ஒரே நபர் மாநில, மாவட்ட பதவிகளை கைவிட மறுப்பு: அதிமுக அமைப்பு தேர்தல் கண்துடைப்பா? - ஏற்கெனவே பதவியில் இருந்தோருக்கே மீண்டும் வாய்ப்பு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: அதிமுகவில் ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருந்தவரை அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் எந்த நேரத்திலும் மாற்றப்படலாம், அவர்கள் இடத்துக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை இருந்தது.

சரியாக கட்சிப் பணியாற்றவில்லை, தனிப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் உட்கட்சிப்பூசல் என ஜெயலலிதாவின் கவனத்துக்குத் தெரிய வந்தால் தயவு தாட்சண்யமின்றி அவர்களை பதவியில் இருந்து தூக்கி எறிந்துள்ளார். இதனால், அதிமுகவில் கடைநிலைநிர்வாகி கூட திடீரென மத்திய,மாநில அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏ-க்களான வரலாறு உண்டு.

அதனால், சாதாரணமாக இருந்து ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டோர்தான் அவரது மறைவுக்குப் பின்புஅதிமுகவின் தலைமைப் பொறுப்பு முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை அதிகார மையங்களாகத் திகழ்கின்றனர்.

தாங்கள் வந்தவழியை மறந்து அதிகாரம் செலுத்தியோருக்கே மீண்டும் அப்பதவிகளை கட்சித் தலைமை தாரைவார்ப்பதாக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி எழுந்துஉள்ளது.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் நடக்கும் அதிமுக அமைப்புத் தேர்தலில் மாவட்டச் செயலாளர்களாக இருந்தவர்களே மீண்டும் அப்பதவிக்கு விருப்ப மனு கொடுத்துள்ளனர். அவர்களை எதிர்த்து யாரும் மனு கொடுக்கவில்லை. மீறி கொடுத்தால் கட்சியில் ஓரம் கட்டப்படுவோம் என்பதால் அவர்கள் ஒதுங்கிவிட்டனர். ஒரு சில மாவட்டங்களில் மட்டும் சிலர் போட்டி விருப்ப மனு கொடுத்திருந்தாலும் அவர்களை வாபஸ் வாங்க கட்சி மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

மதுரை புறநகர் மாவட்டங்களில் (கிழக்கு, மேற்கு) விவி.ராஜன்செல்லப்பா, ஆர்பி.உதயகுமாரை எதிர்த்து யாரும் மனு கொடுக்கவில்லை. ஆர்பி.உதயகுமார் ஏற்கெனவே ஜெ., பேரவை மாநிலச் செயலாளராக உள்ளார்.

கட்சித் தலைமையின் ஆசி

செல்லூர் கே.ராஜூவை எதிர்த்து நான்கு நிர்வாகிகள் மனுச் செய்துஉள்ளனர். கட்சித் தலைமை ஆசிசெல்லூர் கே.ராஜூவுக்கே இருப்பதால் அவரே மீண்டும் மாநகரச் செயலாளராகும் வாய்ப்பு அதிகம்.விருதுநகர் மேற்கு, கிழக்கு மாவட்டச் செயலாளராக ஏற்கெனவே இருந்த ராஜேந்திர பாலாஜி, ரவிச்சந்திரன் ஆகியோர் மீண்டும் தேர்வாகி இருக்கின்றனர்.

திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டச் செயலாளராக பல ஆண்டுகளாக இருக்கும் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் மீண்டும்தேர்வாகியுள்ளனர். இருவரும் ஏற்கெனவே மாநிலப் பதவிகளில் இருக்கின்றனர்.இருந்தும் மாவட்டச் செயலாளர் பதவியை விட இவர்களுக்கு மனமில்லை. முன்னாள் முதல்வர் பழனிசாமி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். ஆனால் சேலம்புறநகர் மாவட்டச் செயலாளர்பதவிக்கும் போட்டியிடுகிறார்.

தேனி மாவட்டச் செயலாளர் பதவிக்கு எஸ்பிஎம்.சையதுகானை எதிர்த்து 8 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். ஆனால், மீண்டும் சையதுகானையே மாவட்டச் செயலாளராக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிவகங்கை மாவட்டச் செயலாளர் பதவிக்கு மீண்டும் மனுச் செய்துள்ள செந்தில்நாதனை எதிர்த்து 4 பேர் போட்டியிட விரும்பியபோதிலும் செந்தில்நாதன்தான் மீண்டும் மாவட்டச் செயலாளராக தேர்வாகும் வாய்ப்பு உள்ளது.

இப்படி தமிழகம் முழுவதும் ஏற்கெனவே இருந்த மாவட்ட நிர்வாகிகளே மீண்டும் தொடர கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.

ஜெயலலிதாவை போல் கட்சி அமைப்பில் புதியவர்களை கொண்டு வந்து கட்சியை வளர்க்க தற்போதுள்ள தலைமை விரும்பவில்லை. இதனால், பலர் பாஜக, திமுக பக்கம் செல்கின்றனர்.இப்படியே போனால் அதிமுக தேய்ந்து கொண்டேதான் போகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE