புதுச்சேரியில் அனைத்து இடங்களிலும் தமிழில் பெயர்ப் பலகை: ஆளுநர் தமிழிசை விருப்பம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து இடங்களிலும் தமிழில் பெயர்ப் பலகை அமைக்கும் பணி குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் இன்று மாலை அணிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறியதாவது: "அனைத்து பெயர்ப் பலகைகளையும் தமிழில் இருப்பதாக பார்த்துக்கொண்டால் அது பாவேந்தர் பாரதிதாசனுக்கு செலுத்தும் அஞ்சலியாகும். அரசு கட்டாயப்படுத்துவதைவிட குறிப்பிட்ட காலத்துக்குள் நாமே தமிழ் பெயர்ப்பலகை வைக்க முடிவு எடுக்கலாம்

அனைத்து இடங்களிலும் தமிழ் பெயர்ப் பலகை இருக்க வேண்டும் என்பது பற்றி முதல்வருடன் ஆலோசித்து குறிப்பு தர ஆசைப்படுகிறேன். தமிழ் அனைத்து இடங்களிலும் விளையாட வேண்டும். வாயில் நுழையாத பெயரை குழந்தைகளுக்கு வைப்பதை விட, தமிழ்ப் பெயரை வைக்க வேண்டும். நம் தாய்மொழியை பாராட்டப் பழகுவோம். பாரதிதாசனுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுவதே இல்லை என்பது தவறானது" என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE