கரைகிறதா மதுரை மாநகர அதிமுக? - செல்லூர் ராஜூ மீதான அதிருப்தியால் மாற்றுக் கட்சிகளுக்கு தாவும் நிர்வாகிகள்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகரில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் செயல்பாடு பிடிக்காமல் மாநகர நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர்கள் ஒருவர் பின் ஒருவராக மாற்று கட்சிகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

அதிமுகவில் கடந்த 10 ஆண்டு அமைச்சரவையில் துறை மாற்றப்படாமல் தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் செல்லூர் கே.ராஜூ. ஜெயலலிதா இருந்தவரை அமைச்சராக, மாநகர செயலாளராக அதிமுகவில் செல்வாக்குடன் இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு மதுரை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார், முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா கட்சித் தலைமைக்கு நெருக்கமாகி அவர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். கடந்த சட்டமன்ற தேர்தலில் மாநகரில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் அவர் போட்டியிட்ட மதுரை மேற்கு தவிர மற்ற தொகுதிகளில் இவரது பரிந்துரைக்கு கட்சித் தலைமை செவி சாய்க்கவில்லை.

ஆனால், புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்பி.உதயகுமார் பரிந்துரை செய்த சரவணன் தெற்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிருப்தியடைந்த செல்லூர் கே.ராஜூவின் தீவிர ஆதரவாளரான முன்னாள் எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளரான கிரம்மர் சுரேஷ், அதிமுகவில் இருந்து விலகி சுயேச்சையாக மத்திய தொகுதியில் போட்டியிட்டார். அவர் தோல்வியடைந்தார். தற்போது அதிமுகவில் இருந்து அவர் விலகி நிற்கிறார். மாநகர சட்டமன்ற தொகுதிகளில் 4 தொகுதிகளில் செல்லூர் போட்டியிட்ட மேற்கு தவிர மற்ற தொகுதிகளில் அதிமுக தோல்வியடைந்தது. அதனால், சமீபத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் செல்லூர் கே.ராஜூ கட்டுப்பாட்டில் இருந்த 72 வார்டுகளுக்கு அவரையே வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை கட்சித்தலைமை வழங்கியது.

செல்லூர் கே.ராஜூ கைகாட்டிய நபர்களுக்கே கட்சித் தலைமையும் 'சீட்' வழங்கியது. மீதி 28 வார்டுகளில் முன்னாள் மேயரும், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான ராஜன் செல்லப்பாவுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டது. செல்லூர் ராஜூ வெற்றி வாய்ப்புள்ள முன்னாள் கவுன்சிலர்கள் பலருக்கு 'சீட்' வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 'சீட்' மறுக்கப்பட்ட முன்னாள் கவுன்சிலர் கண்ணகி பாஸ்கர் சுயேச்சை போட்டியிட்டார். அதுபோல், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜா சீனிவாசன், லட்சுமி ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து அக்கட்சி சார்பில் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டனர். பலர் 'சீட்' மறுக்கப்பட்டாலும் மாற்றுக்கட்சிகளுக்கு செல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபடவில்லை. சிலர் உறவினர்களை போட்டி வேட்பாளர்களாக நிறுத்தினர். அதனால், அதிமுகவின் உள்கட்சிப் பூசலால் மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்ட வார்டுகளில் கூட அதிமுகவால் முழுமையான வெற்றிப்பெற முடியவில்லை. வெறும் 15 வார்டுகளில் மட்டுமே அதிமுக வெற்றிப்பெற்றது.

இந்நிலையில் அதிமுக வடக்கு 2ம் பகுதி கழக செயலாளரும், இரண்டு முறை முன்னாள் மண்டல தலைவராக இருந்த கே.ஜெயவேல் திடீரென்று பாஜகவில் சேர்ந்தார். அவருடன் ஆதரவாளர்கள் பலர் பாஜகவில் சேர்ந்தனர். அவர், இன்னும் பலர் ஒரிரு வாரத்தில் பாஜகவில் சேர உள்ளதாக கூறியுள்ளார். தொடர்ந்து அதிமுகவில் செல்லூர் ராஜூவின் நடவடிக்கை பிடிக்காமல் மாநகர நிர்வாகிகள் மாற்றுக்கட்சிகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

இதுகுறித்து அதிருப்தி நிர்வாகிகள் கூறுகையில், ''செல்லூர் ராஜூ தன்னை சுற்றியுள்ள செயல்படாத. களத்தில் நேரடியாக வந்து பணியாற்றாத நிர்வாகிகள் சொல்வதை கேட்டு செயல்படுகிறார். அவர்கள், அவர் நிகழ்ச்சிகளுக்கு வந்து புகைப்படத்திற்கு மட்டுமே போஸ் கொடுத்து செல்கின்றனர். பகுதி கழக செயலாளர்கள், இன்னாள், முன்னாள் கவுன்சிலர்கள், இளைஞர்கள் பேச்சை அவர்கள் காது கொடுத்து கேட்பதில்லை. தன்னுடன் இருக்கும் அடுத்த தலைமுறை இளம் நிர்வாகிகளை கூட அவர் வளர்த்துவிடுவதில்லை. அதனாலே, முன்னாள் எம்எல்ஏ சரவணன், முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் போன்றோர் மாநகர கட்சி நிகழ்ச்சிகளுக்கு கூட வருவதில்லை.

ஜெயலலிதா காலத்தில் மாவட்டச் செயலாளர்கள் சிறப்பாக செயல்படாதபட்சத்தில் அவர்கள் இடத்திற்கு யாரும் வரலாம் என்ற நிலை இருந்தது. அதனால், இளம் நிர்வாகிகள் ஒருவித எதிர்பார்ப்பிலே கட்சிப்பணியாற்றினர். தற்போது திமுகவை போல் அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள், குறுநில மன்னர்கள்போல் நிரந்தர மாவட்டச் செயலாளராக உள்ளனர். அவர்கள் பேச்சைதான் கட்சித் தலைமை கேட்கும் நிலை உள்ளது. அதனால், இளைஞர்கள் தற்போது முன்போல் அதிமுகவிற்கு வருவதில்லை. இருக்கும் இளம் நிர்வாகிகள் கூட தூக்கிவிட உற்சாகப்படுத்த ஆளில்லாமல் கட்சிப்பணியில் ஆர்வமில்லாமல் உள்ளனர். ஒரு முறை இதுபோல் கட்சியில் தேக்கநிலை ஏற்பட்டபோது கட்சியை உயிர்பிக்க ஜெயலலிதா இளம்பெண்கள், இளைஞர் பாசறையை உருவாக்கி ஏராளமானோரை நியமனம் செய்தார். அதுபோல், மதுரை மாநகர, புறநகர் பகுதிகளில் அதிமுகவை வளர்க்க இளம் நிர்வாகிகளை கட்சித் தலைமை ஊக்குவிக்க வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் ஏதேச்ச அதிகாரத்துடன் செயல்பாடமல் இருக்க கடிவாளம் போட வேண்டும்'' என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்