்க துணை முதல்வர் ஒருவர் இருக்கிறார். அதனால், சமஸ்கிருத உறுதிமொழியில், ‘டீன்’னை மட்டுமே பலி ஆடாக்கி காத்திருபபோர் பட்டியலுக்கு மாறுதல் செய்வது நியாயமற்றது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை டீன்னுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் அனைவரையும் விசாரிக்க வேண்டும்,’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago