முகக்கவசம் அணிவதையும், தகுதியுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைவரும் முகக்கவசம் அணிவதையும், தகுதியான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதையும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்திட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

வட மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஏப்.25) அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். காணொலிக் காட்சி வாயிலாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியது: "ஒமிக்ரான் வைரஸால் தொற்று எண்ணிக்கை உயர்ந்தபோதும் கூட உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயரவில்லை என்பது சற்று ஆறுதல் அளித்துக் கொண்டிருக்கிறது.

இருந்தாலும் நாம் அனைவரும் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள். நான் ஏற்கெனவே பலமுறை அறிவுறுத்தியிருப்பதன் அடிப்படையில், இந்தப் பெருந்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்திட நம் வசமிருக்கும் மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசியே ஆகும்.

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் சிலருக்கு தொற்று ஏற்பட்டாலும்கூட உயிரிழப்பு ஏற்படுவது மிகமிகக் குறைவு. எனவே தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்வதே நமது தலையாய கடமையாக இருந்திட வேண்டும்.

நமது மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்தபோதிலும், இன்னும் நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, நமது சாதனை சற்றுக் குறைவாகத்தான் அமைந்திருக்கிறது. இன்னும் குறிப்பிட்டுச் சொன்னால், 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், 1.48 கோடி பேர் உள்ளனர்.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியிருந்தும், அதனை செலுத்திக்கொள்ளாதவர்கள் 11.6 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இனிவரும் வாரங்களில் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்வதே, நம் முன் இருக்கக்கூடிய ஒரு சவாலாக அமைந்திருக்கிறது. அனைவரும் முகக்கவசம் அணிவதை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்திட வேண்டும்" என்று அவர் கூறினார்.

நாளை மறுநாள் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமருடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ள நிலையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் மருத்துவத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE