மகளிர் குழு தயாரிப்பை அரசு துறைகள் வாங்க அறிவுறுத்தல்: சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை:மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்பொருட்களை அரசு அலுவலகங்களில் வாங்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

பாஜக கோரிக்கை

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், ‘‘மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் கிடைக்கும் வருவாயால் அவர்களது குடும்பத்துக்கு பெரிய அளவில் பயன் கிடைக்கிறது. ஆன்லைன் வர்த்தகம் வளர்ந்துவிட்ட நிலையில், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை ஆன்லைனில் சந்தைப்படுத்தவும், அவற்றை அரசுத் துறைகள் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பேசியதாவது: பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்தம் செய்து, 69 பொருட்கள் ஆன்லைனில் விற்கப்பட்டு வருகின்றன.

புதிய இணையதள முகப்பு

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கென இணையதளம் இருக்கும் நிலையில் அவற்றை ஒருங்கிணைத்து, புதிய இணையதள முகப்பு தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மேலும், சுயஉதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்ட்டு, ரூ.21,300 கோடி அளவுக்கு கடன்வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.25 ஆயிரம் கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் மத்திய அரசின் இணையதளம் மூலம் விற்கப்படுகிறது. அரசு நிறுவனங்கள் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE