25 பசுமைப் பள்ளிகள், மஞ்சப்பை விருதுகள்... - தமிழக சுற்றுச்சூழல் துறையின் 7 முக்கிய அறிவிப்புகள்

By செய்திப்பிரிவு

சென்னை: 'மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி' என்ற திட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய நிதியிலிருந்து ரூ.13 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பசுமைப் பள்ளிக்கூடம் திட்டம், தமிழகத்தில் மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம் உருவாக்குதல், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் பசுமை மதிப்பீடு செய்தல், கோயம்பேடு சந்தை வளாகத்தை கரிம மாசு இல்லாத வளாகமாக உருவாக்குதல் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அறிவித்தார். அவர் வெளியிட்ட 7 முக்கிய அறிவிப்புகள்:

> பசுமைப் பள்ளிக்கூடம் திட்டம்

காலநிலை மாற்றம் என்பது தற்போது நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உண்மை என்ற சூழ்நிலையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளவும், அதன் பாதிப்புகளை தணிப்பதற்கும் சிறார்களை தயார் செய்ய வேண்டியுள்ளது. பசுமைப் புரட்சியானது, இளைய தலைமுறையினரிடமிருந்து துவக்கப் பெறவேண்டும்.

எனவே, தமிழக முதல்வரின் பசுமை இயக்கத்தை நடைமுறைப் படுத்துவதற்காக 25 பசுமைப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளன. இந்தப் பள்ளிகளில் ஆற்றல் திறனை மேம்படுத்த சூரிய ஆற்றலின் உதவியுடன் சூரிய சக்தி மோட்டார் பம்புகள் பயன்படுத்துதல், மழை நீர் சேகரிப்பை நடைமுறைப்படுத்துதல், மக்கும் உரம் தயாரித்தல், காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டங்கள் உருவாக்குதல், பழங்கள் தரும் மரங்களை நடுதல், நீர் பயன்பாட்டை குறைத்தல், கழிவு நீரை மறுசுழற்சி செய்தல், நெகிழி இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குதல் மற்றும் ஏனைய பசுமைப் பணிகளை இப்பள்ளிகள் மேற்கொள்ளும். பள்ளியின் அனைத்து மின்தேவைகளும் சூரிய
ஆற்றல் உற்பத்தி மூலம் பெறப்படும்.

இப்பள்ளிகளானது பசுமைப் பள்ளிக்கான முன்னோடி பள்ளிகளாக விளங்கி மற்ற பள்ளிகளும் பசுமைப் பணிகளை மேற்கொள்ள ஊக்கமாக அமையும். மேலும், இந்தப் பள்ளிகள் பசுமை திட்டங்கள் தொடர்பான தகவல் திரட்டை உருவாக்குவதற்காக பசுமை அட்டவணையில் மதிப்பீடு செய்யப்படும். மேற்கூறிய திட்டத்திற்காக தமிழக அரசால் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் 25 பள்ளிகளுக்கு செலவிடப்படும்.

> தமிழகத்தில் மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம்.

தமிழகம் போன்ற கடலோர மாநிலத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதும், அவற்றின் பாதிப்புகளை தணிப்பதும் மிகவும் கவனம் செலுத்தப்பட வேண்டிய அம்சமாகும். 2021-2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் போது, தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி, காலநிலை மாற்றத் தழுவல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்காக, மொத்தம் ரூ.500 கோடி செலவில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கு, மாவட்ட அளவில் காலநிலை மாற்றத்திற்கான அலகு ஒன்று மாவட்டங்கள் தோறும் ஏற்படுத்தப்படும்.

இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைவராகவும், மாவட்ட வன அலுவலர் ஒருங்கிணைப்பாளராக இருப்பதோடு, காலநிலை மாற்ற அலுவலராகவும் செயல்படுவார். மேற்கூறிய திட்டத்திற்காக தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மேலாண்மை முகமையால் ரூ. 3.80 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

> மீண்டும் "மஞ்சப்பை" எக்ஸ்பிரஸ்

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழியின் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழக முதல்வர் தொடங்கி வைத்த மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை மேலும் வலுப்படுத்தி, அடிமட்ட அளவுக்கு கொண்டு செல்வதற்காக 'மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி' என்ற திட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய நிதியிலிருந்து ரூபாய் 13 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

