தேர் விபத்தை அறிந்து துடிதுடித்துப் போனேன்... இதில் அரசியல் கூடாது - தஞ்சையில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: "தஞ்சை மண்ணின் மைந்தன் என்ற முறையில் தேர் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கேற்கிறேன்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த களிமேடு கிராமத்தில் தேர் திருவிழாவின் நிகழ்ந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "இன்று அதிகாலையில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த களிமேடு கிராமத்தில் நடந்த ஒரு திருவிழாவின்போது, நிகழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தாங்க முடியாத ஒரு துயரத்தை நமக்கு கொடுத்துள்ளது. இந்தத் துயரத்தை விளக்க வார்த்தைகளே இல்லை. இன்று விடியற்காலை நடந்த இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டு மிகுந்த வேதனையடைந்தேன், துடிதுடித்துப் போனேன்.

உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் மருத்துவ நடவடிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன். அதைத்தொடர்ந்து இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருக்கக்கூடிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பழனிமாணிக்கம், மாவட்டச் செயலாளர் துரை சந்திரசேகர், நீலமேகம், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள், அரசு அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபடவும், அரசின் சார்பில் நிவாரணப் பணிகள் எல்லாம் எப்படி நடந்துகொண்டுள்ளது என்பதை கண்காணிக்கும்படி நான் உத்தரவிட்டு அனுப்பி வைத்தேன்.

இன்று காலை சட்டப்பேரவையில் உயிரிழந்த 11 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, நடந்த சம்பவம் குறித்து பேரவையில் எடுத்துக்கூறி, அதன்பின் விமானம் மூலம் மதுரை வழியாக தஞ்சை வந்து, நான், அமைச்சர் கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் அரசின் சார்பில் ஆறுதல் கூறிவிட்டு வந்தேன்.இந்த தஞ்சை மண்ணின் மைந்தன் என்ற முறையில் அவர்களது துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக உடனடியாக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் வழங்க ஆணையிட்டு, அதை வழங்கிவிட்டுத்தான் வந்தேன். அரசு சார்பில் மட்டுமல்ல திமுக சார்பில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கினேன். அதேபோல் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு, அவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்க மருத்துவமனை அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகை அறிவித்து அந்த தொகைகளையும் வழங்கினேன். அதேபோல் திமுக சார்பில் காயமடைந்த அனைவருக்கும் ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

நடந்த விபத்து என்பது, நம் அனைவருக்கும் ஒரு துயரத்தை உருவாக்கியிருந்தாலும், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும். விபத்துக்கான சரியான காரணத்தை அறியவேண்டும், வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடப்பதை தடுத்தாக வேண்டும். இதுதொடர்பாக ஆய்வு செய்வதற்காக, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதான் இந்த விபத்தின் நிலை.

இந்தச் சூழ்நிலையை காரணமாக பயன்படுத்திக் கொண்டு, இதை அரசியலாக்க சிலர் விரும்புகின்றனர். அதுகுறித்து நான் பேச விரும்பவில்லை. இதில் எல்லாம் அரசியல் பார்க்கக்கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம். போற்றுவார், தூற்றுவார் பற்றி நான் எப்போதும் கவலைப்பட்டது கிடையாது. மக்களுக்கு துயரம் ஏற்படாமல் காக்கவும், அதையும் மீறி இதுபோன்ற துயரங்கள் ஏற்படும்போது அந்த துயரங்களில் இந்த அரசு பங்குபெறுவது, மக்களோடு இருக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய இலக்கு. அதை நோக்கியே நான் பயணிப்பேன்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்