சேலத்தில் பட்டுக்கூடு ரூ.700-க்கு விற்பனை: கூடுதல் விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சேலம்: சேலம் அரசு பட்டுக்கூடு அங்காடியில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பட்டுக்கூடு விலை அதிகரித்து, ஒரு கிலோ அதிகபட்சம் ரூ.700-க்கு விற்பனையானது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

சேலம் அணைமேடு அருகே பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடு விற்பனை அங்காடிக்கு சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் இருந்து, வெண் பட்டுக்கூடுகளை விவசாயிகள் மற்றும் பட்டு வளர்ப்போர் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். உற்பத்தியாளர்களால் கொண்டு வரப்படும் பட்டுக்கூடுகளை, பதிவு பெற்ற வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், பட்டுக்கூடு விற்பனை மையத்துக்கு நேற்று 1,000 கிலோ பட்டுக் கூடுகள் விற்பனைக்கு வந்தன. பட்டுக் கூடு விலை அதிகபட்சமாக கிலோ ரூ.700-க்கும், குறைந்தபட்சமாக ரூ.500-க்கும் விற்பனையானது. கடந்த வாரம் அதிகபட்ச விலை கிலோ ரூ.610 ஆகவும், குறைந்தபட்ச விலை கிலோ ரூ.480 ஆகவும் இருந்தது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பட்டுக்கூடுகளுக்கு அதிகவிலை கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். சேலம் பட்டுக்கூடு அங்காடியில் கடந்த 2021- 22-ம் ஆண்டில் மொத்தம் 93,676 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE