இஸ்லாமியர்களை வாக்கு வங்கியாக மற்ற கட்சிகள் பயன்படுத்துகின்றன: அண்ணாமலை குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: பாஜகவை தவிர மற்ற கட்சிகள் இஸ்லாமியர்களை வாக்கு வங்கியாக பயன்படுத்துகின்றன என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் பாஜக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், கே.அண்ணாமலை இஸ்லாமியர்களுடன் அமர்ந்து நோன்பு கஞ்சி அருந்தினார். பின்னர் அவர் பேசியதாவது: பாஜகவின் சித்தாந்தத்தை புரிந்து கொண்டவர்களுக்கு இஸ்லாமியர்கள் இந்த கட்சியின் அங்கமாக வாழ்ந்து கொண்டிருப்பது புரியும். பாஜகவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு தேசியம், நாம் கூறும் இந்துத்துவாவை பற்றி முழுமையாக தெரியும். இந்த கட்சியில் இஸ்லாமியர்களுக்கு இடம் உண்டு. முழுமையான பங்கு உண்டு.

எந்த காரணத்துக்காகவும் நானோ இஸ்லாமியர்களோ தாங்கள் வணங்கும் கடவுளை ஒருபோதும் விட்டு கொடுத்தது கிடையாது. இந்தியாவில் அவரவர் மத கோட்டுபாடுபடி கடவுளை வழிபட்டு வருகின்றோம். உண்மையான இந்தியா இதுதான். அந்த இந்தியாவைதான் பாஜக விரும்புகிறது.

மற்ற அரசியல் கட்சிகள் இஸ்லாமியர்களை வாக்கு வங்கிகளாக பயன்படுத்தி வருகின்றன. இந்துகளையும் இஸ்லாமியர்களை எதிரும் புதிருமாக வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி வருகின்றன. பிரதமர் மோடி அதை உடைத்து இஸ்லாம் பெண்களின் பாதுகாப்பு, சுதந்திரத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உறுதி செய்து வருகிறார்.

இஸ்லாம் மதத்தில் மட்டுமே இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்கிறார்கள். பாஜக யாருக்கும் எதிரான கட்சி கிடையாது. பாஜகவில் இஸ்லாமியர்கள் முக்கிய அங்கம் வகித்து வருகின்றனர். பாஜகவுக்கு குடியரசு தலைவரை தேர்வு செய்ய முதல் வாய்ப்பு கிடைத்தபோது இஸ்லாமியரான அப்துல் கலாமை தேர்வு செய்தது. இரண்டாவது முறை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த தற்போதைய குடியரசுத் தலைவரை தேர்வு செய்தது. இதன்மூலம், பாஜகவின் சித்தாந்தத்தை அனைவரும் புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு பாஜக தலைவர் கே.அண்ணாமலை பேசினார்.

இந்தநிகழ்ச்சியில், பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, அகில இந்திய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன், இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE