ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க அதிநவீன கருவி: இனிமேல் பில் கிடையாது, எஸ்எம்எஸ் வரும்

By ரெ.ஜாய்சன்

நியாயவிலைக் கடைகளில் முறைகேடுகளை தடுக்க ‘பாயின்ட் ஆப் சேல்’ என்ற அதிநவீன கருவி பயன்பாட்டுக்கு வருகிறது.

ரேஷன் பொருள் விநியோகத் தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுகின்றன. இதனை தடுக்கவும், பேப்பர் இல்லா பணியை ஊக்கப் படுத்தவும் புதிய கருவியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

ஜிபிஎஸ் தொழில்நுட்பம்

‘பாயின்ட் ஆப் சேல்’ என்ற அந்த கருவியின் பயன்பாடு அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் இந்த கருவி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த கருவியை சென்னையை சேர்ந்த ஓம்னே அகேட் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் சிம்கார்டுகள் மூலம் செயல்படுகிறது.

குடோனில் இருந்து குறிப்பிட்ட நியாயவிலைக் கடைக்கு பொருட்கள் எடுத்து செல்லப்பட்டதும், இந்த கருவியில் அந்த விவரம் பதிவாகிவிடும். மேலும் ரேஷன் பொருட்கள் வந்து கொண்டிருக்கும் விவரம், வரும் வழியில் ஏதேனும் பிரச்சினை ஏற்படுதல் போன்ற விவரங்களும் பதிவாகும்.

எஸ்எம்எஸ் மூலம் விவரம்

இந்த கருவியில் சம்பந்தப் பட்ட நியாயவிலை கடையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளின் விவரங்களும் பதிவு செய்யப்படும். அத்துடன் குடும்ப அட்டைதாரரின் செல்பேசி, ஆதார் எண்களும் பதிவு செய்யப்படும்.

குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கும் போது இந்த கருவியில் அந்த விவரம் பதிவு செய்யப்படும். இதையடுத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருள்கள் விபரம், அளவு, விலை, மொத்த தொகை, இன்னும் என்னென்ன பொருட்கள் வாங்காமல் பாக்கி யுள்ளது போன்ற விபரங்கள் உடனடியாக அவர்களது செல்பேசிக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். பில் வழங்கப்படமாட்டாது. மேலும், இந்த கருவி மூலம் கடையின் கையிருப்பு, தினசரி விற்பனை போன்ற விவரங்களை உயரதி காரிகள் நேரடியாக அறிந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

குடோன்களில் சர்வர்

ஓம்னே அகேட் சிஸ்டம்ஸ் நிறுவன தூத்துக்குடி மாவட்ட மேலாளர் எஸ்.சிவசெல்வராஜன் கூறும்போது, ‘தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இந்த கருவி தற்போது அறிமுகம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 957 நியாயவிலை கடைகளுக்கும் கருவிகள் வழங்கப்பட்டுவிட்டன. அதனை இயக்குவது குறித்து விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக கருவிகளில் குடும்ப அட்டை விவரங்கள், ஆதார் எண், செல்பேசி எண் போன்ற விவரங்களை பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. பெரும்பாலான குடும்ப அட்டைகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. மேலும் இந்த கருவியை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை எவ்வாறு விற்பனை செய்வது என்பது குறித்து தாலுகா வாரியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் முதல் அனைத்து நியாயவிலை கடைகளிலும் இந்த கருவிகளின் செயல்பாட்டை கொண்டுவர திட்டமிட்டு பணி யாற்றி வருகிறோம்.

இந்த கருவி செயல்பாட்டுக்காக மாவட்டத்தில் உள்ள 9 குடோன்களிலும் சர்வர்கள் அமைத்துள்ளோம். மேலும், ஒவ்வொரு தாலுகாவுக்கும் ஒரு பொறியாளரை பொறுப்பாளராக நியமித்துள்ளோம். இக்கருவி மூலம் விற்பனையாளர்களின் பணிச் சுமை குறையும். எந்த விவரங்களையும் பதிவேடுகளில் அவர்கள் பதிவு செய்ய தேவையில்லை. மொத்தத்தில் பேப்பர், பேனாவுக்கு இனி வேலை இல்லை’ என்றார் அவர்.

முறைகேடுகள் தடுக்கப்படும்

மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன் கூறும்போது, ‘மாவட் டத்தில் 4.81 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதுவரை 3.5 லட்சம் குடும்ப அட்டைகளின் விவரங்கள் கருவிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. விற்பனை யாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஜூலை 1-ம் தேதி முதல் முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். அதுவரை சோதனை அடிப்படை யில் நியாயவிலைக் கடைகளில் இந்த கருவிகள் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். ஆதார் அட்டை விவரம் பதிவு செய்வதால் ஒருவரது பெயரில் ஒரு குடும்ப அட்டை மட்டுமே இருக்கும். மேலும், பொருட்கள் விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளும் தடுக்கப்படும்’ என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்