காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த இளைஞர் உயிரிழப்பு: வழக்கை சிபிஐக்கு மாற்ற ஓபிஎஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்த இளைஞர் விக்னேஷ் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கினை சிபிஐக்கு மாற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ஆட்சிக்கு வருவதற்காக மக்கள் மீது அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்வதும், போலி வாக்குறுதிகளை அளிப்பதும், சிறிய சம்பவங்களை பெரிதாக்குவதும், சாத்தியமில்லாததை சாத்தியமாக்குவதாக கூறுவதும், ஆட்சிக்கு வந்த பிறகு பிறர் மீது பழி போடுவதும், ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்று சாக்குபோக்கு சொல்வதும், மக்களைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதும் திமுக-விற்கு கைவந்த கலை.

அண்மையில், புரசைவாக்கம், கெல்லீஸ் அறிவிப்புக்குறி அருகே காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஆட்டோவில் சென்று கொண்டிருந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோரை மடக்கியதாகவும், அவர்களிடம் கஞ்சா மற்றும் கத்தி இருந்ததாக தெரிவித்து அவர்களைத் தலைமைச் செயலக குடியுருப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததாகவும், அதன்பின் ரகசிய இடத்திற்கு கூட்டிச் சென்று அடித்து சித்ரவதை செய்ததாகவும், இந்த சித்ரவதையில் குதிரை ஓட்டி பிழைப்பு நடத்தி வந்த ஏழை இளைஞன் விக்னேஷ் மறுநாள் வாந்தி எடுத்து உயிரிழந்ததாகவும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்திகள் வந்தன.

காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது ஏற்பட்ட இந்த உயிரிழப்பிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். விக்னேஷ் குடும்பத்தாருக்கு ஒரு லட்சம் ரூபாய் ஈமச் சடங்கிற்காக காவல் துறையினர் அளித்ததாக விக்னேஷ்க்கு பணி கொடுத்தவர், விக்னேஷ் சகோதரரான வினோத்திடம் கூறி இருப்பதாகவும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்திகள் வந்தன. மேற்படி சம்பவத்தில் காவல் துறையினர் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் அவரது குடும்பத்தினருக்கு கொடுக்கப்படுகிறது என்றால், அங்கே காவல் துறையினர் தவறு புரிந்திருக்கிறார்கள் என்றுதான் அதற்குப் பொருள். 'மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும்' என்பதற்கேற்ப காவல் துறையின் நடவடிக்கை அமைந்திருக்கிறது.

இதன்மூலம், அந்த இளைஞனின் மரணத்திற்கு காவல் துறையினர்தான் காரணம் என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஆட்சியில் இல்லாதபோது சிறியதை பெரிதாக்குவதும், ஆட்சிக்கு வந்துவிட்டால், மூடி மறைப்பதும் திமுகவிற்கு வாடிக்கை. அந்த வகையில், மேற்படி சம்பவத்தை மூடி
மறைக்க திமுக அரசு முயற்சி செய்கிறது என்கிற சந்தேகம் அனைவர் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. இதில் தொடர்புடைய காவல் துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வழக்கு குற்றப் பிரிவு குற்றப் புலானாய்வுத் துறை விசாரணைக்கு மாற்றப்பட்டு இருந்தாலும், இந்தத் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் வருவதால், தங்களுக்கு நீதி கிடைக்காது என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கருதுகின்றனர்.

விக்னேஷ் மரணத்திற்கு நீதி கிடைக்க காவல் துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, முதல்வர் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வகையில் மேற்படி வழக்கினை மத்திய புலனாய்வுத் துறை, அதாவது சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், காவல் துறை கட்டுப்பாட்டில் இருந்த போது மரணமடைந்த விக்னேஷ் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்றும் அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்