சார் - பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமையும் செயல்படும்; ஆவணப் பதிவுக்கு டோக்கன் வழங்குவதில் தத்கால் முறை: சட்டப்பேரவையில் அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: அவசர நிமித்தமாக பதிவு செய்வோரின் வசதிக்காக, ஆவணப் பதிவு முன்பதிவு டோக்கன் வழங்குவதில் தத்கால் முறை அறிமுகம் செய்யப்படும். அலுவலகங்களில் பணியாற்றுவோரின் வசதிக்காக, சனிக்கிழமைகளிலும் சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்று சட்டப்பேரவையில் வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று வணிக வரி, பதிவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அவர்களது கோரிக்கைகள், கேள்விகளுக்கு துறை அமைச்சர் பி.மூர்த்திபதில் அளித்துப் பேசினார். அவர் கூறியதாவது:

தமிழக அரசின் மொத்த வருவாயான ரூ.1.39 லட்சம் கோடியில் வணிக வரி, பதிவுத் துறை மூலமாக 84 சதவீதம் அதாவது, ரூ.1.19 லட்சம் கோடி கிடைக்கிறது. வணிக வரித் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கை காரணமாக முந்தைய ஆண்டைவிட, இந்த ஆண்டு கூடுதலாக ரூ.8,760 கோடி கிடைத்தது. அதேபோல, பதிவுத் துறையிலும் கூடுதலாக ரூ.3,270 கோடி வந்தது.

பதிவுத் துறையில் தற்போது பதிவு செய்யப்படும் ஆவணப் பதிவில் 85 சதவீதம் அன்றைய தினமே பதிவு ஆவணங்கள் வழங்கப்பட்டுவிடுகின்றன.

சார்-பதிவாளர் அலுவலகங்களில் குறுகிய அவகாசத்தில் ஆவணப் பதிவு செய்ய விரும்புவோரின் வசதிக்காக, ஆவணப் பதிவுக்கான முன்பதிவு டோக்கனை ரூ.5 ஆயிரம் கூடுதல் கட்டணம் பெற்று தத்கால் முறையில் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படும். முதல்கட்டமாக, அதிகஎண்ணிக்கையிலான ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 சார்-பதிவாளர் அலுவலகங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

ரூ.1,000 கட்டணம்

அலுவலகங்களில் பணியாற்றுவோரின் வசதிக்காக, விடுமுறை நாளில் பதிவு பணியை மேற்கொள்ளும் வகையில் சனிக்கிழமைகளிலும் சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும். அன்று பதிவு பணிக்காக ரூ.1,000 கட்டணம் வசூலிக்கப்படும்.

அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களிலும் மின்னணு முத்திரை (இ-ஸ்டாம்பிங்) வசதிகொண்டுவரப்பட்டுள்ளது.

பதிவுத் துறையில் தற்போது மிக குறைந்த முக மதிப்புடைய முத்திரைத் தாள்களின் (ரூ.10, ரூ.20, ரூ.50) பயன்பாட்டை மாற்றி,குறைந்தபட்சம் ரூ.100 என நிர்ணயித்து நடைமுறைப்படுத்த உரியசட்டத் திருத்தம் கொண்டுவரப்படும்.

போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டிருப்பதை ரத்து செய்ய சட்டம் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அவரது ஒப்புதல் கிடைத்ததும், அந்த போலி பதிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

பதிவு செய்யப்பட்ட திருமண சான்றிதழ்களில் திருத்தம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும்.

கிறிஸ்தவ திருமண பதிவு சான்றிதழ் நகல் பெற, முன்பு சென்னைக்கு வரவேண்டி இருந்தது. இதனால் ஏற்படும் அலைச்சலை தவிர்க்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்திலேயே சான்றிதழ் நகல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறை தீர்க்கும் சேவை

மக்கள் தாங்கள் பெறும் சரக்கு அல்லது சேவைக்கான விலைப் பட்டியலை கேட்டுப் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் வணிக வரித் துறையில் ‘எனது விலைப் பட்டியல் - எனது உரிமை’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும். பதிவுத் துறையின் குறை தீர்க்கும் சேவைகள் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் வழங்கப்படும்.

வரி ஏய்ப்பை கண்டுபிடித்து, சிறப்பாக வரி வசூலிக்கும் வணிக வரித் துறை அலுவலர்களுக்கும், வரி ஏய்ப்பு செய்வோர் குறித்துதகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கும் வெகுமதி அளிக்கப்படும். சிறப்பாக பணியாற்றும் பதிவுத் துறை அலுவலர்களை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ள ‘ஜிஎஸ்டி பிரைம்’என்ற மென்பொருள் பயன்படுத்தப்படும்.

சார்-பதிவாளர் அலுவலக எல்லைகளை மறுசீரமைக்கும் பணிநடந்து வருகிறது. பத்திரப்பதிவு சேவைகளை வழங்க சென்னை,கோவையில் சோதனை அடிப்படையில் ஒருங்கிணைந்த சேவைமையம் அமைக்கப்படும்.

சென்னை, மதுரை பதிவு மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, புதிதாக 2 மண்டலங்கள் உருவாக்கப்படும். சென்னை பதிவு மண்டலத்தில் தாம்பரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய பதிவு மாவட்டம் உருவாக்கப்படும். கோவை மண்டலத்தை பிரித்து 2 பதிவு மாவட்டங்கள் (கோவை வடக்கு, கோவை தெற்கு) உருவாக்கப்படும்.

பதிவுத் துறையில் 5 மாவட்டபதிவாளர் (தணிக்கை) பணியிடங்கள் உருவாக்கப்படும். சிறப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு, ஆவண எழுத்தர்களுக்கான புதியஉரிமம் வழங்கப்படும். இதன்மூலம் சுமார் 20 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், சனிக்கிழமை சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுவதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்