சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விவகாரம் தொடர்பாக சென்னை தியாகராயநகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் தனிப்படை போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
தனிப்படை வருகை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விவகாரம் தொடர்பாக சென்னை தியாகராயநகரில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை வந்துள்ளது. இந்தத் தனிப்படையில் நீலகிரி எஸ்.பி. ஆஷிஷ் ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சந்திரசேகரன் மற்றும் பெண் போலீஸார் ஆகியோர் வந்துள்ளனர்.
விசாரணை தொடங்கியது: ஏற்கெனவே இந்த வழக்கில் தொடர்புடைய 217 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது சசிகலாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு எஸ்டேட்டில் காணாமல் போன நிலப்பத்திரங்கள் சென்னை ஹோட்டலில் கிடைத்தது குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
விசாரணைக்கு ஒத்துழைப்பு: இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும் சசிகலாவிடம் நடத்தப்படும் விசாரணை வீடியோவில் பதிவு செய்யப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு பின்னணி: முன்னதாக, நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்.24-ல் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ராய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை நீலகிரி மாவட்ட போலீஸார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், கோடநாடு வழக்கு விவகாரம் தொடர்பான விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் நீலகிரி மாவட்ட போலீஸார் அடங்கிய தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டன.
இதற்கிடையே, கோடநாடு வழக்கு தொடர்பாக உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினரும், தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான விவேக் ஜெயராமன், கோவையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அவரது மகன், உறவினர் மகன், நேர்முக உதவியாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். மேலும், இவ்வழக்கில் முன்னரே கைது செய்யப்பட்ட நபர்களிடமும் விசாரணை நடத்தினர். இதுவரை கோடநாடு வழக்கு தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், கோடநாடு வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற சசிகலாவிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்தனர். கோடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர்களில் ஒருவர் சசிகலா என்பதால், எஸ்டேட் வளாகத்துக்குள் உள்ள பொருட்கள் குறித்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட சிலருக்கே தெரியும். எனவே, கோடநாடு எஸ்டேட் வளாகத்துக்குள் என்னென்ன பொருட்கள் இருந்தன? அதில் இருந்து கொள்ளை சம்பவத்துக்கு பிறகு காணாமல் போன பொருட்கள் என்னென்ன என்பன குறித்து சசிகலாவிடம் விசாரித்து தகவல்களைப் பெற போலீஸார் திட்டமிட்டு தனிப்படை போலீஸார் இன்று (21-ம் தேதி) விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு சம்மன் அனுப்பியிருந்தனர்.
அதன்படி தற்போது சசிகலாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago