சென்னை: தமிழகத்தின் 4 மண்டங்களில் தலா ஒன்று வீதம் நான்கு ஓலிம்பிக் அகாடமிகள் (Olympic Academies) அமைக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் இன்று மாற்றுத்திறனாளிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர் கீதா ஜீவன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அப்போது, விதி 110-ன்கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு பேசுகையில், "மனித சக்தி என்பது உடல் வலிமையும், உள்ளத்தின் வலிமையும் இணைந்தது. இரண்டு ஆற்றலும் ஒருசேர இருக்கும் மனிதர்களால்தான் அனைத்துத் துறைகளிலும் வெற்றியாளர்களாக மாற முடியும். அந்த வகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் சார்பிலான அறிவிப்புகளை இந்த மாமன்றத்திற்குத் தெரிவிக்க நான் விரும்புகிறேன்.
ஒரு சமுதாயத்தின் வலிமை, அச்சமுதாய மக்களுடைய மனரீதியான நலத்தையும், உடல்ரீதியான வலிமையையும் பொறுத்துள்ளது. அறிவு சக்தியைப் போன்றே, உடல் வலிமையும் ஒரு சொத்து. அத்தகைய உடல் வலிமையை அடைவதற்குப் பல்வேறு பயிற்சிகள் இருந்தாலும், விளையாட்டு என்பது அதில் மிகமிக முக்கியமானது. விளையாட்டு என்பது உடலினை உறுதி செய்கிறது; உடலினைத் துடிப்போடு வைத்திருக்கிறது; மனதுக்கும் புத்துணர்ச்சியைத் தருகிறது. அதேபோல், நேர்மையையும், ஒழுக்கத்தையும் கற்றுத் தருகிறது; வெற்றியோ, தோல்வியோ இரண்டும் ஒன்றுதான் என்ற மனப்பக்குவத்தையும் விளையாட்டு உருவாக்குகிறது; குழுவாக இணைந்து செயல்பட வேண்டுமென்ற கூட்டு மனப்பான்மையை உருவாக்குகிறது.
» சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பொல்லார்ட் அறிவிப்பு | கிரிக்கெட் வீரர்களின் ரியாக்ஷன்
அந்த வகையில், தமிழக அரசால் அண்மைக்காலமாக விளையாட்டுத் துறைக்கு ஏராளமான திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை மாணவர்களும், இளைஞர்களும் சீரிய முறையில் ஒருங்கிணைந்து பயன்படுத்திக் கொண்டால், தமிழகத்தின் இளைய ஆற்றல் எழுச்சி பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தமிழகம் பல ஆண்டுகளாக குழுப் போட்டிகளிலும், தனித் திறன் போட்டிகளிலும் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் முன்னிலை வகித்து வருகிறது. அரசால் ஏற்படுத்தப்பட்ட விளையாட்டுக் கட்டமைப்பு, பயிற்சி வசதிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படக்கூடிய உயரிய ஊக்கத் தொகை ஆகியவைதான் அதன் அடிப்படைக் காரணங்கள்.
பன்னாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அதிக பதக்கங்கள் வெல்வதை ஊக்குவிக்கக்கூடிய வகையில், தமிழக அரசு ரூபாய் 3 கோடி முதல் பல்வேறு வகையான ஊக்க உதவித் தொகைகளைத் தொடர்ந்து வழங்கி, இளைஞர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சர்வதேச அளவிலான வாகையர் (Championship) போட்டிகளில் வெற்றி வாகை சூட ஏதுவாக, பல்வேறு விளையாட்டுகளுக்காக உலகத் தரத்திலான விளையாட்டுக் கட்டமைப்புகளை ஏற்படுத்த சென்னைக்கு அருகில் பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் (Mega Sports City) அமைக்க அனைத்துவிதமான நடவடிக்கைளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், தமிழகத்தைச் சார்ந்த வீரர்கள் சர்வதேச தரத்திலான பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றி வாகை சூடுவார்கள்.
ஓலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்த தமிழகத்தின் 4 மண்டங்களில் தலா ஒன்று வீதம் நான்கு ஓலிம்பிக் அகாடமிகள் (Olympic Academies) அமைக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் விளையாட்டுப் பயிற்சிகள், அதற்கான வசதிகள் ஏற்படுத்த நினைக்கிறோம். அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும், தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்பட உள்ளன. இதன்மூலம், ஏழை எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சார்ந்த கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வாழக்கூடிய இளைஞர்கள் பலன் பெற வழிவகை செய்யப்பட உள்ளது.
தமிழக விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு வழிகாட்ட ஒரு முயற்சியைத் தொடங்கவிருக்கிறோம். "ஒலிம்பிக் தங்கம் தேடுதல் (Olympic Gold Quest)" என்ற திட்டம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
வட சென்னை பகுதியானது பல்வேறு விளையாட்டுத் திறமையாளர்களை ஊக்குவிப்பதில் புகழ் பெற்று விளங்கி வருகிறது. அப்பகுதியில் உள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தி மேம்படுத்தக்கூடிய நோக்கில், வட சென்னை பகுதியில் நவீன தொழில்நுட்பங்களோடு கூடிய நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.
இங்கு கையுந்துப்பந்து (Volleyball), இறகுப்பந்து (Badminton), கூடைப்பந்து (Basket ball), குத்துச்சண்டை (Boxing), கபாடி (Kabaddi) மற்றும் இதர உள்ளரங்க விளையாட்டுகளுக்கான வசதிகளோடு (Indoor Games) நவீன உடற்பயிற்சிக் கூடம் (Modern Gym) அமைக்கப்பட உள்ளது.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென்றே தனியாக பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்பட உள்ளது. தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்தியத் தற்காப்புக் கலைகளில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய சிலம்பம் விளையாட்டினை ஊக்கப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. சிலம்ப வீரர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்புகளில் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்த முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தமிழகத்தில் விளையாட்டைச் சார்ந்த பொருளாதாரம் உருவாகவும், அதனை மேம்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை ஓபன் ATP டென்னிஸ் தொடரை மீண்டும் நடத்தவும், Beach Olympics எனப்படும் கடற்கரை ஒலிம்பிக்ஸ் தொடரை நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டுப் போட்டிகள் நடத்துவதன்மூலம் விளையாட்டுத் துறையில் புதிய முதலீடுகளும் தொழில் வளர்ச்சியும் ஏற்படும். இதனையொட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து, தமிழகத்தில் சுற்றுலாத் துறை வளர்ச்சியடைவும் வாய்ப்புகள் ஏற்படும்.
சதுரங்க விளையாட்டில் (Chess) இந்தியாவின் தலைநகராக விளங்கக்கூடிய வகையில் எப்போதுமே தமிழ்நாடு பல்வேறு கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கியிருக்கிறது. அந்த வகையில் உலக அளவில் சிறந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு கிராண்ட் மாஸ்டர்களைத் தமிழகம் தொடர்ந்து உருவாக்கி வருகிறது.
இந்தியாவில் விளையாட்டு உலகின் மணிமகுடமாக விளங்கக்கூடிய 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28-7-2022 முதல் 10-8-2022 வரை தமிழகத்தில் உலகமே வியக்கக்கூடிய வகையில் பிரம்மாண்டமாகத் தமிழக அரசால் நடத்தப்பட உள்ளது. 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் உலகில் உள்ள 180 நாடுகளைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் அதிலே பங்குபெறவிருக்கிறார்கள். 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்கு இன்றே ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு, அந்தப் பணிகளும் சிறப்பாகச் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக விளையாட்டுத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக வளர்ந்து சிறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அனைத்துத் துறைகளும் ஒரு சேர வளர வேண்டுமென்ற எனது எண்ணத்தின் வடிவமாக இத்தகைய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. தமிழகத்தின் இளைய சக்தியை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்த தமிழக அரசு எப்போதும் முனைப்புடன் செயல்படும் என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago