தஞ்சை தேர் விபத்து | தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்; முதல்வர், உறுப்பினர்கள் மவுன அஞ்சலி

By செய்திப்பிரிவு

சென்னை: தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "தஞ்சாவூர் களிமேடு தேர் விபத்து சம்பவம் அறிந்து மிகுந்த மன வேதனைக்கு உள்ளானேன். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து குறித்து விரிவான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறவிருக்கிறேன்.

விபத்தில் உயிரிழந்தோரின் குடுபங்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிகிறேன்" என்று கூறினார்.

இதனையடுத்து சபாநாயகர் ஆவுடையப்பன், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்துமாறும் வேண்டினார். இதனையடுத்து அவையில் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

விபத்து நடந்தது எப்படி? தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் 8 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது.

இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 94 ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா நேற்று (ஏப்.26) செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது. இதில் அப்பர் படம் வைத்து தேர் இழுத்து வரப்பட்டது.
தொடர்ந்து களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. வீட்டுக்கு வீடு தேங்காய் பழம் வைத்து படையல் செய்து வழிபட்டனர். புதன்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து மெயின் ரோட்டுக்கு வந்த இத்தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியது.

இதனால் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இவர்களில் களிமேடு கிராமத்தைச் சேர்ந்த எம். மோகன் (22), முன்னாள் ராணுவ வீரர் கே. பிரதாப் (36), ஏ. அன்பழகன் (60), இவரது மகன் ராகவன் (24), நாகராஜ் (60), ஆர். சந்தோஷ் (15), டி. செல்வம் (56), எம். ராஜ்குமார் (14), ஆர்.சாமிநாதன் (56), ஏ. கோவிந்தராஜ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் பலத்த காயமடைந்த எம்.ரவிச்சந்திரன் (48), ஆர்.கலியமூர்த்தி (40), கே.ஹரிஷ் ராம் (10), எம்.நித்தீஷ் ராம் (13), ஏ.மாதவன் (22), டி.மோகன் (54), என்.விஜய் (23), எம்.அரசு (19), ஜி.விக்கி (21), திருஞானம் (36), வி.ஹரிஷ் (11), மதன் மனைவி சுகுந்தா (33), பி.கௌசிக் (13), எஸ்.பரணி (13) ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பரணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் இரங்கல்: தஞ்சை விபத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பாக இன்று காலை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "தஞ்சாவூரில் நடந்த விபத்து குறித்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் பூரண குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடுகிறேன். பிரதமர் அலுவலக நிவாரண நிதியிலிருந்து இந்த நிதி உடனடியாக விடுவிக்கப்படும். மேலும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் " என்று அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்