சென்னை: அரசின் பல்வேறு திட்டங்களை கிராமஅளவில் ஒருங்கிணைத்து செயல்படுத்த முதல்கட்டமாக இந்த ஆண்டு600 ஊராட்சிகளில் ‘கிராம செயலகங்கள்’ கட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆண்டுக்கு 6 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும், நவ.1-ம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று பேரவை விதி 110-ன் கீழ் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தினத்தை உள்ளாட்சிகள் தினம் என கொண்டாட வேண்டும் என்று நான் துணை முதல்வராக இருந்தபோது முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 2007 நவ.1-ம் தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடப்பட்டது. இறுதியாக 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் கொண்டாடப்பட்டு, அதன்பிறகு அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது.
கிராமப்புற மக்களிடையே திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கவும் மக்கள் இயக்கமாக மீண்டும் நவ.1-ம் தேதி‘உள்ளாட்சிகள் தினமாக’ கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். அந்த வகையில் ஜன.26 குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம்,ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்.2காந்தி பிறந்த தினம் ஆகிய நாட்களுடன் இனி வரும் காலங்களில் கூடுதலாக மார்ச் 22 - உலக தண்ணீர் தினம், நவ.1 - உள்ளாட்சிகள் தினம் ஆகிய நாட்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும்.
மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகளுக்கு கூட்டங்களில் கலந்துகொள்ளும் நாட்களில் அமர்வுப் படி தொகை 10 மடங்காகவும், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு 5 மடங்காகவும் உயர்த்தி வழங்கப்படும். இதனால் தமிழகத்தில் 1.19 லட்சம் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பயன்பெறுவார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு ‘உத்தமர் காந்தி கிராமஊராட்சி’ என்ற விருது வழங்கப்பட்டது. 10 முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்புடைய ஊராட்சித் தலைவர்களுக்கு நற்சான்றிதழ், கேடயம், ரொக்கத் தொகை வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. மீண்டும் இந்த ஆண்டு முதல் ‘உத்தமர் காந்தி கிராம ஊராட்சி’ விருது வழங்கப்படும். மாவட்டத்துக்கு ஒன்றுவீதம் சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் வீதம் வழங்கப்படும்.
அரசின் பல்வேறு திட்டங்களை கிராம அளவில் ஒருங்கிணைத்து செயல்படுத்த, முதல்கட்டமாக 600ஊராட்சிகளில் தலா ரூ.40 லட்சத்தில் ‘கிராம செயலகங்கள்’ இந்த ஆண்டேகட்டப்படும். இதில், ஊராட்சித் தலைவருக்கான அறை, அனைத்து துறை கூட்ட அரங்கம், கிராம நிர்வாக அலுவலருக்கான அறை, கிராம ஊராட்சி செயலருக்கான அறை, இணையதள வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பை அமைச்சர் பெரியகருப்பன், உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினார்நாகேந்திரன் (பாஜக), சிந்தனைச் செல்வன் (விசிக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), ராமச்சந்திரன் (இந்திய கம்யூ), சதன் திருமலைக்குமார் (மதிமுக), அப்துல் சமது (மமக),ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக) வரவேற்றுப் பேசினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago