தமிழக தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் மையம்: ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்துக்கு மநீம கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசின் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் பங்கேற்கும் தமிழக தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்துள்ளது தமிழகத்திற்கும், தமிழக தேர்வர்களுக்கும் இழைக்கும் அநீதி என மக்கள் நீதி மய்யம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநிலச் செயலாளர் மூகாம்பிகா இரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரயில்வே துறையில் காலியாக உள்ள, நிலைய அதிகாரி உள்ளிட்ட 24,649 பணியிடங்களை நிரப்புவதற்காக ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு வரும் மே 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் ஏறத்தாழ 2.4 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக, தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான தேர்வர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்கள் நிறைய பேருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர் ஒருவருக்கு கர்நாடக மாநிலம் உடுப்பியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் தமிழகத் தேர்வர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. தேர்வு நடைபெறும் மே 9-ம் தேதி (திங்கள்கிழமை) காலையிலேயே தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். எனில், அதற்கு முந்தைய நாளே சம்பந்தப்பட்ட மாநிலம் சென்று, குறிப்பிட்ட நகரில் உள்ள தேர்வு மையத்தைக் கண்டறிந்து, தங்கியிருக்க வேண்டியிருக்கும். இப்போதே பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் கிடையாது. ரிசர்வேஷன் செய்ய முற்படுவோருக்கு `வெயிட்டிங் லிஸ்ட்’-தான் காத்திருக்கிறது.

இப்படி ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் சென்று தேர்வெழுதும் நிலை, தேர்வர்களுக்கு கடும் மனஉளைச்சலை உண்டாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி பிரயாணச் செலவு, தங்குமிடம், உணவு என ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டியிருக்கும். இது ஏழை, நடுத்தர தேர்வர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும். அதுமட்டுமின்றி பெண் தேர்வர்கள், மாற்றுத் திறனாளிகள் தங்களுடன் பாதுகாப்புக்காக ஒருவரை அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும். அது செலவை இரண்டு மடங்காக அதிகரிக்கும். இத்துடன் மொழிப் பிரச்சினையும் கூடுதல் சுமையாகும். பொருளாதாரத்தில் நலிவடைந்த தேர்வர்களின் கனவான இந்தத் தேர்வை, சாமானிய மக்களை எழுதச் செய்யவிடாமல் தடுக்கும் சதியோ இது என்று எண்ணத் தோன்றுகிறது.

தமிழகத்தில் மிகச் சிறந்த தேர்வு மையங்கள் இருக்கும் சூழலில், தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்குத் தேவையின்றி வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்துள்ளதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வின்போது இதுபோன்ற பிரச்சினை கிளம்பியது. ஆனால், இப்போது மீண்டும் அதேபோல வெளிமாநிங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மத்திய ரயில்வே தேர்வு வாரியம் வேண்டுமென்றே இந்த அநீதியை இழைக்கிறதோ என்று ஐயம் கொள்ளச் செய்கிறது.

நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் கொடுமைகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருப்பது, தமிழர்களின் வெறுப்பை அதிகரித்துக்கொண்டே செல்லும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். எனவே, தமிழக தேர்வர்களுக்கு உள்ளூரிலேயே தேர்வு மையங்களை உடனடியாக ஒதுக்க வேண்டும். மத்திய அரசின் தேர்வுகளை எழுதும் தேர்வர்களுக்கு, அவர்களது அருகாமையில் உள்ள தேர்வு மையங்களை மட்டுமே ஒதுக்க வேண்டுமென உத்தரவிட வேண்டும். தமிழக தேர்வர்களின் எதிர்காலம் கருதி, ஆளும் திமுக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். தமிழக தேர்வர்களைப் பந்தாடும் நடவடிக்கைகளை மத்திய அரசு இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்." என்று மூகாம்பிகா இரத்தினம் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்