சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. சம்பவ இடத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இதில் 2-வது டவரின் பின்புறம் உள்ள சர்ஜிக்கல் உபகரணங்கள் வைக்கும் அறையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு 4 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெளியே எடுத்து செல்லும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் குப்பையின் மூலம் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.