சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக, அதாவது மூன்று விழுக்காடு உயர்த்தி வழங்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாள்ர ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் உன்னதமான பணியினை மேற்கொள்ளும் தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வை வழங்க வழிவகை செய்த இயக்கம் அதிமுக என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால், இன்று அதை உரிய நேரத்தில் பெற படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அரசு ஊழியர்கள்.
2020-ம் ஆண்டு கரோனா தொற்றுப் பரவல் தொடங்கியதையடுத்து இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாயில் மிகுந்த சரிவு ஏற்பட்டதையடுத்து, 01-01-2020 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்ததோடு, இந்த அகவிலைப்படி உயர்வை வழங்குவது குறித்து 01-07-2021-க்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்றும், அவ்வாறு முடிவு எடுக்கும்போது 01-01-2020 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் பணப் பயன் 01-07-2021 முதல் அளிக்கப்படும் என்றும் அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழக அரசும் இதனை நடைமுறைப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தபடி தனது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மறுபரிசீலனை செய்து 01-01-2020 முதல் 21 விழுக்காடு, 01-07-2020 முதல் 25 விழுக்காடு, 01-01-2021 முதல் 28 விழுக்காடு, 01-07-2021 முதல் 31 விழுக்காடு என உயர்த்தி, அதன் பணப் பயனை 01-07-2021 முதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து 01-01-2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 34 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ளது.
அதே சமயத்தில், தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் காரணமாக, தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 17 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாக 01-01-2022 முதல் தான் ரொக்கமாக வழங்கப்படுகிறது. அதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு 01-07-2021 முதல் வழங்கப்பட்ட 31 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு ஊழியர்களுக்கு 01-01-2022 முதல் வழங்கப்பட்டது. ஆறு மாத காலம் தாமதமாக வழங்கப்பட்டது.
தற்போது 01-01-2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி மத்திய அரசு 31-03-2022 அன்றே அறிவித்துவிட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு 24 நாட்கள் கடந்துள்ள நிலையில், தமிழக அரசு ஊழியர் சங்கங்கள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டுமென்று ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அகவிலைப்படிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. இந்த விஷயத்தில் அரசு மவுனமாக இருப்பதைப் பார்க்கும்போது, சென்ற முறை ஆறு மாதம் காலந்தாழ்த்தியதைப் போல் இந்த முறையும் அரசு தாமதப்படுத்துமோ என்ற சந்தேகம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.
கரோனா தொற்று ஓரளவு குறைந்து, அரசின் வருமானமும் அதிகரித்துள்ள நிலையில், 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை ஒப்புவித்து பணமாக்கும் முறையும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ளது போல், அகவிலைப்படி உயர்வையாவது 01-01-2022 முதல் 34 விழுக்காடாக உயர்த்தி, அதாவது மூன்று விழுக்காடு உயர்த்தி நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே,தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 01-01-2022 முதல் 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக, அதாவது மூன்று விழுக்காடு உயர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago