அண்ணாமலையோடு விவாதம் செய்ய ஒரு சப் ஜூனியரை அனுப்பி வைக்கிறோம்: திருமாவளவன்

By வீ.தமிழன்பன்

காரைக்கால்: "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோடு விவாதம் செய்ய அவரைப் போலவே ஒரு சப் ஜூனியரை அனுப்பி வைக்கிறோம்" என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

காரைக்காலில் இன்று மாலை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டதாகவும், ஆளுநரைத் தாக்க முயற்சித்ததாகவும் பாஜகவினர் மீண்டும் மீண்டும் வதந்தியை பரப்பி, பதற்றத்தை ஏற்படுத்தி தமிழகத்தை வன்முறைக் காடாக மாற்ற முயற்சிக்கின்றனர். இதனை அவர்கள் கைவிட வேண்டும். இத்தகைய போக்கு ஆபத்தானது.

அம்பேத்கரும், பெரியாரும் கூட விமர்சனத்துக்குரியவர்கள் என்கிறபோது மோடி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. தேர்தல் நேரங்களில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் அவர் இதுவரை நிறைவேற்றியதில்லை. இந்த நிலையில் அவரை அரசியல் ரீதியாக விமர்சிப்பது எந்த வகையில் குற்றம் என்பது விளங்கவில்லை. தமிழகத்தை குறிவைத்து இதை தொடர் உரையாடலாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இது ஆரோக்கியமானது அல்ல.

விளையாட்டுப் போட்டியில் கூட சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் என்று பிரிவுகள் உண்டு. அரசியலில் அண்ணாமலை ஒரு சப் ஜூனியர். அவரோடு விவாதிக்க அவரைப் போலவே ஒரு சப் ஜூனியரை வேண்டுமானால் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து அனுப்பி வைக்கிறோம்.

மோடியை இளையராஜா பாரட்டுவது அவரின் சுதந்திரம். ஆனால், நேர் எதிர் கொள்கையுடைய மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது முரணானது, தீங்கானது. அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் பாஜகவினர் செயலாற்றி வருகின்றனர். அவரது பெயரை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகிறார்கள். புதிய அரசியலமைப்பு சட்டத்தை எழுத பாஜகவினர் துடிக்கிறார்கள்.

புதுச்சேரியில் சூழ்ச்சி செய்து குறுக்கு வழியில் பாஜக ஆட்சியை கைப்பற்ற துடிப்பதாகத் தெரிகிறது. தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE