'பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்கிய பிறகே அடுத்த முறை மக்களை சந்திப்போம்': அமித் ஷா

By அ.முன்னடியான்

புதுச்சேரி: ''பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்கிய பிறகே அடுத்த முறை மக்களை சந்திப்போம்'' என்று புதுச்சேரி வருகை தந்த அமித்ஷா தெரிவித்தார்.

புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் தொடக்க விழா இன்று (ஏப். 24) நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனி ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய் ஜெ சரவணன்குமார் மற்றும் எம்எல்ஏக்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்துகொண்டு அமித் ஷா பேசுகையில், ''புதுச்சேரி பல ஆன்மிகப் பெரியோர்கள், தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும். குறிப்பாக, தமிழ்க்கவிஞரான தேசியக்கவி பாரதியார், மகான் அரவிந்தர் வாழ்ந்த கர்ம பூமியாகும். தேசப்பணியாற்ற வ.வே.சு அய்யர், வ.ராமசாமி(வ.ரா), பாரதிதாசன் ஆகிய சுதந்திரப் போராட்டத் தியாகிகளை இந்த பூமி வழங்கியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இன்று காலை விமான நிலையத்தில் முதல்வர் ரங்கசாமி, புதுவை துணைநிலை ஆளுநர் வரவேற்பு.

புதுச்சேரி மக்களின் தீர்ப்பின் மூலம் முதல்வர் ரங்கசாமி தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சிறப்பாக நடைபெறுகிறது. புதுச்சேரி மாநிலம் சிறந்த மாநிலமாக வளர்ச்சி பெற அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். பிரதமர் மோடி வாக்குறுதியளித்தைப் போல், பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்கிய பின்னரே, அடுத்த முறை மக்களை சந்திப்போம்.

இன்றைய விழாவில் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தை புதுமை மற்றும் புதிய மாடலான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பல திட்டங்களை, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடங்கியதிலிருந்தே செயல்படுத்தி வருகிறது. புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மூலம் புதுச்சேரியில் 90-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கான தொகை, 6 லட்சம் பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.

திறந்தவெளி கழிப்பிடமில்லாத பகுதியாக புதுச்சேரி உள்ளது. அனைவருக்கும் கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் 99 சதவீதம் பிரசவங்கள் நடக்கின்றன. புதுச்சேரியில் 26 மெகா வாட் திறனில் சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்த உள்ளது. புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஊழல் தான் நடைபெற்றது.

தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது, புதுச்சேரியில் ஏழைகளே இல்லை என்ற பொய்ப் பிரசாரம் தான் செய்தனர். பிரதமர் மோடி வாக்குறுதியளித்தபடி, பெஸ்ட் புதுச்சேரியை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தலைமையில் நிறைவோற்றுவோம் என்று மீண்டும் உறுதியளிக்கிறேன்'' என்றார்.

முதல்வர் ரங்கசாமி பேச்சு: ''இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு புதுச்சேரி மாநிலம் எந்தெந்த நிலையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்று நாம் எண்ணி பார்க்க வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் செய்ய முடியாத, செய்து முடிக்க முடியாத அனைத்து திட்டங்களையும் நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய அரசு நமக்கு ஒதுக்கி கொடுத்த நிதி கடந்த ஆட்சியில் செலவு செய்யப்படவில்லை. நம்முடைய அரசு பொறுப்பேற்ற பிறகு ரூ.600 கோடிக்கு மேலான திட்டங்களை உள்துறை அமைச்சர் மூலம் இப்போது தொடங்கியுள்ளோம்.

இப்போது மத்திய அரசு ஒத்துழைப்போடு எத்தனையோ திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தேர்தலில் வாக்குறுதி கொடுத்திருந்தோம். இப்போது 390 காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், பல துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. எங்களுடைய அரசானது 10 ஆயிரம் அரசு பணியிடங்களை நிச்சயமாக நிறைவேற்றும். அதேபோல், புதுச்சேரிக்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுத்து கொண்டிருக்கிறது. மேலும் நிதி வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். அதையும் நிச்சயமாக பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

இப்போது பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் ரூ.150 லட்சத்துடன், காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தின் ரூ.2 லட்சத்தையும் இணைத்து ரூ.3.50 லட்சமாக வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மக்கள் வீடு கட்ட ரூ.5.50 லட்சம் வழங்கப்படுகிறது. நம்முடைய அரசு அறிவித்தபடி பிள்ளைகளுக்கு உயர்கல்வி வரை இலவச கல்வியை கொடுத்து கொண்டிருக்கிறது. மேலும், மத்திய அரசிடமிருந்து நிதியை பெற்று புதுச்சேரியை சிறந்த மாநிலமாக கொண்டு வருவோம். புதுச்சேரி மாநில அந்தஸ்து நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அதையும் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிச்சயமாக மத்திய அரசு நமக்கு மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

பிரதமர் அறிவித்தப்படி பெஸ்ட் புதுச்சேரியை இந்த அரசு நிறைவேற்றும். மத்திய அரசு நமக்கு கூடுதலாக நிதியை வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். பிரதமரும், உள்துறை அமைச்சரும் நமக்கு கூடுதல் நிதி வழங்க ஆவண செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சுற்றுலாவை மேம்படுத்தி நம்முடைய வருவாயை உயர்த்துவதிலும் அரசு கவனம் செலுத்தும். உள்துறை அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை அரசு விரைவாக செய்து முடிக்கும்.'' இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

நிகழ்ச்சியின் நிறைவில் கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுப்பிக்கப்பட்ட கட்சி அலுவலகத்துக்கான கல்வெட்டு மற்றும் அங்கு நிறுவப்பட்டுள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா சிலையை திறந்து வைத்தார். மேலும் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அதனையடுத்து அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரி விமானம் நிலையம் சென்று, சென்னை புறப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்