இந்த மீண்டும் மஞ்சப்பை' எக்ஸ்பிரஸ் ரயில் நடமாடும் கண்காட்சியில், நெகிழிப் பொருட்களுக்கு மாற்றான சூழலியல் மாற்றுப் பொருட்கள் பற்றிய தகவல்கள் மற்றும் செய்தியை பரப்ப இணைய வழி மூலம் கண்காட்சிப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளுக்காக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். இந்த சிறப்பு ரயில் கண்காட்சியானது இந்திய தொடர் வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகத்துடன் (IRCTC) இணைந்து தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும். பள்ளிமற்றும் கல்லூரி மாணவர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இந்தக் கண்காட்சி உபயோகமானதாக அமையும்.

> தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் பசுமை மதிப்பீடு செய்தல்.

இந்தியாவில் தமிழகம் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக உருவெடுத்துள்ளது. பசுமை மதிப்பீடு மூலம் தொழில் துறைகளில் சுற்றுச்சூழல் நிலைத் தன்மையை மதிப்பிடுவதன் மூலமாக தொழில்துறை செயல்பாடுகளை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தொழிற்சாலைகள் சிறந்த பசுமை இலக்குகளை அடைவதற்காக, ஒரு குறியீட்டு அடிப்படையிலான மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.

இதற்காக தமிழக அரசு, தொழில் துறைமற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து ஒரு குறியீட்டு வழிமுறையை உருவாக்கும். தேசிய மற்றும் சர்வதேச நடைமுறைகளை ஆய்வு செய்து தொழிலகங்களுடன் விரிவான ஆலோசனையை மேற்கொண்ட பிறகு, இதற்கான செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். தூய்மையான தொழில்நுட்பங்களை பயன்படுத்த விரும்பும் தொழிற்சாலைகளை ஊக்கப்படுத்துவதும் மற்றும் பசுமை மேம்பாட்டிற்கான நெறிமுறைகளை உருவாக்குவதும் இந்த பசுமைக் குறியீட்டின் நோக்கமாகும்.

இத்திட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய நிதியிலிருந்து ரூபாய் 2.5 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

> புதிய மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களை ஒரகடம் மற்றும் நாகப்பட்டினத்தில் உருவாக்குதல்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய நடவடிக்கைகள் மற்றும் செயல் திறனை மேலும் மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் எழும் புதிய நெருக்கடிகளை எதிர்கொள்ள தயாராகவும், அனைத்து வசதிகளுடன் கூடிய இரண்டு புதிய ஆய்வகங்கள் ஒரகடம் மற்றும் நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய நிதியிலிருந்து ரூபாய் 6 கோடி செலவில் உருவாக்கப்படும்.

> கோயம்பேடு சந்தை வளாகத்தை கரிம மாசு இல்லாத வளாகமாக உருவாக்குதல்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை வளாகங்களின் ஒன்றான கோயம்பேடு மொத்த சந்தை வளாகத்தை கரிம மாசு இல்லாத வளாகமாக உருவாக்குவதற்காக தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இவ்வளாகமானது 295 ஏக்கரில் பரந்து விரிந்து காய்கறிகள், பழங்கள், மலர்கள் மற்றும் உணவு தானியங்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் 3900 கடைகளைக் கொண்டுள்ளது.

இவ்வளாகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துதல், பசுமைப் பகுதிகளை உருவாக்குதல், நிலைத்தகு உபகரணங்களை உருவாக்குதல், கார்பன் அளவை குறைப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கான சாத்திய கூறுகளை அரசு ஆய்வு செய்து அந்த சந்தை வளாகத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளிலும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை கொண்டு வருவதை உறுதி செய்யும்.

இத்திட்டத்தை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவை இணைந்து ரூ. 25 கோடி செலவில் செயல்படுத்தும்.

> பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்குதல்.

தமிழகத்தில் நெகிழி இல்லா வளாகங்களை உருவாக்கும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களை ஊக்குவிக்க தமிழக அரசு மஞ்சப்பை விருதுகளை வழங்க முடிவு செய்துள்ளது. வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுக்குட்பட்டு 3 கல்லூரிகள், 3 பள்ளிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்கள் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாவது பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.54 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்