சமூக சமத்துவம் காண்போம் - தொழிலாளர் தினம்: தமிழகத் தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: தொழிலாளர்கள் தினமான மே தினத்தை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் வி.கே.சசிகலா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ், ஈபிஎஸ்: "வயல் வெளிகளில் விளைந்து நிற்கும் மணிகளாக, எழிலார் சேவைகளில் பூத்துக் குலுங்கும் மலர்களாக, ஓடும் நதிகளின் ஒழுங்கமைக்கப்பட்ட கரைகளாக ஆலைகள் தோறும் ஆர்த்திடும் இயந்திரக் கூட்டங்களாக, தொழிலாளர் தோழர்களின் வியர்வையும், கண்ணீரும் உலக மக்களை வாழ்வித்துக் கொண்டிருக்கின்றன. தங்களின் தன்னலமற்ற, ஓய்வறியா, நிகரில்லா தியாக உழைப்பின் மூலம் நம்மையெல்லாம் வாழவைத்துக் கொண்டிருக்கும் உலகத் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் உள்ளார்ந்த நன்றிப் பெருக்கோடு ``மே தின’’ நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டி, அவர்களின் மேன்மைக்கு அடித்தளம் அமைத்த போராட்டங்களின் வெற்றித் திருநாளாகக் கொண்டாடப்படும் ``மே தின’’ நாளில் உழைக்கும் தொழிலாளர்கள் வெல்க! வாழ்க என அதிமுகவின் அன்பை வாழ்த்து முழக்கங்களாகக் கூறி மகிழ்கிறோம்."

ராமதாஸ்: "இந்தியா உலக அரங்கில் நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கான முதுகெலும்பாக திகழ்பவர்கள் பாட்டாளிகள் தான். ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக கரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவின் முதுகெலும்பான பாட்டாளிகள் சந்தித்த சவால்கள் ஏராளமானவை; எண்ணிக்கையில் அடங்காதவை. ஆனாலும், எதிர்கொண்ட சவால்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முறியடித்து, கடந்த 2 ஆண்டுகளில் அனுபவித்த துன்பங்களை ஒதுக்கித் தள்ளி முன்னேற்றப் பாதையில் வெற்றி நடை போடுவது தான் பாட்டாளிகளின் வலிமை ஆகும். அந்த வலிமை தான் அவர்களையும், உலகையும் வாழ வைக்கிறது.

உலகை இயக்கும் பாட்டாளிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சுழல்வதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் உலகத்திற்கு, மாநிலத்திற்கு உள்ளது. அதை மதித்து பாட்டாளிகளுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அவை அனைத்தையும் வென்றெடுக்க இந்நாளில் உறுதியேற்போம்"

வைகோ: "பேரறிஞர் அண்ணா முதல்வராகப் பொறுப்பு ஏற்றவுடன், மே 1 ஆம் நாளை, தமிழக அரசு விடுமுறை நாளாக அறிவித்தார். கோவை சிதம்பரம் பூங்காவில், மே நாள் விழாவை சிறப்பாக நடத்தினார். 1990 ஆம் ஆண்டு, மே நாளை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்கள் அவையில் முன்வைத்துப் பேசினேன். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சென்று, அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கை சந்தித்து, கோரிக்கையை வலியுறுத்தினோம். அதை அவர் ஏற்றுக்கொண்டு, மே நாளை, அனைத்து இந்திய அளவில் அரசு விடுமுறை நாளாக அறிவித்தார். அந்த நாளைக் கொண்டாடுகின்ற தொழிலாளர்களுக்கு, மதிமுக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்."

கே.எஸ்.அழகிரி : "மக்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்கும் வகையில் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த தொழிலாளர் சட்டங்களை அகற்றிவிட்டு புதிய தொழிலாளர் விரோத சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது. பாஜகவின் தொழிலாளர் விரோத போக்கு இத்தகைய நடவடிக்கையினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, தொழில் வளர்ச்சி குன்றிய நிலையில் ஏற்பட்ட வேலை இழப்பினால் தொழிலாளர்களின் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிற நிலையில் தங்களது உரிமைகளை பாதுகாக்கிற வகையில், உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே 1 ஆம் தேதி அமைய வேண்டும். உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்."

இரா.முத்தரசன்: "நாட்டின் முதல் முறையாக மே தினத்தை கொண்டாடிய சிந்தனை சிற்பி மா. சிங்காரவேலு பிறந்த மண்ணில், அதன் நூற்றாண்டு தொடங்கும் தருணத்தில், தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் மகத்தான வெற்றி பெற்று, நாட்டின் மதச் சார்பற்ற, ஜனநாயக சத்திகளை அணி திரட்டி வருவது நம்பிக்கை ஒளிச் சுடராக வெளிச்சம் தருகிறது.

அறிவியல் கருத்தாயுதம் தாங்கி, பகுத்தறிவுப் பாதையில் பயணித்து, கற்பித சாதி, மத, சனாதானக் கருத்துக்களை முறியடித்து, "யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்ற தொன்மை மரபை முன்னெடுத்து, சமூக சமத்துவம் காண மே தின நாளில் உறுதி ஏற்று, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அனைத்துப் பகுதி மக்களுக்கும் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது."

டிடிவி தினகரன்: "உழைப்பவர்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்துப் பலன்களையும், அங்கீகாரத்தையும் தடையின்றி கொடுக்கிற அரசாங்கமும், சமூகமும்தான் சிறந்து விளங்க முடியும். எனவே உடலாலும், அறிவாலும் உழைக்கிற யாருக்கும் எந்த இடத்திலும் உழைப்புச் சுரண்டல் நிகழ்ந்திட அனுமதிக்காமல், உழைப்பவர்களுக்கே முதல் மரியாதை என்பதை உறுதிப்படுத்துவோம்.

“ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே! உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே!” என்ற எம்ஜிஆர் பட பாடல் வரிகளை உண்மையாக்குவோம். மே தினத்தில் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் உழைப்பவர்களை பெருமிதத்தோடு கொண்டாடுவோம்."

வி.கே.சசிகலா: "உழைப்பாளர்களுக்குள் ஏற்ற, தாழ்வு இல்லை. அவர்களிடையே வேறுபாடு இல்லை. உழைப்போர் அனைவரும் சரிநிகர் சமமானவர்களே. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வந்தார். நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்திடும் தொழிலாளர்கள், எல்லா வளங்களும், நலன்களும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தி, எனதருமை தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை "மே தின" நல்வாழ்த்துகளை உரிதாக்கிக் கொள்கிறேன்."

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்